என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு"
- கவர்னர் மாளிகை அருகே அக். 25-ந்தேதி 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன.
- கவர்னர் மாளிகையில் கிண்டி நுழைவுவாயில் முன்பு பாதுகாப்பு பணியில் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு கடந்த அக்டோபர் மாதம் 25-ந்தேதி பெட் ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரபல ரவுடியான கருக்கா வினோத் 4 பாட்டில்களில் பெட்ரோல்களை நிரப்பிக்கொண்டு கவர்னர் மாளிகையின் பிரதான நுழைவு வாயில் முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசினான்.
இதில் 2 பெட்ரோல் குண்டுகள் வாசல் அருகே சற்று தூரத்தில் விழுந்து வெடித்து சிதறியது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கருக்கா வினோத்தை பிடிக்க முயன்றனர். அப்போது போலீசாரை நோக்கியும் கருக்கா வினோத் பெட்ரோல் குண்டுகளை வீசினான்.
இந்த குண்டுகள் கவர்னர் மாளிகை அருகில் செடிகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் போய் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக போலீசார் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இப்படி பரபரப்பான நேரத்தில் கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசிய ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எழுந்த கோரிக்கையையடுத்து மத்திய அரசு என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட்டது.
கடந்த மாதம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். கருக்கா வினோத்தின் பின்னணியில் சிலர் இருப்பதாகவும் அவர்கள் யார்-யார்? என்பது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஏற்கனவே கோரிக்கை எழுந்திருந்த நிலையில் அது தொடர்பான விசாரணையை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டனர்.
இந்த நிலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட கிண்டி கவர்னர் மாளிகை முன்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
தடயவியல் நிபுணர்களின் துணையுடன் சுமார் 1 மணி நேரம் ஆய்வு செய்த அதிகாரிகள் கருக்கா வினோத் எங்கிருந்து பெட்ரோல் குண்டுகளை வீசினான்? அது எந்தெந்த இடங்களில் போய் விழுந்து வெடித்தது? என்பது போன்ற விவரங்களை கேட்டறிந்தனர்.
இது தொடர்பாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட அன்று பணியில் இருந்த ஆயுதப்படை போலீஸ்காரரான சில்வானுவிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரிடம் கூடுதலாக விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதற்காக காவலர் சில்வானுவை விசாரணைக்காக தங்களுடன் அழைத்துச் சென்றனர். புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெற்றனர். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணையை தீவிரப்படுத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
இதற்கிடையே ரவுடி கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் கருக்கா வினோத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு என்.ஐ.ஏ. அதிகாரிகள் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது கருக்கா வினோத்துக்கு எத்தனை நாட்கள் என்.ஐ.ஏ. காவல் கிடைக்கும் என்பது தெரிய வரும். அதன் பின்னர் கருக்கா வினோத்தை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.
- கிண்டி போலீசாருடன் என்.ஐ.ஏ. போலீசார் ஏற்கனவே விசாரணை நடத்தி விட்டதாக கூறப்படுகிறது.
- தமிழக அரசின் அனுமதி இல்லாமலேயே என்.ஐ.ஏ. போலீசார் விசாரணை நடத்தலாம்.
சென்னை:
சென்னை கிண்டி கவர்னர் மாளிகை அருகே கடந்த மாதம் 25-ந்தேதி 2 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் கருக்கா வினோத் (வயது 42) என்ற ரவுடியை கிண்டி போலீசார் கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளில் கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நீட் தேர்வுக்கு எதிராக இந்த பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டதாக கருக்கா வினோத் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
தற்போது நீதிமன்ற காவலில் புழல் சிறையில் இருக்கும் கருக்கா வினோத் மீது கடந்த வாரம் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவரை ஒரு ஆண்டு சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். சென்னை பா.ஜனதா தலைமை அலுவலகம் மீதும் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு கருக்கா வினோத் மீது ஏற்கனவே நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி என்.ஐ.ஏ. போலீசார் இந்த வழக்கை எடுத்து நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளதாகவும், அதன்படி இந்த வழக்கில் புதிதாக விசாரணையை தொடங்க என்.ஐ.ஏ. திட்டமிட்டு உள்ளதாகவும் நேற்று தகவல் வெளியானது. இந்த தகவலை தமிழக போலீசார் குறிப்பாக சென்னை போலீசார் மறுக்கவில்லை.
