என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடகா உயர் நீதிமன்றம்"

    • மாநில ஆளும் கட்சியாக பா.ஜ.க. இருந்த போது வருமான வரித்துறை சோதனை நடந்தது
    • 2019 செப்டம்பர் மாதம் சிவகுமார் கைது செய்யப்பட்டார்

    கடந்த மே மாதம் முதல், முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோரை உள்ளடக்கிய காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கர்நாடகத்தில் நடைபெற்று வருகிறது.

    கடந்த 2017 ஆகஸ்ட் மாதம், பா.ஜ.க.வின் பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்த போது, இந்திய வருமான வரித்துறை தற்போதைய துணை முதல்வர் டி.கே. சிவகுமாருக்கு தொடர்புடைய புது டெல்லி உட்பட பல இடங்களில் சோதனை நடத்தியது. அதில் ரூ.8 கோடிக்கும் அதிகமாக பணம் கிடைத்ததாகவும் அவரது இல்லத்தில் ரூ.41 லட்சம் கிடைத்ததாகவும் அறிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவுக்கான நீதிமன்றத்தில் அவர் மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு பிரிவில் பதிவு செய்யப்பட்டது. சிவகுமார் மீது உடனடியாக அமலாக்கத்துறையும் (ED) வழக்கு பதிவு செய்தது.

    2019 செப்டம்பர் மாதம் சிவகுமார் கைது செய்யப்பட்டார். பிறகு அவர் ஜாமீனில் வெளிவந்தார்.

    தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக வழக்கு மத்திய புலனாய்வு துறைக்கு (CBI) மாற்றப்பட்டது.

    இதை எதிர்த்து சிவகுமார் தரப்பில் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கை தள்ளுபடி செய்ய கோரியும் விசாரணைக்கு தடை கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    கடந்த ஏப்ரலில் இதன் மீது தீர்ப்பளித்த நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்தாலும், விசாரணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கோரி உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்து சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதில் தலையிட மறுத்த உச்ச நீதிமன்றம், வழக்கை விரைந்து முடிக்குமாறு கர்நாடகா உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

    இந்நிலையில் இன்று, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி சிவகுமார் தாக்கல் செய்திருந்த மனுவை கர்நாடகா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் இத்தீர்ப்பை அளித்த நீதிபதி கே. நடராஜன், வழக்கை விரைந்து நடத்தி 3 மாதங்களுக்குள் இறுதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இந்த நிகழ்வை டிகே சிவகுமாருக்கு ஏற்பட்ட பின்னடைவாக பார்க்கும் அரசியல் விமர்சகர்கள், அவரது துணை முதல்வர் பதவிக்கு சிக்கல் வருவதற்கு அதிகம் வாய்ப்புண்டு எனவும் கருத்து தெரிவித்தனர். காங்கிரஸ் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி இந்தியாவின் 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல் பிரச்சாரங்களில் காங்கிரசுக்கு எதிராக பா.ஜ.கவும் அதன் கூட்டணி கட்சிகளும் இந்த தீர்ப்பை பயன்படுத்தலாம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    முதல் தகவல் அறிக்கையில் சிவகுமார் குடும்பத்தினருக்கு 2013 ஏப்ரலில் சுமார் ரூ.34 கோடி அளவில் இருந்த சொத்து மதிப்பு 2018ல் சுமார் ரூ.163 கோடியாக உயர்ந்ததாகவும் இது அவர்களது வருமானத்திற்கும் அதிகமானது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    • ஒரு பெண் தாக்கல் செய்ததால் மட்டுமே இந்த இடமாற்ற மனுவை ஏற்க முடியாது என்றும், உண்மைகளின் சமநிலையான மதிப்பீடு தேவை என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
    • வழக்கை மாற்றினால் பிரதிவாதி-கணவர் அதிக சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று கண்டறிந்து நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

    கர்நாடகா மாநிலத்தில் பெண் தொடர்ந்த விவாகரத்து வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணையின்போது, சமூகத்தில் பாலின நடுநிலையின் அவசியத்தை வலியுறுத்தி, விவாகரத்து வழக்கை மாற்றக் கோரிய மனைவியின் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் (HC) நிராகரித்துள்ளது.

    ஒரு பெண் தாக்கல் செய்ததால் மட்டுமே இந்த இடமாற்ற மனுவை ஏற்க முடியாது என்றும், உண்மைகளின் சமநிலையான மதிப்பீடு தேவை என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

    நீதிபதி சிலாகூர் சுமலதாவின் ஒற்றை நீதிபதி அமர்வு இதுகுறித்து கூறுகையில், " உண்மையில், பெரும்பாலான சூழ்நிலைகளில் பெண்கள் முதன்மையாக பாதிக்கப்பட்டவர்கள் தான். ஆனால் அதற்காக பெண்களின் கொடுமையால் ஆண்கள் பாதிக்கப்படுவதில்லை என்று அர்த்தமல்ல. எனவே, சமூகத்தில் பாலின-நடுநிலை அவசியம் உள்ளது."

    விவாகரத்து மனுவை, சிக்கமகளூரு மாவட்டம், நரசிம்மராஜபுராவில் உள்ள மூத்த சிவில் நீதிபதி நீதிமன்றத்திலிருந்து, சிவமோகா மாவட்டம், ஹோசனகராவில் உள்ள மூத்த சிவில் நீதிபதி நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு மனுதாரர் மனைவி கோரினார்.

