என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீ கிருஷ்ணர்"

    • இந்துக்களின் வேதமாக பகவத் கீதை திகழ்கின்றது.
    • பாரதப் போரில் அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக வந்து பஞ்ச பாண்டவர்களைக் காத்தார்.

    ஸ்ரீகிருஷ்ணர் இப்பூவுலகில் தனது அவதார நோக்கத்துக்காகப் பல அற்புதங்களை புரிந்தார்.

    தேரோட்டிய சாரதி :

    பாரதப் போரில் அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக வந்து பஞ்ச பாண்டவர்களைக் காத்தார்.

    தனது விஸ்வரூப தரிசனத்தை அர்ஜுனனுக்குக் காட்டி அருளினார்.

    பகவத் கீதை :

    பாரதப் போரின் போதுதான் பகவத் கீதை குருஷேத்திரப் போர்க்களத்தில் பகவான் கிருஷ்ணரால் அர்ஜுனனுக்குப் போதிக்கப்பட்டது.

    இந்த கீதா தத்துவத்தை முற்காலத்திலேயே சூரிய தேவனுக்கு பகவான் உபதேசித்தார் என்ற விவரமும் பகவத் கீதையில் காணப்படுகிறது.

    பகவத் கீதையின் ஒரு குறிப்பிட்ட அம்சம் என்ன வென்றால், யோக முயற்சிகளினால் அடைய வேண்டிய பலன் என்னவென்பது ஒரு போர்க்களத்தின் நடுவே கற்பிக்கப்பட்டது.

    பகவத் கீதையில் கர்மயோகம், பக்தி யோகம், ஞான யோகம் என்ற மூன்று விதமான யோக முறைகள் விவரிக்கப்பட்டுள்ளன.

    இந்துக்களின் வேதமாக பகவத் கீதை திகழ்கின்றது.

    • தூப தீபம் ஏற்றி ஆராதனை செய்து கோவர்த்தனகிரியைப் பூஜித்தார்கள். பசுக்களையும் பூஜித்தனர்.
    • இடையர் அனைவருக்கும் பசுக்களுக்கும் கன்றுகளுக்கும் பாதுகாப்பு அளித்தார்.

    ஆயர்பாடியில் மழை வேண்டி ஆண்டு தோறும் இந்திரனுக்கு விழா எடுப்பது வழக்கம்.

    இதை அறிந்த கிருஷ்ணர், இந்திரனுக்கு விழா எடுப்பதைத் தடுத்து விட்டார்.

    அவர்களுக்கு வாழ்வளிக்கும் பசுக்களுக்கும் மலைகளுக்கும் விழா எடுக்க வேண்டியது அவசியம் என்றார்.

    எனவே, யாதவர்கள் கண்ணனின் ஆலோசனைப்படி கோவர்த்தன கிரியாகத்தைத் தொடங்கினர்.

    தூப தீபம் ஏற்றி ஆராதனை செய்து கோவர்த்தனகிரியைப் பூஜித்தார்கள். பசுக்களையும் பூஜித்தனர்.

    பின்பு, நன்றாக அலங்கரிக்கப்பட்ட பசுக்களும் கன்றுகளும் அந்த மலையை வலம் வந்தன.

    இவ்வாறு மலைக்கு ஆராதனை செய்தபோது, கிருஷ்ணன் ஒரு தேவரூபமாக அந்த கோவர்த்தன மலையின் சிகரத்தில் வீற்றிருந்து,

    யாதவர்கள் அருளிய நைவேத்தியங்களை எல்லாம் ஏற்று அமுது செய்தருளினார்.

    மலைச் சிகரத்தையும் அர்ச்சித்துப் பணிந்த பிறகு, யாதவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஆயர்பாடிக்கு திரும்பினர்.

    இவ்வாறு கிருஷ்ணர் இந்திரனுக்குச் செய்ய வேண்டிய யாகத்தைத் தடுத்து அவனை அவமானப்படுத்தியதால்,

    இந்திரன் கோபம் கொண்டு சர்வர்த்தகம் என்ற மேகக் கூட்டங்களை அழைத்து, 'கிருஷ்ணன் வசித்து வரும் இடைச்சேரியில்

    பெருமழை பெய்வித்து,

    மாடுகளை எல்லாம் அவிழ்த்து விடுங்கள்' என்று கட்டளையிட்டான்.

    இந்திரனின் கட்டளைக்கிணங்க மேகங்கள் யாவும் ஆயர்பாடி முற்றிலும் நாசமாகும்படி பெருங்காற்றுடன் பெருமழையையும் பெய்வித்தன.

    இதனால் பசுக்களும் கன்றுகளும் துன்பப்பட்டன.

    காற்றினாலும் கடுங்குளிரினாலும் நடுங்கின. தீனக்குரலில் கத்தின.

    பெருமழை காரணமாக கோகுலத்தில் உள்ள அனைவரும் துன்பப்படுவதைக் கண்ட ஸ்ரீகிருஷ்ணர்,

    'இந்த நிலைக்கு இந்திரனே காரணம். ஆதலால், கோகுலத்தைக் காப்பாற்றுவது அவசியம்' என்று கிரியையே பெயர்த்து எடுத்து, ஒரு குடையைப் போல் தாங்கிப் பிடித்தார்.

    இடையர் அனைவருக்கும் பசுக்களுக்கும் கன்றுகளுக்கும் பாதுகாப்பு அளித்தார்.

    அவ்வாறு ஏழு நாட்கள் கோவர்த்தன கிரியைத் தாங்கிப் பிடித்து ஆயர்களைக் காத்தார் பகவான்.