இந்த சம்பவம் நடந்தவுடன் கிண்டி போலீசாருடன் என்.ஐ.ஏ. போலீசாரும் ஏற்கனவே விசாரணை நடத்தி விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரபூர்வமாக விசாரணையை தொடங்கும் பட்சத்தில் புதிதாக என்.ஐ.ஏ. போலீசார் வழக்குப்பதிவு செய்வார்கள் என்று தெரிய வந்துள்ளது.
பொதுவாக தமிழக போலீசார் சம்பந்தப்பட்ட வழக்கை விசாரிக்க, தமிழக அரசின் அனுமதி தேவை. ஆனால் முக்கியமான வழக்காக கருதினால், தமிழக அரசின் அனுமதி இல்லாமலேயே என்.ஐ.ஏ. போலீசார் விசாரணை நடத்தலாம்.
அந்த வகையில் இந்த வழக்கை என்.ஐ.ஏ. போலீசார் விசாரணைக்கு எடுத்திருக்கலாம் என்றும், அதுபற்றிய தகவலை மாநில அரசுக்கு கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும் என்றும், ஆனால் அதுபோன்ற கடிதம் எதுவும் வரவில்லை என்றும், தமிழக உயர் போலீஸ் அதிகாரிகள் நேற்று மாலை தெரிவித்தனர்.
ஆனால் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளதாக, கோர்ட்டில் என்.ஐ.ஏ. போலீசார் தெரிவித்து இருக்கலாம் என்றும் அந்த உயர் அதிகாரிகள் கூறினார்கள். எது எப்படி இருந்தாலும், முறைப்படி என்.ஐ.ஏ. போலீசார் எங்களுக்கு தகவல் தெரிவித்து, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சென்னை போலீசாரிடம் இருந்து கட்டாயம் பெற வேண்டும், என்றும் மேலும் அந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
- சிறையில் இருந்து வெளியே வந்த பின் நான் யாரையும் சந்திக்கவில்லை.
- நீட் தேர்வு இருந்தால் தன் மகனின் மருத்துவ கனவு பறிபோகும் என்பதால் பெட்ரோல் குண்டு வீசினேன்.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை வாசல் முன்பு கடந்த 26-ந் தேதி பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ரவுடி கருக்கா வினோத் மதுபோதையில் இந்த செயலை செய்துவிட்டதாக கூறிய போலீசார் 5 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக கவர்னர் மாளிகை சார்பில் அளிக்கப்பட்ட புகாரில் மர்ம நபர்கள் கவர்னர் மாளிகையினுள் ஊடுருவ முயன்றனர் என்று தெரிவித்திருந்தனர். இதற்கு பதில் அளித்த போலீசார் கருக்கா வினோத் மட்டும் தான் கவர்னர் மாளிகைக்கு சென்று பெட்ரோல் குண்டுகளை வாசல் அருகே வீசினார் என்று தெரிவித்திருந்தனர்.
கருக்கா வினோத்தை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது எதற்காக பெட்ரோல் குண்டுகளை வீசினாய்? என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த அவர் நீட் தேர்வு மசோதாவில் கவர்னர் கையெழுத்து போட மறுப்பதால் மாணவ-மாணவிகள் பலர் பாதிக்கப்படுகிறார்கள். எனவே தான் பெட்ரோல் குண்டு வீசினேன் என கூறி இருந்தான்.