    அந்த மனுவில், "நீதிமன்ற விசாரணைகளில் தவறாமல் கலந்துகொள்வதற்காக தனது வீட்டிலிருந்து நரசிம்மராஜபுரத்திற்கு 130 கிலோமீட்டர் தூரம் வருவதற்கு பல சிரமங்களை எதிர்க்கொள்ள வேண்டி இருப்பதாக" குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனுவை எதிர்த்த கணவர்," தான் ஒன்பது மற்றும் ஏழு வயதுடைய இரண்டு மைனர் குழந்தைகளையும் தன்னுடன் வைத்து வளர்த்து வருகிறேன்.

    வழக்கை மாற்றுவது தனக்கு கூடுதல் சுமைகளை ஏற்படுத்தும் என்றும், இது குழந்தைகளின் வழக்கத்தை சீர்குலைக்கும் என்றும், அன்றாடப் பொறுப்புகளை நிர்வகிப்பதில் தனது சிரமங்கள் அதிகரிக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

    தந்தையின் பராமரிப்பில் இருந்த குழந்தைகளின் நலன் உட்பட ஒட்டுமொத்த சூழ்நிலைகளையும் நீதிமன்றம் மதிப்பிட்ட நிலையில், "மாற்று மனுவை ஒரு பெண் தாக்கல் செய்வதால் மட்டுமே, கோரப்பட்டபடி வழக்கை மாற்ற முடியாது" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

    "பிரதிவாதி- கணவர் குழந்தைகளை கவனித்துக்கொள்வதாலும், குழந்தைகள் அவரது பாதுகாப்பு இருப்பதாலும், நீதிமன்றத்தில் ஆஜராவதில் கணவர் எதிர்கொள்ளும் சிரமம் மனுதாரர் மனைவியை விட அதிகமாக இருக்கும்" என்று கூறி கணவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.

    மேலும், "சமத்துவம் அதன் உண்மையான அர்த்தத்தில் இருக்க வேண்டும், இரு பாலினத்தையும் பாதிக்கக்கூடாது. பெண்களைப் பாதுகாப்பதற்கான நமது முயற்சிகள் எவ்வளவு பாராட்டத்தக்கதாக இருந்தாலும், நமது சமூகத்தில் ஆண்கள் எதிர்கொள்ளும் சவால்களை நாம் கவனிக்காமல் விடக்கூடாது," என்று நீதிமன்றம் குறிப்பிட்டதது.

    இதன் விளைவாக, வழக்கை மாற்றினால் பிரதிவாதி-கணவர் அதிக சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று கண்டறிந்து நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

    • கடன் தொகையை விட கூடுதலான சொத்துகளை ஏலத்தில் விற்றுள்ளனர்.
    • கணக்கு விவரங்களை வழங்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

    பெங்களூரு:

    தொழிலதிபர் விஜய் மல்லையா கிங்பிஷர் ஏர்லைன்ஸ், யுனைடெட் ப்ரூவரிஸ் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வந்தார். இந்நிலையில், வங்கிகளில் வாங்கிய ரூ.9 ஆயிரம் கோடி கடனை திருப்பிச் செலுத்தவில்லை என அவர் மீது புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

    இதனிடையே கடந்த 2016-ம் ஆண்டு விஜய் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    இதனிடையே, அவர் பெற்ற கடனுக்கு ஈடாக அவருடைய நிறுவனத்துக்கு சொந்தமான சொத்துகளை அமலாக்கத் துறை ஏலத்தில் விற்றது.

    இந்த நிலையில் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான சொத்துகளை ஏலத்தில் விற்று ரூ.14 ஆயிரம் கோடி திரட்டப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

    இது தொடர்பாக விஜய் மல்லையா சார்பில் அவரது வக்கீல் சஜன் பூவையா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த 3-ம் தேதி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் "வங்கிகளில் நான் பெற்ற கடனை வசூலிப்பதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.

    இதன்படி, ரூ.6,200 கோடியை செலுத்த வேண்டும் என கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் யுனைடெட் ப்ரூவரிஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனங்களுக்கு கடன் வசூல் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதை செலுத்தாததால், அமலாக்கத் துறை அந்த நிறுவன சொத்துகளை விற்று கடனை திருப்பிச் செலுத்தி உள்ளது.

    ஆனால், ரூ.6,200 கோடி கடனுக்கு சொத்துகளை விற்று ரூ.14 ஆயிரம் கோடி மீட்டுள்ளதாக நிதி மந்திரி கூறி உள்ளார். அதேநேரம், ரூ.10,200 கோடி மீட்கப்பட்டு வங்கிகளிடம் ஒப்படைத்துள்ளதாக கடன் வசூல் அதிகாரி கூறியுள்ளார்.

    எனவே, நான் பெற்ற கடன் தொகையை விட கூடுதலான சொத்துகளை ஏலத்தில் விற்றுவிட்டுள்ளதால் அந்த கணக்கு விவரங்களை வழங்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு நேற்று நீதிபதி ஆர்.தேவதாஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.தேவதாஸ், விஜய் மல்லை யாவின் இந்த மனு குறித்து வருகிற 13-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டார்.

    ×