    இந்திரன் தன் முயற்சி வீணானதைக் கண்டு மேகங்களின் செயல்களை நிறுத்தினான்.

    மழை நின்றது. ஆயர்கள் அனைவரும் மகிழ்வுடன் தங்களுடைய இருப்பிடத்திற்குத் திரும்பிச் சென்றனர்.

    தேவேந்திரன் தன் தவறை உணர்ந்தான்.

    மகா விஷ்ணுவே கிருஷ்ணராக அவதரித்திருக்கிறார் என்பதை அறிந்தவன் தன் செயலுக்காக கிருஷ்ணரிடம் மன்னிப்புக் கோரினான்.

    தன்னை துதிப்பவர்களை கிருஷ்ணர் கைவிட மாட்டார் என்பதை இந்த நிகழ்ச்சி மூலம் உணரலாம்.

    • என்ன ஆச்சரியம். அது கிருஷ்ணனுடைய எடைக்கு சமமாக நின்றது.
    • அதனால்தான் நாம சங்கீர்த்தனத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

    ஒருமுறை கிருஷ்ணரிடம் யாருக்கு அன்பு அதிகம் என்பதை, ருக்மணியும் சத்தியபாமாவும் சோதித்துப் பார்க்க விரும்பினர்.

    தங்களுடைய கருத்தை கிருஷ்ணரிடம் தெரிவித்தனர்.

    கிருஷ்ணரும் அதற்குச் சம்மதித்தார். அங்கே ஒரு துலாபாரம் (தராசு) கொண்டு வரப்பட்டது.

    கிருஷ்ணர் அதில் அமருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.

    அவரும் மறுவார்த்தை பேசாமல் துலாபாரத்தில் அமர்ந்து, ஏதும் அறியாதவர் போல் நடப்பதை அமைதியாகப் பார்த்துக் கொண்டு இருந்தார்.

    முதலில் சத்தியபாமா தன்னிடம் இருந்த நகைகள் மொத்தத்தையும் ஒரு தட்டில் வைத்தாள்.

    ஆனால் கண்ணன் அமர்ந்திருந்த தட்டில் அசைவே இல்லை.

    தனது முயற்சியில் சற்றும் தளராது சத்தியபாமா மேலும் தனது கழுத்தில், காதில், உடலில் அணிந்திருந்த எல்லா நகைகளையும் எடுத்து தராசில் வைத்தாள்.

    அப்போதும் நகைகள் வைக்கப்பட்ட தட்டு கீழே வரவில்லை.

    சத்தியபாமா வெட்கத்தால் தலை குனிந்தாள்.

    இந்த நிகழ்ச்சியை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்த ருக்மணி, தராசின் அருகில் வந்து

    கிருஷ்ணரைப் பிரார்த்தித்து ஒரு துளசி இலையில் கிருஷ்ணரின் நாமத்தை எழுதி,

    தராசின் நகைகள் இருந்த தட்டில் வைத்தாள்.

    என்ன ஆச்சரியம். அது கிருஷ்ணனுடைய எடைக்கு சமமாக நின்றது.

    இறைவனுக்கும், அவனது திருநாமத்துக்கும் எவ்வித வேறுபாடும் கிடையாது.

    பக்தியுடன் அவன் நாமத்தைச் சொல்லி ஒரு துளசி இலையைச் சமர்ப்பித்தாலும் பகவான் கிருஷ்ணன் அதை ஏற்றுக் கொள்வார்.

    கலியுகத்தில், அதனால்தான் நாம சங்கீர்த்தனத்துக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

    • அப்போது அவர்கள் பாடிய பாடல், கோபிகா கீதம் எனப்பட்டது.
    • கிருஷ்ணருக்கு அவரது சிறு வயது நண்பர் குசேலர் அவல் கொடுத்து மகிழ்ந்தார்.

    1. கிருஷ்ண ஜெயந்தி ஜென்மாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி, கோகுலாஷ்டமி எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

    2. ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி என்பது, பகவான் கிருஷ்ணன் இப்பூமியில் மானிடராக அவதாரம் செய்த திருநாளாகும்.

    3. தீயவர்களையும் தீமைகளையும் அழித்து, நல்லோர்களையும் நன்மைகளையும் காப்பதற்காக உருவானதே ஸ்ரீகிருஷ்ண அவதாரம்.

    4. கிருஷ்ணருக்கு அவரது சிறு வயது நண்பர் குசேலர் அவல் கொடுத்து மகிழ்ந்தார்.

    இந்த நிகழ்ச்சியின் காரணமாகவே ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அன்று அவலை வைத்து நிவேதனம் செய்வது வழக்கத்தில் உள்ளது.

    5. கண்ணனைக் காணாத கோபியர்கள் பலவிதமாகப் புலம்பினார்கள்.

    அப்போது அவர்கள் பாடிய பாடல், கோபிகா கீதம் எனப்பட்டது.

    • பரமாத்மா தருமரின் வேண்டுகோளை ஏற்று தூது செல்லப் புறப்படுகிறார்.
    • “உங்களைக் கட்டிப் போட்டால் யுத்தம் வராமல் தடுக்க முடியும்” என்கிறான்.

    பாண்டவர்களுள் கிருஷ்ணனிடம் அதிக பக்தி கொண்டவர் யார் என்று சொல்ல முடியாது.

    ஒவ்வொருவரும் அவர் மீது தங்கள் உள்ளத்தில் மிகுந்த பக்தி கொண்டிருந்தனர்.

    ஆனால் சற்றும் வெளியில் தெரியாத பக்தி சகாதேவன் பக்தி என்பார்கள்.

