search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவிரி பாசன விவசாயி"

    • தேவையான உரங்கள் கூட தடையின்றி கிடைப்பதை தமிழக அரசால் உறுதி செய்ய முடியாதது கண்டிக்கத்தக்கது.
    • சில தனியார் கடைகளில் யூரியா உரம் கிடைத்தாலும் கூட, அவர்கள் 25% வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்கின்றனர்.

    காவிரி பாசன மாவட்டங்களில் உரத் தட்டுப்பாட்டால் உழவர்கள் பாதிக்கப்படுவதாகவும், தாராளமாக கிடைக்க நடவடிக்கை தேவை எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் மு.க.ஸ்ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நெற்பயிர்களுக்குத் தேவையான யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள் கிடைக்காமல் உழவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். நாட்டின் முதன்மைத் தொழிலான விவசாயத்திற்கு தேவையான உரங்கள் கூட தடையின்றி கிடைப்பதை தமிழக அரசால் உறுதி செய்ய முடியாதது கண்டிக்கத்தக்கது.

    தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் 12 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான நிலப்பரப்பில் சம்பா பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. முன்கூட்டியே நடவு செய்யப்பட்ட பயிர்கள் குருத்து வெடிக்கும் நிலையில் உள்ளன. தாமதமாக நடவு செய்யப்பட்ட பயிர்கள் இப்போது தான் செழித்து வளரத் தொடங்குகின்றன. இரு நிலையில் உள்ள பயிர்களுக்கும் யூரியாவும், பொட்டாஷும் பெருமளவில் தேவை. ஆனால், காவிரி பாசன மாவட்டங்களில் தனியார் கடைகளில் மட்டுமின்றி, கூட்டுறவு சங்கங்களில் கூட அந்த உரங்கள் கிடைக்கவில்லை.

    சில தனியார் கடைகளில் யூரியா உரம் கிடைத்தாலும் கூட, அவர்கள் 25% வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்கின்றனர். அதைக் கட்டுப்படுத்தவோ, பிற பொருட்களை வாங்க வேண்டும் என்று கட்டுப்படுத்தாமல் அதிகபட்ச சில்லறை விலைக்கு தனியார் கடைகளில் உரம் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்யவோ தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தமிழ்நாட்டில் உரத்திற்கு எந்த தட்டுப்பாடும் இல்லை, கூட்டுறவு சங்கங்களில் 32,755 டன் யூரியா, 13,373 டன் பொட்டாஷ், 16,792 டன் டி.ஏ.பி, 22,866 டன் காம்ப்ளெக்ஸ் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். அந்த உரங்கள் எல்லாம் எங்கிருக்கின்றன என்பது தெரியவில்லை. அமைச்சர் குறிப்பிடும் அளவுக்கு உரங்கள் இருப்பு இருந்தால் காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு நிலவுவது ஏன்? என்பதை அரசு விளக்க வேண்டும். காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி வெற்றிகரமாக அமைவதை உறுதி செய்ய தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • தண்ணீரை பெற்றுத் தர வேண்டிய கடமையை நிறைவேற்றுவதில் தமிழக அரசு பெரும் தோல்வி அடைந்துவிட்டது.
    • சேதமடைந்த குறுவைப் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த திருவாய்மூரில் 50 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்த குறுவை நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் எம்.கே.ராஜ்குமார் என்ற உழவர் உயிரிழந்திருக்கிறார். அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்கு தேவையான தண்ணீரை பெற்றுத் தர வேண்டிய கடமையை நிறைவேற்றுவதில் தமிழக அரசு பெரும் தோல்வி அடைந்துவிட்டது. அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். காவிரியில் வினாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதால் எந்த பயனும் ஏற்படாது; கருகும் பயிர்களைக் காக்க அந்த நீர் போதாது. பெரும்பான்மையான பயிர்கள் கருகிவிட்டதால் சேதமடைந்த குறுவை பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதன் மூலமாக மட்டுமே சிக்கலுக்கு தீர்வு காண முடியும். எனவே, சேதமடைந்த குறுவைப் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×