என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கன்னியா பூஜை"
- 9 நாட்கள் பகலும் இரவும் தொடர்ந்து பூஜை செய்து விரதம் இருக்க வேண்டும்.
- இடைவிடாமல் எரியும் அகண்ட தீபம் ஏற்றி வைத்து அம்பாளை ஆராதனை செய்யலாம்.
நவராத்திரியில் நான்கு வகை உண்டு. ஆனி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் 9 நாட்களை `ஆஷாட நவராத்திரி' என்றும், புரட்டாசி அமாவாசைக்கு பிறகு வரும் ஒன்பது நாட்களை `சாரதா நவராத்திரி' என்றும், தை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரக்கூடிய நவராத்திரியை `மகா நவராத்திரி' என்றும், பங்குனி மாதத்திற்கு பின் அமாவாசைக்கு அடுத்து வரும் நவராத்திரியை `வசந்த நவராத்திரி' என்றும் சொல்வார்கள்.
நவராத்திரி கொண்டாடும் வழக்கம் குறித்து கூறும்பொழுது புரட்டாசி மாதமும், பங்குனி மாதமும் எமதர்ம ராஜாவின் இரண்டு கோரைப் பற்கள் என்று கூறுவார்கள். அனைத்து ஜீவராசிகளும் இந்த பற்களில் அகப்பட்டு துன்பம் இல்லாமல் இருக்க, நவராத்திரி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று அக்னி புராணம் கூறுகிறது.
நான்கு நவராத்திரிகள் இருந்தாலும், பல இடங்களில் பிரசித்தியாக கொண்டாடப்படும் நவராத்திரியாக, புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி உள்ளது. நவராத்திரி பண்டிகையில் 9 நாட்கள் பகலும் இரவும் தொடர்ந்து பூஜை செய்து விரதம் இருப்பது இந்த விழாவின் சிறப்பாகும்.
சுரதன் என்ற மன்னன், தான் ஆட்சி செய்த தேசத்தை நல்ல முறையில் ஆண்டு வந்தான். எல்லாவிதமான தர்மங்களும் தெரிந்த அந்த மன்னனை, மக்கள் அனைவரும் போற்றினர். அந்த நேரத்தில் மலைகள் சூழ்ந்த ஒரு பிரதேசத்தில் இருந்து ஒரு பிரிவினர், சுரத மன்னனின் நாடு மீது படையெடுத்து வந்தனர். சுரத மன்னன் நல்ல வீரனாகவும், போர்த் திறமை மிக்கவனாகவும் இருந்தாலும், சூழ்ச்சியின் காரணத்தால் அந்தப் போரில் தோல்வியடைந்தான்.
தன் மந்திரிகளே தனக்கு எதிராக சூழ்ச்சி செய்ததை அறிந்து வருந்திய மன்னன், தன் நாட்டை விட்டு காட்டிற்குச் சென்றான். அப்போது காட்டில் தவம் செய்து கொண்டிருந்த சுமேதஸ் என்ற மகரிஷியைச் சந்தித்தான். அவரிடம் தன்னுடைய நிலையைச் சொல்லி வருந்தினான். அந்த மகரிஷி மன்னனிடம், `சில நாட்கள் நீ இங்கேயே தங்கி இரு' என்றார்.
அப்படி அவ்விடத்தில் மன்னன் தங்கியிருந்த நேரத்தில், சமாதி என்ற வியாபாரி ஒருவனும் அங்கு வந்து சேர்ந்தான். அவனும் மகரிஷியிடம் `நான் நல்ல முறையில் வியாபாரம் செய்து உறவினர்களுடன் மகிழ்ச்சியாக இருந்தேன். என்னை சேர்ந்த மற்றவர்கள் செய்த சூழ்ச்சியால் அனைத்து செல்வத்தையும் இழந்தேன். என் மனைவி, பிள்ளைகளும் என்னை மதிக்கவில்லை. அதனால் கடன் அதிகமாகி மனம் வருந்தி தனித்து இந்த காட்டை வந்தடைந்தேன்' என்றான்.
பின்னர் மன்னனையும், வியாபாரியையும் பார்த்து, `உங்கள் இருவருக்கும் துயரங்கள் தீர, அற்புதமான தேவியின் மந்திரத்தை உபதேசிக்கிறேன். இந்த வனத்தில் இருந்து ஜெபியுங்கள்' என்றார் மகரிஷி. அவர்களும் தேவியின் அந்த மகா மந்திரத்தை வனத்தில் இருந்து நீண்ட காலம் ஜெபம் செய்தனர். தேவியின் உருவத்தை மண்ணில் செய்து வைத்து வழிபட்டனர்.