    ஆனால் அந்த சகாதேவன்தான் பாண்டவர் ஐவரும் பாரத யுத்தத்தில் உயிர் பிழைத்து வாழக் காரணமாகயிருந்தவன்.

    பூபாரம் தீர்க்க வந்த பரமாத்மாவிற்கு வேண்டியவர் வேண்டாதவர், உற்றவர், மற்றவர் என்ற பேதங்களில்லை.

    குருசேத்திரப் போரில் அவர் அனைவரையும் அழித்திருப்பார்.

    அதில் பாண்டவரும் மாண்டிருப்பர். அந்த ரகசியத்தை அறிந்தவன் சகாதேவன்.

    பரமாத்மா தருமரின் வேண்டுகோளை ஏற்று தூது செல்லப் புறப்படுகிறார்.

    அப்போது பாண்டவர் ஐவரிடமும் சண்டையா-சமாதானமா என்று கேட்கிறார்.

    தருமர் மட்டுமே சமாதானம் என்கிறார். பீமன், அர்ஜுனன், நகுலன் மூவரும் சண்டைதான் வேண்டும் என்கின்றனர்.

    ஆனால் சகாதேவன் மட்டும் "எங்களை ஏன் கேட்கிறீர்கள்? நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுதானே நடக்கப் போகிறது.

    அதைச் செய்யுங்கள்" என்கிறான்.

    சகாதேவன் ஜோதிடத்தில் சிறந்தவன் என்பதால் இவன் ஏதோ உள்ளர்த்தம் வைத்துப் பேசுகிறான் என்பதை உணர்கிறார் கிருஷ்ணர்,

    சகாதேவனைத் தனிமையில் சந்தித்த பரமாத்மா "பாரதப் போர் வராமல் தடுக்க என்ன செய்யலாம் என்று சொல்" என்று கேட்கிறார்.

    "உங்களைக் கட்டிப் போட்டால் பாரத யுத்தம் வராமல் தடுக்க முடியும்" என்கிறான் சகாதேவன்.

    "எங்கே என்னைக் கட்டு பார்க்கலாம்!" என்ற கண்ணன் மறுகணம் பதினாறாயிரம் வடிவம் கொண்டு நிற்கிறார்.

    ஆயினும் சகாதேவன் தயங்கவில்லை. தன் மனத்தால் உண்மை வடிவத்தைக் கட்டுகிறான்.

    அதற்கு மகிழ்ந்து கண்ணன் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க, சகாதேவன் ஐவர் உயிரையும் காத்தருள வேண்டும் என்று கேட்க அவ்விதமே அருள்புரிகிறார் கண்ணன்.

    "பசையற்ற உடல்வற்ற" என்ற இந்தப் பாடலில் பாண்டவர் மீது குற்றமற்ற, முடிவில்லாமல் வளர்ந்த பற்று வைத்திருந்த கண்ணன்,

    சகாதேவனுக்கு அளவற்ற தனது வடிவங்களைக் காட்டினார்.

    • ருக்மணி போட்டிக்குப் போவதில்லை. பாமாதான் தொடங்கி வைப்பாள்.
    • கண்ணன் அந்த பாரிஜாத மலர் மாலையை ருக்மணிக்கு அன்பளிப்பாகத் தந்தான்.

    பாகவதத்தில் இடம் பெறும் பல சுவையான நிகழ்ச்சிகளில் பாமாவுக்கும் ருக்மணிக்கும் இடையில் நடக்கும் போட்டிகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை.

    ருக்மணி போட்டிக்குப் போவதில்லை. பாமாதான் தொடங்கி வைப்பாள்.

    ஆனால் அதன் உச்ச கட்டம் ருக்மணியின் பெருமையை விளக்குவதாகவே அமையும்.

    அப்படி நடந்த நிகழ்ச்சிகளில் பாரிஜாத மலரால் ஏற்பட்ட விவகாரமும் ஒன்றாகும்.

    ஒருமுறை கண்ணன் நரகாசுரனை வென்ற பின் இந்திரலோகத்திற்கு சத்யபாமாவுடன் செல்ல இந்திரன் அவருக்குக் காணிக்கையாக பாரிஜாத மலர் மாலையை அணிவித்தான்.

    ஆனால் சத்யபாமாவைப் பொருட்படுத்தவில்லை.

    அங்கிருந்து வந்த கண்ணன் அந்த பாரிஜாத மலர் மாலையை ருக்மணிக்கு அன்பளிப்பாகத் தந்தான்.

    நாரதர் அதைக் கண்டதும் கலகத்திற்கு ஒரு காரணம் கிடைத்ததென்று பாமாவிடம் வந்து, "நரகாசுரவதம் நடப்பதற்காக நீதானே கண்ணனுக்கு சாரதியாகச் சென்றாய்.

    அதற்குப் பரிசாகத்தானே கண்ணனுக்கு இந்திரன் எப்போதும் வாடாத பாரிஜாத மலர்களால் கட்டப்பட்ட மாலையை அணிவித்தான்.

    நியாயமாக அதைக் கண்ணன் உனக்குத்தானே அணிவித்திருக்க வேண்டும்.

    ஆனால் அதை அப்படியே கொண்டு வந்து ருக்மணியிடம் தந்து விட்டானே. இது நியாயமா? என்று கேட்டார்.

    ஏற்கனவே இந்திரன் தன்னை சரியாக கவுரவிக்கவில்லை என்று கொதித்துக் கொண்டிருந்த பாமாவிற்கு மேலும் கோபம் பொங்கியது.

