search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருநாளைபோவார் நாயனார் வரலாறு"

    • இறைவனுக்கு அனைவரும் ஒருவர் தான்.
    • இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது தூய்மையான பக்தியை தான்.

    நாவார் புகழ்த்தில்லை யம்பலத் தானருள் பெற்றுநாளைப்

    போவா னவனாம் புறத்திருத் தொண்டன்றன் புன்புலைபோய்

    மூவா யிரவர்கை கூப்ப முனியா யவன்பதி தான்

    மாவார் பொழிறிக ழாதனூ ரென்பரிம் மண்டலத்தே

    -என்று பாடிய நந்தனாரை திருநாளைப்போவார் நாயனார் என்று அழைக்கின்றனர்.

    இறைவனுக்கு அனைவரும் ஒருவர் தான். இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது தூய்மையான பக்தியை. இறைவன் சாதியையோ, மதத்தையோ பார்ப்பதில்லை.

    அந்த காலத்தில் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர்கள் கோவிலுக்குள் செல்லக்கூடாது என்ற நிலைமை இருந்தது. சோழநாட்டில் ஆதனூர் என்ற ஊரில் நந்தன் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் புலையர் குலத்தில் பிறந்தவர். ஆயினும் அவர் இறைவன் மீது தீராத பக்தி கொண்டிருந்தார்.

    சிவபெருமானை தன் உயிரினும் மேலாக கருதி, சிவபெருமான் மீது அளவிகடந்த பக்தியுடன் வாழ்ந்து வந்தார். கோவில் முரசுகளுக்கு தோல் தைத்து கொடுப்பது, யாழ்களுக்கு நரம்பு செய்து தருவது தான் இவருடைய வேலை. அவ்வாறு கிடைக்கும் பணத்தை தனக்காகவும், தன் குடும்பத்துக்காக செலவு செய்யாமல் ஈசனுக்கும், ஈசனின் திருப்பணிகளுக்காகவே அனைத்து பணத்தையும் செலவு செய்வார்.

    அந்த காலக்கட்டத்தில் தீண்டத்தகாதவன் என்ற கொடுமையால் அவரால் கோவிலுக்குள் செல்லமுடியாத நிலைமை இருந்தது. அதனால் சிவன் கோவிலின் வாசலில் நின்றபடிதான் சிவபெருமானை நினைத்து வணங்கி உருகுவார். எப்படியாவது கோவிலுக்குள் சென்று இறைவனை வணங்கிவிட வேண்டும் என்று நீண்டகாலமாக ஆசை அவருக்கு இருந்தது. ஆனால் சாதியின் கொடுமை அவரை தடுத்தது.

    மனிதன் சுயலாபத்திற்காக சாதியை உருவாக்கினான். அந்த சாதி தான் பக்திக்கு தடையாக இருந்தது. இந்த நிலையில் ஒருநாள் ஆதனூரை அடுத்துள்ள திருப்பங்கூரில் உள்ள சிவலோகநாதர் திருக்கோவிலில் உள்ள சிவபெருமானை சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது.

    ஆனாலும் அங்கேயும் தீண்டாமை தடுத்தது. ஆனாலும் அங்கு சென்று வணங்கிவிட்டு வரலாம் என்று நேராக அந்த ஊருக்கு சென்றார். நந்தனார். அங்கு சென்று இறைவனை வணங்கினார் நந்தனார். ஆனால் வாசலில் நின்று சிவபெருமானை அவரால் தரிசிக்க முடியவில்லை. காரணம் லிங்கத்தின் முன்பாக இருந்த நந்தி லிங்கத்தை மறைத்து நின்றது.

    அதனைப்பார்த்த நந்தன் சிவபெருமானை பார்க்கமுடியாத ஆதங்கத்தில் அழுதுபுலம்பினார். அப்போது நந்தனின் உன்னதமான பக்தியின் காரணமாக சிவபெருமான் நந்தியை சற்று விலகி இருக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

    உடனே நந்தி வலதுபக்கமாக நகர்ந்தது. உடனே கருவறையில் உள்ள ஆனந்த சுடராய் அருள்வடிவாய் இருந்த சிவபெருமானை கண்டு எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்து இறைவனைக் கண்டு ஆனந்தம் கொண்டார் நந்தனார்.

    இன்றும் இக்கோவிலில் நந்தி பகவான் சற்று விலகியே இருக்கிறார். அதாவது நந்தனாருக்கு தரிசனம் தரவேண்டும் என்பதற்காகவே ஈசன் சொற்படி நந்தி பகவான் வலது பக்கமாக நகர்ந்துள்ளார்.

