search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரிமள ரங்கநாதர்"

    • மயிலாடுதுறையில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
    • இத்திருக்கோவில் பஞ்சரங்கதலங்களுள் ஒன்றாகும்.

    ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 வைணவ திருத்தலங்களுள் ஒன்றான திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் கோவில், மயிலாடுதுறையில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இத்திருக்கோவில் பஞ்சரங்கதலங்களுள் ஒன்றாகும். வைணவ தலங்களில் ஐந்து அரங்கங்கள் மிகவும் தொன்மை வாய்ந்தன. அவை திருவரங்கப்பட்டினம் (மைசூர்), திருவரங்கம், கோவிலடி (திருக்காட்டுப்பள்ளி), கும்பகோணம் சாரங்கபாணி, திருஇந்தளூர் (மயிலாடுதுறை) ஆகியவையாகும்.

    இதில் திருஇந்தளுர் பரிமளநாதர் கோவில் ஏகாதசி விரதத்திற்கு உரிய தலம் என்பதால், ஏகாதசி விரதம் இருக்க விரும்புபவர்கள் இத்தலம் வந்து வழிபட்டு விரதம் இருந்தால் விரும்பியது நிறைவேறும் என்பது ஐதீகம். பிரம்மா, எமன், கங்கை, காவிரி, சூரியன், சந்திரன், அம்பரீசன் ஆகியோர் வழிபட்ட தலம் இது.

    பிரம்மதேவனால் வெளிப்பட்ட வேதங்களை, மது - கைடபர் என்னும் அரக்கர்கள் அபகரித்துச் சென்றனர். இதனால் மிகவும் வருந்திய பிரம்மா, பெருமாளை வேண்டினார். அந்த வேதங்களை அரக்கர்களிடம் இருந்து பெருமாள் மீட்டு வந்து வேதங்களுக்கு பரிமளத்தை கொடுத்ததால், இத்தல இறைவன் `பரிமள ரங்கநாதர்' என்று அழைக்கப்படுகிறார். தாயார் பெயர், பரிமள ரங்கநாயகி. இத்தல தீர்த்தம் `இந்து புஷ்கரணி' என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

    ஒரு சமயம் தட்சனால், சந்திரனுக்கு சாபம் ஏற்பட்டது. அந்த சாபத்தில் இருந்து விடுபட சந்திரன், இத்தலத்தில் உள்ள பள்ளிகொண்ட பெருமாளை வழிபட்டார். சந்திரனின் வேண்டுதலுக்கு இறங்கிய பெருமாள், அவருக்கு சாப விமோசனம் அளித்தார். பின்னர் `இத்தலம் எனது பெயராலேயே வழங்கப்பட வேண்டும்' என்று சந்திரன், பெருமாளிடம் கோரிக்கை வைத்தார்.

    அதன்படியே பெருமாள் வரமளித்தார். அதன் காரணமாகவே இத்தலம் `இந்தளூர்' என்று அழைக்கப்படுகிறது. `இந்து' என்பதற்கு `சந்திரன்' என்று பொருள். `இந்து ஊர்' என்பதே 'இந்தளூர்' என்று மருவியதாக சொல்லப்படுகிறது.

    தல வரலாறு

    ஒருகாலத்தில் இந்த பகுதியை அம்பரீசன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் தொடர்ந்து ஏகாதசி விரதம் இருந்து வந்தான். அவன் நூறாவது ஏகாதசி விரதத்தை மேற்கொண்டபோது, அது தேவர்களுக்கு பெரும் கவலையை அளித்தது. குறிப்பாக தேவேந்திரனுக்கு. இந்த விரதத்தை அம்பரீசன் வெற்றிகரமாக முடித்துவிட்டால், அவனுக்கு தேவலோக பதவி கிடைத்துவிடும் என்பதே அவர்களின் கவலைக்கு காரணம்.