    கண்ணன் வந்தபோது அவனிடம் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

    காரணம் கேட்டபோது இந்திரனின் பாரிஜாத மரம் இங்கு வர வேண்டும். அப்போதுதான் பேசுவேன் என்றாள்.

    கண்ணன் அந்த மரத்தை சில நாட்கள் தங்களிடம் இருக்க தந்தனுப்ப வேணடும் என்று இந்திரனுக்கு செய்தி அனுப்ப, அவன் முடியாது என்று மறுத்து விட்டான்.

    அதனால் கண்ணன் இந்திரன் மீது போர் தொடுத்து வென்று அந்த பாரிஜாத மரத்தைக் கொண்டு வந்து பாமாவின் அரண்மனைத் தோட்டத்தில் பதித்து வைத்தார்.

    ஆனால் அந்த மரம் அங்கேயிருந்தாலும் அந்த மலர்கள் ஒவ்வொரு நாளும் ருக்குமணியின் அரண்மனையில் போய் விழுந்தன என்பது வேறு கதை.

    • அதற்குக் காரணம் கோபியர் கண்ணனிடம் காட்டிய பிரேமை அலாதியானது.
    • கோபியர்களால் ஒரு கணம் கூட கிருஷ்ணனைப் பிரிந்து இருக்க முடியாது.

    "அநுராக மனோரமம் முக்தஸங்க மனோரமம்" என்று ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவைப் போற்றிப் பணிவர்.

    அநுராக மனோரமம் என்றால் அன்பர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியை உண்டு பண்ணுகிறவன் என்று பொருள்.

    முக்தஸங்க மனோரமம் என்றால் முற்றும் துறந்த பற்றற்ற பரமஞானியர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்பவன் என்று பொருள்.

    ஸ்ரீமந் நாராயணனுக்கு ஆழ்வார்கள் & ஸ்ரீராமருக்கு வானரங்கள் & சிவ பெருமானுக்கு நாயன்மார்கள் என்பது போல்

    ஸ்ரீ கிருஷ்ணனுக்கு கோபிகா ஸ்திரீகளும் அடியார்களைப் போல் அபரிதமான பக்தி கொண்டிருந்தனர்.

    கண்ணன் மீது நீங்காத பக்தி பூண்ட கோபியர்கள் பூவுலகில் பெரும் புண்ணியத்தைச் செய்து பிறந்தவர்கள்.

    கண்ணனின் மோகக் குழலோசைக்கு அந்த மோகனப் பதுமைகள் மதி மயங்கிப் போயினர்.

    கோபிகாஸ்திரீகளின் பிரேமை மயக்கம் என்பது ஒரு வித்தியாசமான பக்தி.

    அதற்குக் காரணம் கோபியர் கண்ணனிடம் காட்டிய பிரேமை அலாதியானது.

    அற்புதமானது, ஆனந்த மயமானது.

    பக்தர்களால் பகவானைத் தரிசிக்காமல் இருக்க முடியாது.

    அதே போல் கோபியர்களால் ஒரு கணம் கூட கிருஷ்ணனைப் பிரிந்து இருக்க முடியாது.

    ஸ்ரீ கிருஷ்ணன் மதுராபுரிக்குச் சென்றதும், அவனது பிரிவை கோபியர்களால் தாங்க முடியவில்லை.

    கண்ணனிடம் பூண்டுள்ள பிரேமையை அவர்களால் மறக்க முடியவில்லை.

    கோபியர், கண்ணனின் திருமேனியைத் தரிசித்து மகிழ்ந்த பக்திப் பாவையர்கள்.

    அவர்கள் நிலையான பேரின்பத்தைக் கண்டவர்கள். சிற்றின்பத்தைக் காணாதவர்கள்.

    கோபியர், தாங்கள் ஸ்ரீ கிருஷ்ணனிடம் கொண்டுள்ள அபரிதமான தாபத்தினால் உலகையே மறந்து விடுகிறார்கள்.

    ஸ்ரீ கிருஷ்ணன் முக்குணங்களுக்கும் அப்பாற்பட்ட பரம்பொருள் ஆனதால் கோபியர்களின் பிரேமையும் நிர்குண சொரூபமடைந்து ஜென்ம சாபல்யம் அடைகிறது.

    கோபியர் வேத சாஸ்திர இதிகாசங்களைக் கற்றுத் தெளிந்தவர்கள் அல்லர்.

    ஆனால் கிருஷ்ணனிடம் பூண்டுள்ள பிரேமை எனும் பக்தியால் பேரானந்த பெருநிலையை அடைந்துவிட்ட தவமணிகள்.

    அல்லும் பகலும் பக்தனைப் போல் பரந்தாமனிடம் பக்தி பூண்ட கோபியர் எங்கும், எதிலும், எப்போதும் ஸ்ரீ கிருஷ்ணனுடைய மோகனரூபத்தைக் கண்டு களித்துப் பெருமிதம் பூண்டவர்கள்.

    அதனால்தான் இன்றும் ஹரிகதா காலசேபங்கள் பூர்த்தி பண்ணும் போது, "கோபிகா ஜீவன ஸ்மரணம்" என்று கூறப்படுகிறது.

    கோபியர்களைப் போல் பக்திக்கு நிகரானவர்கள் எவருமே கிடையாது.

    • ள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குழந்தை வடிவம் கொண்டவன்
    • ஊஞ்சலின் ஆட்டம் போன்ற பார்வையை உடையவன், கண்களுக்கு இனியவன்.

    கண்ணனின் புன்சிரிப்பு இனிமை மிக்கது. புன்சிரிப்பென்ற அமுதத்தால் அழகு பெற்ற தாமரை முகக்கொழுத்த மயில் இறகால் அலங்கரிக்கப்பட்ட திருமுக மனதிற்கினியதாயிருக்கும் விசாலமான கண்களையுடையது.