இருப்பினும் கருக்கா வினோத்தின் பின்னணியில் யாரும் இருக்கிறார்களா? என்பது பற்றி போலீசார் முழுமையாக விசாரணை நடத்த திட்டமிட்டனர். இதற்காக கருக்கா வினோத்தை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்து சைதாப்பேட்டை கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது கருக்கா வினோத் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அவர் கோஷம் எழுப்பினார். 3 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து போலீசார் கருக்கா வினோத்தை அழைத்துச்சென்று ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர். போலீசில் கருக்கா வினோத் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
பாரதிய ஜனதா அலுவலகத்தில் கடந்த ஆண்டு பெட்ரோல் குண்டுகளை வீசிய வழக்கில் சிறையில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் வெளியில் வந்தேன். பின்னர் வீட்டுக்கு சென்று ஏன் என்னை வந்து பார்க்கவில்லை என கூறி எனது தாயிடம் கேட்டு தகராறு செய்தேன். இதன் பிறகு நண்பர்களோடு வெளியில் சுற்றினேன். நீட் தேர்வில் மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. இது தொடர்பான மசோதாவில் கவர்னர் கையெழுத்து போடாமல் இருப்பது கோபத்தையும் ஏற்படுத்தியது. தனது மகன் தற்போது 6-வது வகுப்பு படித்து வருகிறான். அவனை டாக்டராக ஆசைப்படுகிறேன். ஆனால் நீட் தேர்வு அதற்கு தடையாக இருக்குமோ? என்று அஞ்சினேன். இதுபோன்ற காரணங்களாலேயே கவர்னர் மாளிகை நோக்கி பெட்ரோல் குண்டுகளை வீசினேன்.
சிறையில் இருந்து வெளியில் வந்தபோது 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' அமைப்பினரோடு நானும் வெளியில் வந்தேன். ஆனால் அவர்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இவ்வாறு கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்திருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. கருக்கா வினோத்தின் போலீஸ் காவல் நாளையுடன் முடிகிறது. இன்று 2-வது நாளாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நாளை பிற்பகலில் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ள கருக்கா வினோத் பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.
- கருக்கா வினோத்தை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
- சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.
சென்னை :
கிண்டி கவர்னர் மாளிகை வாசல் முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ரவுடி கருக்கா வினோத்தின் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார் என்பது பற்றிய விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக கருக்கா வினோத்திடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் அவரை காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்தனர்.
இதையடுத்து கருக்கா வினோத்தை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், கருக்கா வினோத்தை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினர்.
முன்னதாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கருக்கா வினோத்தை அழைத்து வந்தபோது, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அவர் முழக்கமிட்டார்.
- பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார் என்பது பற்றிய விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
- கருக்கா வினோத்திடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் அவரை காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
சென்னை:
கிண்டி கவர்னர் மாளிகை வாசல் முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ரவுடி கருக்கா வினோத்தின் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார் என்பது பற்றிய விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக கருக்கா வினோத்திடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் அவரை காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
கருக்கா வினோத்தை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நாளை மறுநாள் (30-ந் தேதி) நடைபெற உள்ளது.
அன்றுதான் கருக்கா வினோத்துக்கு எத்தனை நாட்கள் போலீஸ் காவல் கிடைக்கும் என்பது தெரியும்.
- கவர்னர் மாளிகை தெரிவித்தது போல ஒன்றுக்கும் மேற்பட்ட மர்மநபர்கள் வரவில்லை.
- கவர்னர் மாளிகை காவலர்கள் யாரும் அவரை பிடிக்கவில்லை.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று முன்தினம் பிற்பகலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கவர்னர் மாளிகை தாக்குதல் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கவர்னர் மாளிகை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் விரிவான அறிக்கையை நேற்று மாலை வெளியிட்டார். அதில் கவர்னர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள டி.ஜி.பி. கவர்னர் மாளிகைக்கும், கவர்னருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கி வருவதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால், கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், கவர்னர் மாளிகை தரப்பில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் சென்று பெட்ரோல் குண்டை வீசி சென்றதாக கூறப்படும் டுவிட்டர் பதிவு இடம் பெற்று இருந்தது.