    எனவே அவன் விரதத்தை முடிக்கக்கூடாது என்று நினைத்தனர். அதற்காக துர்வாச முனிவரிடம் சென்று தேவர்கள் அனைவரும் முறையிட்டனர். துர்வாச முனிவரும் அம்பரீசனின் விரதத்தை தடுக்கும் பொருட்டு இங்கு வந்தார். அவர் வருவதற்குள் மன்னன் விரதத்தை முடித்து விட்டான். துவாதசி நேரத்தில் மன்னன் உணவு அருந்தியாக வேண்டும். அப்படிச் செய்தால்தான் ஏகாதசி விரதத்தின் பலன் முழுமையாக மன்னனுக்குக் கிடைக்கும்.

    அம்பரீசன் உணவு உண்ண தயாராக இருந்த நேரத்தில் துர்வாச முனிவர் உள்ளே நுழைகிறார். அவரை வரவேற்ற மன்னன் உணவு உண்ண வரும்படி அழைத்தான். துர்வாச முனிவரும் அதற்கு சம்மதித்து நதியில் நீராடி விட்டு வருவதாக கூறிச் சென்றார்.

    ஆனால் துவாதசி நேரம் முடியும் வரை துர்வாச முனிவர் மன்னனின் இருப்பிடம் செல்லக்கூடாது என்று நினைத்தார். முனிவர் வருவதற்குள் உணவருந்தினால் மன்னனுக்கு சாபம் ஏற்படும் என்பதால் அவன், உணவருந்த மாட்டான் என்று நினைத்தார் துர்வாச முனிவர்.

    துவாதசி நேரம் முடிவதற்குள் உணவு அருந்தியாக வேண்டும். ஆனால் முனிவர் வர தாமதமாகிறதே என்று நினைத்த மன்னன், வேதியர்களுடன் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தான். துவாதசி விரதம் முடிய சில நிமிடங்களே இருந்த நிலையில், உள்ளங்கை அளவு தீர்த்தத்தை எடுத்து, அதை மூன்று முறை அருந்தினான். இந்த வகையில் அவன் ஏகாதசி விரதத்தை முழுமையாக நிறைவு செய்தான்.

    இதை அறிந்த துர்வாச முனிவர் கோபத்துடன் ஒரு பூதத்தை வரவழைத்து அம்பரீசனைக் கொல்ல ஆணையிட்டார். அம்பரீசன், பரிமள ரங்கநாதரை சரணடைந்தான். பெருமாள் மிகுந்த கோபத்துடன் பூதத்தை விரட்டினார். இதையடுத்து துர்வாச முனிவர், பெருமாளை பணிந்து மன்னித்து அருள வேண்டினார்.

    பெருமாளும் அவரை மன்னித்தார். நூறு ஏகாதசி விரதத்தை நிறைவு செய்த அம்பரீசனிடம், `பிடித்ததைக் கேள்' என்று பெருமாள் சொன்னார். அதற்கு அம்பரீசன், `தாங்கள் இத்தலத்தில் வீற்றிருந்து பக்தர்களின் குறைகளைக் கேட்டு அருள்புரிய வேண்டும்' என்று வேண்டினான். அதன்படி பெருமாள் இத்தலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.

    கங்கையை விட காவிரி இந்த இடத்தில் புனிதத் தன்மையை அதிகம் பெறுவதாக கருதப்படுகிறது. பரிமள ரங்கநாதர் கோவில், ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. சந்திரன் இக்கோவில் தாயாரான புண்டரிக வல்லியிடம் தன் பாவத்தை போக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ள, பெருமாளும், தாயாரும் சேர்ந்து சந்திரனின் மனக்குறையைப் போக்கியதாக சொல்கிறார்கள்.

    இதனால் இத்தலத்தில் உள்ள தாயாருக்கு `சந்திர பாப விமோசன வல்லி' என்ற பெயர் ஏற்பட்டது. ஒருவரின் பாவம், அவரது குடும்பத்தினர் பாவம், முன்னோர்கள் செய்த பாவம் அனைத்தையும் இத்தலத்தில் வழிபட்டு விலக்கிக் கொள்ள முடியும் என்று தல புராணம் சொல்கிறது.