    கிருஷ்ணனின் கண் தாமரை மொட்டு போன்றது, அவனுடைய கன்னப்பிரதேசம் கண்ணாடி போல் வழவழப்பும் மென்மையும் உடையது.

    அவனுடைய முகம் தாமரை போன்றது, வேணுகானமாகிற தேன் நிரம்பியது.

    உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குழந்தை வடிவம் கொண்டவன், அழகிய திருமேனியை உடையவன்,

    அவனுடைய குழலோசை இனியது, அந்த ஓசையால் பூரிப்படைந்த சந்திரனைப் போன்ற முகம் அவனுடையது.

    கண்ணனின் முகம் லட்சுமி தேவியின் கையில் விளையாட்டாக இருந்து கொண்டிருக்கும் தாமரை போன்ற முகம்.

    சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருப்பவன், ரகசியமான பாவனைகளைப் புல்லாங்குழலின் துவாரங்களில் நுழைத்து வாசிப்பவன்,

    ஊஞ்சலின் ஆட்டம் போன்ற பார்வையை உடையவன், கண்களுக்கு இனியவன்.

    அவனது சிரிப்பு வெட்கத்துடன் கூடியது போலும், அது அழகானது, தேனால் நனைக்கப்பட்டது போன்ற கீழுதடு, அது காந்தியால் பிரகாசிப்பது.

    பூர்ண சந்திரனே கொண்டாடுகிற (சந்திர) முகத்தையுடையவன்.

    சூரியனுடைய கிரகணங்கள் பனியை விரட்டியடிப்பவை இக்கிரகணங்களால் மெதுவாகத் தொடப்பட்டது.

    அழகுடன் கூடியது, மிக்க மகிழ்ச்சி தருவது, அப்படிப்பட்ட புஷ்பத்துக்கு சமமான கண்கள் கிருஷ்ணனுடையவை,

    கோகுலப் பெண்களுடன் விளையாட்டாகச் சண்டை போட்டான்.

    ஜெயித்தவன் அவனே, இந்த லீலையால் கர்வமடைந்து மகிழ்கிற சந்திரனைப் போன்ற முகத்தையுடையவன்.

    கண்ணனுடைய புல்லாங்குழலின் நாதம், அவனுடைய கை விரல்களால் அது மீட்டப்படுகிறது.

    அந்த விரல் தாமரையின் இதழ் போன்றவை.

    அந்த இனிமையான நாதத்தில் பெருகுகிற அமுதம் நிறைந்த தடாகம் போன்றவன் அவன்.

    அவனுடைய புன்முறுவல் இயற்கையான ஆனந்த ரசம் நிரம்பியது.

    அந்த ரசத்தை எப்போதும் தாங்குகிற கீழுதடு ரத்னம் போன்றது.

    தன்னைத் தானாகவே கோகுலத்தில் பிறப்பை எடுத்துக் கொண்டவன்,

    ஆனால் சர்வ வியாபகனான பகவான் அவன், அதிசயமான வேஷதாரியானவன், சம்கார பயத்திற்கு ஒரே மருந்தானவன்.

    காதுகளில் தொங்கட்டான், பூக்கொத்தினுடைய இதழ்கள் அவனுடைய கன்னப் பிரதேசத்தை சிவப்பாகச் செய்கின்றன.

    பரிசுத்தமானவன், வேத வாக்கியங்களுக்கும் எட்டாதவன்.

    கண்ணனின் கண்கள் நீலோத்பலம் போன்றவை. அவனுடைய உதடுகள் இரு பாதியாக பிரிக்கப்பட்ட அரும்பு போன்றவை.

    அவனுடைய கைவிரல் நுனிகள் வேகமாகப் புல்லாங்குழலின் மேல் அசையும், அக்குழலின் இனிமையை அவன் அனுபவிக்கிறான்.

    ஸத்த, சித்து, ஆனந்தம் ஆகியவையே ரூபமாக உடையவன், எல்லா மாயையையும் ஒழித்தவன்,

    சத்தியமென்ற தனத்துக்கு சகாயமாயிருப்பவன், மனத்திடனடக்கமும், புலன்களின் அடக்கமும் சாந்தமும் கூடுமிடம், எல்லா விக்கனங்களும் நீங்கிய இடம், நல்ல இதயம் படைத்த ஜனங்களின் ஆஸ்தியானவன்.

    சிரசில் மயிலிறகு, நெற்றித் தலத்தில் கஸ்தூரி, திலகம், இரு காதுகளிலும் பச்சிலைகள், மூக்கில் முத்து, கழுத்தில் தொங்கும் முத்து மாலை, மந்தாரப்பூ மாலையின் வாசனையுடன் விளங்குவது.

    மஞ்சள் பட்டாடையுடனும் புல்லாங்குழலுடனும் உள்ள கண்ணனை கோகுலப் பெண்கள் சூழ்ந்திருக்கின்றனர்.

    அவ்வாறானவன் நம்மை ரட்சிக்கட்டும்.

    • பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே கோகுலாஷ்டமியின் நோக்கம் ஆகும்.
    • அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து பூஜைகள் செய்து வழிபட வேண்டும்.

    பகவான் மகா விஷ்ணு பூமி பாரம் குறைப்பதற்காகவும் நல்லவர்களைக் காப்பதற்காகவும்

    ஆவணி மாதத்தில் நடு இரவில் தேய்பிறை அஷ்டமி திதி உள்ள நாளில் ஸ்ரீகிருஷ்ணராக அவதாரம் எடுத்தார்.