இதன் பின்னர் கருக்கா வினோத் தனியாக கையில் ஒரு பையை எடுத்துக் கொண்டு செல்லும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. நந்தனம் சிக்னலில் இருந்து சைதாப்பேட்டை வழியாக கவர்னர் மாளிகைக்கு நடந்தே சென்று கருக்கா வினோத் பெட்ரோல் குண்டுகளை வீசும் காட்சிகளும் போலீசார் அவனை மடக்கி பிடிக்கும் காட்சிகளும் பரபரப்பு ஏற்படுத்தும் வகையில் இடம்பெற்று இருந்தன.
இது தொடர்பாக கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கூறும்போது, "கவர்னர் மாளிகை தெரிவித்தது போல ஒன்றுக்கும் மேற்பட்ட மர்மநபர்கள் வரவில்லை. கருக்கா வினோத் மட்டுமே வந்து பெட்ரோல் பாட்டில்களை வீசி உள்ளார். அவர் உள்ளே நுழைவதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. கவர்னர் மாளிகை காவலர்கள் யாரும் அவரை பிடிக்கவில்லை. போலீசார் 5 பேர்தான் கருக்கா வினோத்தை பிடித்துள்ளனர்" என்றார்.
- கவர்னர் மாளிகை முன்பு தாக்குதல் என்பது அரசியல் அமைப்பின் மீது நடத்திய தாக்குதல்.
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருந்தாலும் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மாட்டோம்.
நெல்லை:
நெல்லை வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை இன்று சந்தித்தபோது கூறியதாவது:-
தமிழக கவர்னர் இல்லம் முன்பாக பெட்ரோல் குண்டு வீசிய வினோத் என்பவரை தி.மு.க. வழக்கறிஞர்கள் 2 பேர் தான் ஜாமின் எடுத்துள்ளனர். ஜாமின் எடுத்த இசக்கி பாண்டியன் மற்றும் நிசிந்த் 2 பேரும் தி.மு.க.வில் பொறுப்பில் உள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய் உள்ளது.
தமிழக ஆளுநருக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. அப்படி இருக்கும்போது சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு என்பது மிகப்பெரிய கேள்விக்குறி ஆகி உள்ளது. ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசுவதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. பெட்ரோல் குண்டு வீசியவனுக்கு பின்னணியில் யார்? இருக்கிறார்கள். அந்த குற்றவாளியின் பின்புலம் என்ன என்பதை சி.பி.ஐ. விசாரித்தால்தான் முழுமையாக உண்மை நிலவரம் தெரியவரும்.
கோவையில் பாலஸ்தீன கொடியை ஏற்றுகிறார்கள். தமிழக காவல்துறை இதையெல்லாம் வேடிக்கை பார்க்காமல் துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும். கவர்னர் மாளிகை முன்பு தாக்குதல் என்பது அரசியல் அமைப்பின் மீது நடத்திய தாக்குதல். தி.மு.க.வினருக்கு அரசியல் அமைப்பின் மீது நம்பிக்கை கிடையாது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருந்தாலும் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மாட்டோம். கடந்த 9 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் இதுவரை எந்த மாநில அரசுகள் மீதும் கை வைத்ததில்லை. 356 பிரிவை பயன்படுத்தும் எண்ணம் இந்த அரசுக்கு கிடையாது. தமிழகத்தில் இன்று அரசியல் அமைப்பு சட்டம் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
தமிழக கவர்னர் மாளிகை வெளியே தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதற்கு காவல்துறையை பொறுப்பில் வைத்துள்ள தமிழக முதலமைச்சர் தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
- போலீசாரின் அலட்சியம் காரணமாக பாதுகாப்பு சீர்குலையும் அளவுக்கு சென்றுள்ளது என்று கவர்னர் மாளிகை தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- கவர்னருக்கும், கவர்னர் மாளிகைக்கும் தமிழ்நாடு காவல்துறையினரால் உரிய பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக கடந்த 2 நாட்களாக கவர்னர்-தமிழக காவல்துறை இடையே காரசாரமான அறிக்கை மோதல்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த விவகாரத்தில் கவர்னர் கேட்பது என்ன? காவல்துறை தரப்பில் கூறி வரும் விளக்கம் என்ன? என்பதை பார்க்கலாம்.