அவர்கள் தவத்திற்கு மகிழ்ந்து தேவி அங்கே தோன்றி, `உங்கள் இருவருக்கும் என்ன வேண்டும்?' என்று கேட்டாள். அவர்களும் தங்கள் நிலையை சொல்லி வரம் கேட்டனர். அரசனைப் பார்த்து, `நீ இழந்த ராஜ்ஜியத்தை அடைவாய். அடுத்த ஜென்மத்தில் மனுவாக பிறப்பாய்' என்று வரம் கொடுத்தாள். வியாபாரியை பார்த்து `சம்சார பந்தம் உன்னை விட்டு விலகும். நீ இழந்த செல்வத்தை மீண்டும் பெற்று, நிறைய தான தர்மங்கள் செய்து மோட்சத்தை அடைவாய்' என்றாள்.
அதன்படி சுரத மகாராஜா தன் நாட்டையும், வியாபாரி மோட்சத்தையும் அடைந்தனர். அவர்கள் மண்ணில் அம்மன் உருவை செய்து வைத்த வழிபட்டதன் காரணமாகவே, இன்றும் நாம் நவராத்திரி வேளையில் பொம்மைகளால் கொலுவைத்து வழிபாடு செய்கிறோம்.
விரதம் இருப்பது எப்படி?
13 அத்தியாயங்களும், 700 சுலோகங்களும் கொண்டது, தேவி மகாத்மியம். இதை `சப்த சதி' என்றும் சொல்வார்கள். நவராத்திரியில் இதை முறையாக பாராயணம் செய்வது மிக விசேஷமானது.
யம் யம் சிந்தயதே காமம்
தம் தம் ப்ராப்னோதி நிஸ்சிதம்
இதை படிப்பதால் எதை கேட்கிறோமோ அதை அம்பாள் கொடுப்பதாக ஐதீகம்.
நவராத்திரி ஒன்பது நாட்களில், முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியாகவும், அம்பாளை வழிபாடு செய்வார்கள். 9 நாட்களும் தினமும் சுத்தமாக உபவாசம் இருந்து அம்பாளை அர்ச்சனை செய்வதும், நவாவரண பூஜை செய்வதும், சப்த சதி என்னும் தேவி மகாத்மியத்தை பாராயணம் செய்வதும், சுவாசினி பூஜை செய்வதும், கன்னியா பூஜை செய்வதும், தினமும் லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்வதும், சவுந்தர்ய லஹரி படிப்பதும் மிக விசேஷமானதாகும்.
தினமும் பூஜை செய்ய முடியாவிட்டால் அஷ்டமி அன்றும், மகா நவமி அன்றும் மட்டுமாவது பூஜிப்பது சிறப்பான பலனைத்தரும். நவராத்திரி ஒவ்வொரு நாளும், ஒரு சுஹாசினி மற்றும் ஒரு கன்னியான குழந்தையை வீட்டுக்கு வரவைத்து, அவர்களை அம்மனாக பாவித்து வஸ்திரம், மாலை, வளையல் போன்ற மங்கலகரமான பொருட்களைக் கொடுத்து, அவர்களை சாப்பிட வைத்து அம்பாளாக நமஸ்கரிக்க வேண்டும்.
நவராத்திரி ஒன்பது நாளும் பூஜை அறையில் தெய்வ அருள் தொடர்ந்து இருக்க இடைவிடாமல் எரியும் அகண்ட தீபம் ஏற்றி வைத்து அம்பாளை ஆராதனை செய்யலாம். அவரவர் வசதிக்கேற்ப மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினோறு படிகளில் மண் பொம்மைகளை வைத்து வழிபாடு செய்யலாம். பிளாஸ்டிக் பொம்மைகளை தவிர்ப்பது உத்தமம்.
அம்பாளை இந்த ஒன்பது நாளும் அந்தந்த தினத்திற்கு சொல்லிய கோல மிட்டு, சுண்டல் செய்து, அந்தந்த தினத்திற்குரிய பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்தும், அந்தந்த தினத்திற்குரிய பாடல்களைப் பாடியும், அம்பாளை வழிபாடு செய்தால், நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும், அந்த குடும்பத்தில் உண்டாகும்.
நவராத்திரி அன்று எந்தவித பூஜைகளும் செய்ய முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் அபிராமி அந்தாதியில் வரும் `வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை, பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறைமுடித்த, ஐயன் திருமனை யாள்அடித் தாமரைக்கு அன்புமுன்பு, செய்யும் தவமுடை யார்க்கு உளவாகிய சின்னங்களே' என்ற பாடலையாவது, ஒன்பது நாளும் தொடர்ந்து சொல்லி வர அம்பாளின் அருள் கிடைக்கும்.
சகல சித்திகளையும் தரக்கூடிய `ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே' என்ற நவராதிரி மந்திரத்தையும் உச்சரிக்கலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்