    இந்தியா முழுவதும் இந்த விழாவானது கோகுலாஷ்டமி, ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, ஜென்மாஷ்டமி

    என்று பலவிதமான பெயர்களில் கொண்டாடப்படுகிறது.

    சுமார் 5230 ஆண்டுகளுக்கு முன்பு பகுளாஷ்டமி, தேய்பிறை திதியில் ரிஷப லக்னம்,

    ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரத்தில் கிருஷ்ணாவதாரம் நிகழ்ந்ததாக சாஸ்திர அளவியல்

    கணக்குகள் மூலம் தெரிய வருகிறது.

    இதன்மூலம் கிருஷ்ண வழிபாடு மிகவும் தொன்மை வாய்ந்தது என்பதை அறியலாம்.

    ஜோதிட சாஸ்திரத்தில் அஷ்டமி, நவமி ஆகிய இரண்டு திதிகள் மிகவும் பிரசித்தம்.

    இந்த திதிகளில் எந்த விதமான சுபகாரியங்கள், புதிய முயற்சிகளை தொடங்குவதில்லை

    என்பதை மக்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

    மற்ற திதிகள் போல இந்த இரண்டும் நல்ல திதிகளே என்பதை உணர்த்தும் பொருட்டே ராமாவதாரத்தில்,

    மகா விஷ்ணு நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்த தினத்தை ஸ்ரீராம நவமி என்று கொண்டாடுகிறோம்.

    கிருஷ்ணாவதாரத்தில் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் கண்ணனாக அவதரித்த தினத்தை

    கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி என்று கொண்டாடுகிறோம்.

    'எல்லாவற்றிலும் நான் உறைகின்றேன்' என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் உணர்த்தியிருப்பதன் வெளிப்பாடே இது.

    பகவான் கிருஷ்ணர் குழந்தை அவதாரமாக நம் வீட்டிற்கு வந்து அருள்பாலிப்பதே

    கோகுலாஷ்டமி பண்டிகையின் முக்கிய அம்சமும், நோக்கமும் ஆகும்.

    அதனால்தான் கிருஷ்ண ஜெயந்தி அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்து அரிசி மாவில் கோலமிட்டு பூக்கள்,

    மாவிலை தோரணங்களால் அழகுபடுத்துவர்.

    வாசலில் தொடங்கி பூஜை அறை வரை குழந்தையின் பிஞ்சு பாத தடங்களை அரிசி மாவால் பதிப்பார்கள்.

    ஆலிலை கிருஷ்ணன் தனது பிஞ்சு பாதங்களை அடிமேல் அடி வைத்து வீட்டிற்குள் தத்தித் தத்தி நடந்து வருவதாக ஐதீகம்.

    கிருஷ்ணனின் படத்தை அலங்கரித்து மாலைகளும், மலர்களும் சூடி அவனுக்கு பிடித்தமான வெண்ணெய்,

    இனிப்பு வகைகள், சீடை, முறுக்கு, தேன்குழல், பொங்கல், பால் பாயாசம் போன்ற நைவேத்யங்கள் படைத்து

    அவரவர் குடும்ப வழக்கப்படி விரதம் இருந்து பூஜைகள் செய்து பக்தி பாமாலைகள் பாடி வழிபட வேண்டும்.

    அந்த நீலவண்ண கண்ணன் நம் இல்லம் வந்து அருள்புரிய சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள்

    தனது திருப்பாவையில் இவ்வாறு பாடியருளியுள்ளார்.

    'மாயனை மன்னு வட மதுரை மைந்தனை

    தூய பெருநீர் யமுனைத் துறைவனை

    ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை

    தாயை குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை

    தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது

    வாயினாற்பாடி மனத்தினால் சிந்திக்க

    போய பிழையும் புகு தருவானின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.'

    கிருஷ்ணனை இவ்வாறு பாடி வழிபட்டால், எல்லா விதமான தடைகளும், பிழைகளும் தீயினில் பட்ட தூசாக அழியும் என்று தனது திருப்பாவை பாசுரத்தில் கூறியுள்ளார்.

    • கிருஷ்ணர் வளர்ந்த பிருந்தாவனத்தின் பெருமை அளவிடற்கரியது.
    • பிருந்தாவனத்தில் தான் கண்ணன், மாடு கன்றுகளை மேய்த்தான்.

    கிருஷ்ணர் வளர்ந்த பிருந்தாவனத்தின் பெருமை அளவிடற்கரியது,

    உத்திரப்பிரதேச மாநிலத்தில், மதுரா மாவட்டத்தில் இத் திருத்தலம் அமைந்துள்ளது.

    பகவான் கிருஷ்ணன் குழந்தைப் பருவத்தில் பல அற்புதத் திருவிளையாடல்களை நிகழ்த்திய இடம் இதுவே.

    கண்ணனின் பால லீலைகளோடும், மற்றும் இளமை கால வாழ்க்கையோடும் தொடர்புடைய

    இடங்களின் பரப்பு மொத்தமாக "விரஜபூமி" என்று அழைக்கப்படுகிறது.

    வட நாட்டில் உத்தரபிரதேச மாநிலத்தில் இதன் பெரும் பகுதி உள்ளது.

    சில பகுதிகள் அதன் அண்டை மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவிலும் அமைந்துள்ளன.

    இந்த "விரஜ பூமி" சுமாராக 285 கி.மீ. சுற்றளவு கொண்டது.

    இதை வலமாக சுற்றி வருவது, "விரஜ பரிக்ரமா" எனப்படும்.