    இந்த நிகழ்வுக்கு பிறகு சைவ சமயத்தின் மேன்மையான திருக்கோவிலாக கருதப்படும் சிதம்பரம் நடராஜனை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் நந்தனாருக்கு ஏற்பட்டது. ஆனால் இங்கேயும் சாதி குறுக்கே நின்றது. இருந்தாலும் எப்படியாவது தில்லை அம்பலவானனை தரிசிக்க வேண்டும் என்று எண்ணினார். ஆனால் அவரால் தில்லைக்கு செல்லமுடியாமல் போனது. இப்படி பல நாட்கள் சிதம்பரம் நடராஜரின் தரிசனம் நந்தனாருக்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.

    சிதம்பரம் சென்று என் ஈசனை தரிசிக்க முடியாதென்றால் இந்த பூலோகத்தில் இருந்து என்ன பயன் என்று உறுகி நின்றார். இப்படி நந்தனாரின் ஆசை நிறைவேறாமல் தடைபட்டுக்கொண்டே இருந்தது. இப்படி நாளைக்கு சென்றுவிடுவோம் என்று எண்ணி எண்ணி நாட்கள் கடந்துகொண்டே வந்தது. இதுநாளேயே நந்தனார், திருநாளைப்போவார் என்று அழைக்கப்படுகிறார்.

    இந்த நிலை ஒருநாள் தில்லையில் நடனம் பிரியும் நடராஜரை தரிசிக்க சென்றார் நந்தன். தில்லையில் ஊருக்குள் செல்லத்தயங்கிய நந்தன், ஊருக்கு வெளியே நின்று கோபுரத்தை தரிசனம் செய்து பெரும் மகிழ்ச்சி அடைந்தார். கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை என்றால் என்ன சிதம்பரமே சிவன் தானே என்று உணர்ந்து பூமியில் உள்ள மண்ணை கையில் எடுத்து நெற்றியில் திருநீராக பூசிக்கொண்டார்.

    மேலும் ஊருக்கு வெளியிலேயே தங்கி இருந்தார் நந்தனார். அன்று இரவு கோவில் முக்கியஸ்தர்கள் மற்றும் தில்லைவாழ் அந்தணரின் கனவில் தோன்றிய ஈசன், `என் அடியவன், என் பக்தன் நந்தன் ஊருக்கு வெளியே காத்துக்கொண்டிருக்கிறான். அவனை உரிய மரியாதையுடன் என்னிடம் அழைத்து வாருங்கள்' என்றார் ஈசன்.

    மறுநாள் அந்தனர்கள், ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி பூரண கும்ப மரியாதையுடன் நந்தனை கோவிலுக்குள் அழைத்து வந்தனர். அந்த நிலையில் கோவிலுக்குள் நுழையும் போது கூட்டத்தில் இருந்த அந்தணர் ஒருவர், நந்தனர் கோவிலுக்குள் நுழைய எதிர்ப்பு தெரிவித்தார்.

    தாழ்த்தப்பட்டவன் கோவிலுக்குள் நுழைவதை என்னால் ஏற்கமுடியாது. இறைவன் கனவில் சொன்னது உண்மையாகவே இருக்குமானால் இங்கு ஒரு அக்னிபரீட்சை வைத்து தான் நந்தனை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும். நந்தன் அக்னியில் இறங்கி திரும்பிவரட்டும். அதன்பிறகு அவரை கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என்றார் அந்த அந்தணர்.

    அதனை கேட்ட நந்தன் எந்த பதட்டமும், பயமும், அதிர்ச்சியும் அடையவில்லை. என் வாழ்வில் எத்தனையோ அற்புதங்களை செய்த இறைவன் நான் சிதம்பரம் வருவதற்கும் ஒரு அற்புதம் செய்து அனுப்பி இருக்கிறான். இறைவன் கொடுப்பதை யாராலும் தடுக்க இயலாது. இறைவன் சித்தம் இதுவென்றால் நான் எதையும் செய்ய தயார் என்றார் நந்தனார்.

    அங்கு தீ கொளுந்துவிட்டு எரிந்தது. அந்த அக்னிகுண்டத்தில் இறங்கினார் நந்தனார். தீயில் இறங்கி எந்த தீங்கும் இன்றி பட்டாடை உடுத்தி அழகிய தெய்வீகத்தோற்றத்துடன் வெளிப்பட்டார். பின்னர் கோவிலுக்குள் சென்று ஈசனை கண்குளிர கண்டு ரசித்தார். மேலும் கருவறையில் நுழைந்து அங்கு ஒரு தீப்பிழம்பு போல தோன்றி அங்கு ஒரு ஜோதியாய் இறைவனோடு ஐக்கியமானார் நந்தனார்.

    திருநாளைப்போவார் நாயனாரின் குருபூஜை ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று திருநாளைப்போவார் நாயனாரின் குருபூஜை இன்று.

    ×