    கோவில் வாசலில் சந்திர புஷ்கரணி உள்ளது. சந்திரன் இந்த தீர்த்தத்தில் நீராடி தன் சாபம் நீங்கப் பெற்றாராம். பெண் பித்தால் தவறு செய்தவர்கள், பெண்கள் சாபத்திற்கு ஆளானவர்கள், பெண் குழந்தை வேண்டுபவர்கள் இந்த ஆலயம் வந்து வழிபாடு செய்தால், அவர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்கிறார்கள். இத்தலப் பெருமாளின் முகத்தை சந்திரன், பாதத்தை சூரியன், நாபிக் கமலத்தை பிரம்மன் பூஜிப்பதாக வரலாறு. நாபியில் பிரம்மாவும், பெருமாளின் தலை அருகே காவிரியும், திருவடி அருகே கங்கையும் வழிபடுகின்றனர். எமனும், அம்பரீசனும் பெருமாள் திருவடிகளை பூஜை செய்கின்றனர்.

    இத்தலம் வந்து ஏகாதசி அன்று விரதம் இருந்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என நம்பப்படுவதால், ஏராளமான பக்தர்கள் விரதம் இருக்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவுடன் பெருமாளை துளசியால் அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.

    தனி சன்னிதியில் பரிமள ரங்கநாயகி அருள்புரிகிறார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் கொடிமரத்தை வணங்கி, ராமர் சன்னிதி, ஆஞ்சநேயர், கருடன், துவாரபாலகர், ஆழ்வார் சன்னிதி, சக்கரத்தாழ்வார் ஆகியோரை தரிசிக்க வேண்டும். பின்னர் பன்னீர் மரத்தடியில் பெருமாள் விமானத்தை தரிசித்த பின்னர், பரிமள ரங்கநாயகியை வணங்கவேண்டும்.

    அதன்பிறகு உட்பிரகாரம் சென்று ஆண்டாள் உள்ளிட்ட பிற சன்னிதிகளை தரிசனம் செய்த பின்னரே, பரிமள ரங்கநாதரை வணங்க வேண்டும். இவ்வாலயத்தில் மூலவரான பரிமள ரங்கநாதர் 4 திருகரங்களுடன் வீர சயன கோலத்தில், பச்சை நிற திருமேனியுடன் காட்சி தருகிறார். மாதந்தோறும் உத்தரத்தன்று மூலவரின் திருமேனிக்கு சந்தனாதி தைலமும், திருமுகத்துக்கு புனுகு சவ்வாதும் சாத்தப்பட்டு வருகிறது.

    தன்னுடைய சாபம் நீங்கப்பெற்றதால் மகிழ்ச்சி அடைந்த சந்திரன், பங்குனி மாதம் பெருமாளுக்கு பிரமோற்சவம் செய்தார். அதை நினைவுகூரும் பொருட்டு, இன்றும் பங்குனி மாதம்10 நாட்கள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆடி மாதம் ஆடிப்பூர உற்சவம், புரட்டாசி மாதம் 10 நாட்கள் தாயாருக்கு நவராத்திரி உற்சவம் நடைபெறுகிறது.

    பெருமாளுக்கு உகந்த துலாம் மாதத்தில் (ஐப்பசி) காவிரியில் நீராடினால் கங்கையை விட அதிக புண்ணியம் கிடைப்பதாக கூறப்படுவதால், துலா பிரமோற்சவம் இங்கு சிறப்பாக நடத்தப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி உற்சவமும் இங்கே கண்கொள்ளா காட்சியாக நடைபெறும்.

    இந்த ஆலயம் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    மயிலாடுதுறையில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்தளூருக்கு, மயிலாடுதுறையில் இருந்து ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    ×