    இதில் பெரிய சிறிய பாதைகள் உண்டு. இப்படி வலம் வர இயலாதவர்கள் கோவர்தன மலையை வலம் வந்து வணங்குவர்.

    உடலளவில் அதற்கும் முடியாதவர்கள், மதுரா அல்லது பிருந்தாவனத்தை வலம் வருவதும் உண்டு.

    பக்தர்கள் அனைவரும் இதில் ஈடுபடுகிறார்கள் என்ற போதிலும், நிம்பார்க்கர் மற்றும் வல்லபர் மரபை சேர்ந்த வைணவ அடியார்கள், "பரிக்ரமா"வை முக்கியமாகக் கருதுகிறார்கள்.

    கிருஷ்ண ஜன்மாஷ்டமியன்று பிருந்தாவனம் சென்று சேர இதை செய்கிறார்கள்.

    பெரிய பாதை வழியாகச் சென்று இதை முடிக்க சுமார் இரண்டு மாதங்கள் வரை கூட ஆகலாம்.

    கிருஷ்ணன் அவதரித்த மதுரா, ராதை அவதரித்த பர்ஸானா, ஆயர் பாடியான கோகுலம் எல்லாம் "விரஜ பூமி"யில் உள்ளன.

    "பிருந்தா" என்பது துளசியைக் குறிக்கும் என்று கூறுவர்.

    பிருந்தாவனத்தில் தான் கண்ணன், மாடு கன்றுகளை மேய்த்தான். பிருந்தாவனத்தில் 12 வனங்கள் உண்டு.

    இவற்றுள் யமுனைக்கு மேற்கில் ஏழும், கிழக்கில் ஐந்தும் உள்ளன.

    பிருந்தாவனத்தில் தான் கிருஷ்ண லீலைகள் எல்லாம் நிகழ்ந்தன.

    கிருஷ்ணன் மேய்த்த மாடு, கன்றுகளையும், மற்ற கோபால சிறுவர்களையும் ஓராண்டுக் காலம்

    பிரம்மன் ஒளித்துக் கொண்டு போன பொழுது அவை எல்லாமாகத் தானே இருந்து,

    பிரம்மனைக் கண்ணன் மயக்கிய இடமும் இதுவே!

    பிருந்தாவனத்தில் நூற்றுக்கணக்கான பழைய மற்றும் நவீன ஆலயங்களும், காண வேண்டிய இடங்களும் பல உள்ளன.

    யமுனையில் நீராடிய பின் இந்த தலங்களை அவசியம் தரிசிக்க வேண்டும்.

    கேசீகாட், காளிய மதன்காட், சீர்காட், ரமண்ரேதீ, வம்சீவட், சேவாகுஞ்ச், நிதிவனம், பாங்கே விஹாரி மந்திர்,

    ராதா ரமண் மந்திர், கோவிந்தஜி மந்திர், ரங்கஜி மந்திர் முதலானவை முக்கிய தலங்களாகும்.

    இவற்றுள் பாங்கே விஹாரி கோவிலில் அடிக்கடி திரையால் மூலஸ்தானத்தை மறைப்பார்கள்.

    தரிசிக்க வரும் பக்தர்கள் பின்னால் குறும்புக்கார கண்ணன் ஓடி விடுவான் என்ற பயம் தான் இதற்குக் காரணம்.

    மதுராவிற்கு சற்று வடமேற்கில் சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ள பிருந்தாவனம், அவசியம் அன்பர்கள் தரிசித்து மகிழ வேண்டிய தலமாகும்.

    • காளிய கிருஷ்ணன்: காளிங்கன் என்ற நாகத்தின் மீது நர்த்தனம் புரியும் காளிய கிருஷ்ணன்.
    • கோவர்த்தனதாரி: கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.

    ஸ்ரீகிருஷ்ணர் எட்டு வகையாக உருவகப்படுத்தி வணங்கப்படுகிறார்.

    அந்த 8 வகை கிருஷ்ணர்கள் விபரம் வருமாறு:

    1.சந்தான கோபால கிருஷ்ணன்: யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம்.

    2.பாலகிருஷ்ணன்: தவழும் கோலம். ஆலயங்களில் கிருஷ்ணன் சன்னதிகளிலும் பலரது வீட்டில் பூஜை அறையிலும் இப்படத்தையே காணலாம்.

    3.காளிய கிருஷ்ணன்: காளிங்கன் என்ற நாகத்தின் மீது நர்த்தனம் புரியும் காளிய கிருஷ்ணன்.

    4.கோவர்த்தனதாரி: கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.

    5.ராதா-கிருஷ்ணன் (வேணுகோபாலன்): வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன்.

    6.முரளீதரன்: கிருஷ்ணன் ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராய் நின்றிருக்கும் திருக்கோலம். இது தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது.

    7.மதனகோபாலன்: அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் கிருஷ்ணன்.

    8.பார்த்தசாரதி: அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.

    • ஒருநாள் ஒரு மூதாட்டியின் வீட்டு கதவை யாரோ தட்டுவது போல் இருந்தது.
    • “ஜெயகிருஷ்ண முகுந்தா முராரே” என்று பாடினாலே எந்த அசுர சக்தியாலும் நம்மை வீழ்த்த முடியாது.

    கேரளாவில் முகத்தல என்ற இடத்தில் முரன் என்ற அசுரன் இருந்தான்.

    அவன் அந்த பகுதி மக்களுக்கு பெரும் துன்பத்தை கொடுத்து வந்தான்.

    இதனால் அந்த ஊர் மக்கள் வேதனை அடைந்தார்கள்.

    "தங்களுக்கு விமோச்சன காலம் எப்போது வரும் நாராயணா?" என்று தினமும் ஸ்ரீமந் நாராயணனை வேண்டி வந்தார்கள்.

    ஒருநாள் ஒரு மூதாட்டியின் வீட்டு கதவை யாரோ தட்டுவது போல் இருந்தது.

    இதை கேட்ட அந்த வீட்டின் கிழவி, தன்னை கொல்ல அசுரன் முரன் வந்துவிட்டானோ என்று பயந்தபடி கதவை திறந்தாள்.

    ஆனால் வாசலில் ஒரு சிறுவன் நிற்பதை கண்டாள்.

    அந்த சிறுவன் கறுப்பாக இருந்தாலும் அழகாக இருந்தான்.

    அவனை பார்த்தவுடன் அந்த மூதாட்டிக்கு பயம் நீங்கியது.

    "நீ யாரப்பா. எங்கிருந்து வருகிறாய்?" என்று கேட்டாள்.

    "நான் யார் எங்கிருந்து வருகிறேன் என்பதை பிறகு சொல்கிறேன் பாட்டி, எனக்கு பசியாக இருக்கிறது.

    உணவு தருவாயா?" என்று கேட்டான் அந்த சிறுவன்.

    அவனை வீட்டுக்குள் அழைத்து உட்கார வைத்து, அரிசி கஞ்சியை கொண்டு வந்து அந்த சிறுவனிடம் கொடுத்தாள்.

    "அப்பா.. நான் ஒரு ஏழை கிழவி. உனக்கு ருசியான சாப்பிட கொடுக்க என் வீட்டில் எதுவும் இல்லை.

    இந்த ஏழை பாட்டியால் இந்த அரிசி கஞ்சியைதான் தர முடிந்தது." என்று சொல்லி தந்தாள்.

    அதை வாங்கி சாப்பிட்டான் சிறுவன்.

    "பாட்டி.. நீ எனக்கு அன்பாக கொடுத்த அரிசி கஞ்சி அமுதமாக இருந்தது.

    அன்புள்ளம் கொண்ட நீ ஏழை இல்லை.

    நீ கொடுத்த இந்த அரிசி கஞ்சிக்கு நான் உனக்கு ஏதேனும் உதவி செய்ய வேண்டும்.

    என்ன உதவி வேண்டும் கேள்." என்றான் சிறுவன். அந்த சிறுவன் பேசியதை கேட்டு பாட்டி சிரித்தாள்.

    "ஏன் சிரித்தாய்?" என கேட்டான் சிறுவன். "அட சுட்டி பயலே. நீ என்ன பகவான் கிருஷ்ணனா, நீ அப்படி என்ன எனக்கு உதவி செய்துவிடுவாய்.?" என்றாள் பாட்டி.

    "ஆமாம் பாட்டி. நான் படுசுட்டிதான். என் அம்மாவும் அப்படிதான் சொல்வாள். இந்த சுட்டி பயலுக்கு எல்லோரும் சின்ன வேலையாக தருகிறார்கள்.

    நீயாவது பெரிய வேலையை தா" என்றான் சிறுவன். "நீ என் பேரனை போல இருக்கிறாய் அதனால் சொல்கிறேன்.

    இந்த ஊரில் முரன் என்ற அசுரன் இருக்கிறான்.

    அவன் கண்ணில் நீ படாமல் இருந்தாலே போதும். நேரம் இருட்டிவிட்டது.

    இங்கேயே தூங்கிவிட்டு காலையில் பத்திரமாக வீடு போய் சேர்" என்றாள் பாட்டி.

    "எங்கள் ஊரில் நான் பாம்பின் மேல் தூங்கி பழகியவன். வீட்டுக்குள் தரையில் படுத்தால் எனக்கு தூக்கம் வராது.

    திண்ணையில் படுத்துக்கொள்கிறேன் பாட்டி. விடிந்ததும் புறப்படுகிறேன்." என்ற சிறுவன், திண்ணையில் படுத்துக் கொண்டான்.

    மறுநாள் பொழுது விடிந்தது.

    அப்போது "படார்" என்று குண்டு வெடிப்பது போல பலத்த சத்தம் அந்த ஊரையே அதிர வைத்தது.

    என்ன ஏது என்று புரியாமல் பாட்டியும், அவ்வூர் மக்களும் அலறி அடித்துக்கொண்டு வெளியே வந்து பார்த்தார்கள்.

    நடுதெருவில் அசுரன் முரன் இறந்து கிடந்தான். "யார் இந்த அசுரனை கொன்றது?"

    என்று ஒருவரையருவர் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

    பாட்டி திண்ணையை பார்த்தாள். அந்த சிறுவன் இல்லை.

    நேற்றிரவு வந்தது கண்ணன்தான் என்பதை தெரிந்துக்கொண்டாள்.

    "இந்த அசுரனின் தொல்லையில் இருந்து காப்பாற்ற தினமும் நாம் ஸ்ரீமந் நாராயணனிடம் வேண்டுவோமே!

    அந்த கண்ணனின் லீலைதான் இது" என்றாள்.

    முரன் என்ற அசுரனை கொன்றதால் கிருஷ்ண பரமாத்மாவுக்கு "முராரி" என்று பெயர் ஏற்பட்டது.

    "ஜெயகிருஷ்ண முகுந்தா முராரே" என்று பாடினாலே எந்த அசுர சக்தியாலும் நம்மை வீழ்த்த முடியாது.

    பகவான் கிருஷ்ணர், நம்மை எப்போதும் காப்பார்.

    ×