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக கவர்னர் மாளிகை தரப்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரில் பரபரப்பான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு உள்ளன.
* கவர்னர் மீது கடுமையான தாக்குதல் நடந்துள்ளதாகவும், 1-ம் எண் வாயில் வழியாக பெட்ரோல் குண்டுகளுடன் மர்மநபர்கள் ஊடுருவ முயன்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கு பதில் அளித்து உள்ள காவல்துறையினர் கவர்னர் மாளிகையினுள் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் நுழைய முற்பட்டதாகவும் பெட்ரோல் குண்டு வெடித்தது என்று சொல்வதும் உண்மைக்கு புறம்பானது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
* தி.மு.க. தலைவர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பொதுக்கூட்டம் மற்றும் சமூக வலைதளங்கள் வழியாக அவதூறாக மிரட்டல் விடுத்து பேசி வருகிறார்கள். தர்மபுரம் ஆதின நிகழ்ச்சியில் கவர்னர் பங்கேற்க சென்ற போது கல்-தடியால் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் இது தொடர்பாக புகார் அளித்தும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கு காவல் துறை அளித்துள்ள விளக்கத்தில் கவர்னரின் வாகனம் தாக்கப்பட்டது என்றும், அது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறி இருப்பது உண்மைக்கு புறம்பானது. கவர்னரின் வாகனம் சென்ற பிறகே சிலர் கருப்புக் கொடிகளை சாலையில் வீசினார்கள்.
இதுதொடர்பாக மயிலாடுதுறை போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 73 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* கவர்னர் மாளிகை மீது நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக கமிஷனர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகாரில் 124 ஐ.பி.சி. பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய கூறி இருந்த போதிலும் அவசர கதியில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நாசக்கார செயலாக வழக்கை நீர்த்துப் போகச் செய்துள்ளனர் என்று கவர்னர் மாளிகை தரப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதற்கு பதில் அளித்து உள்ள காவல் துறையினர், காவலர்கள் விழிப்புடன் இருந்து செயல்பட்டதால் குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், வழக்கில் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
124 சட்டப்பிரிவு தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் அளித்துள்ள விளக்கத்தில் தேவைப்பட்டால் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
* போலீசாரின் அலட்சியம் காரணமாக பாதுகாப்பு சீர்குலையும் அளவுக்கு சென்றுள்ளது என்று கவர்னர் மாளிகை தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு விளக்கம் அளித்துள்ள போலீசார் கவர்னருக்கும், கவர்னர் மாளிகைக்கும் தமிழ்நாடு காவல்துறையினரால் உரிய பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- பா.ஜனதா அலுவலகம் முன்பு இதே போல் தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த வினோத்தை பா.ஜனதா வக்கீல் ஜாமினில் எடுத்துள்ளது வேறொரு சந்தேகத்தை கிளப்புகிறது.
- சட்டத்துறை அமைச்சர் சிறிதேனும் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
சென்னை:
கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் கைதான கருக்கா வினோத்தை சிறையில் இருந்து ஜாமினில் எடுத்தது பாரதிய ஜனதா கட்சி வக்கீல்தான் என்று தி.மு.க. கூறி இருந்தது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தி.மு.க.வினரே கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இரு தரப்பினரும் வார்த்தைகளில் மோதிக்கொண்டுள்ளனர்.
இதுதொடர்பாக அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
கவர்னர் மாளிகை நுழைவாயில் முன்பு எரிபொருள் நிரப்பிய புட்டியை வீசிய புகாரில் கைது செய்யப்பட்டு உள்ள கருக்கா வினோத் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. இவரை சிறையில் இருந்து ஜாமினில் எடுத்த வழக்கறிஞர் பா.ஜனதாவில் இருப்பதாக ஒரு தகவல் வெளியானது.
ஏற்கனவே பா.ஜனதா அலுவலகம் முன்பு இதே போல் தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த வினோத்தை பா.ஜனதா வக்கீல் ஜாமினில் எடுத்துள்ளது வேறொரு சந்தேகத்தை கிளப்புகிறது. இந்த கோணத்திலும் போலீசார் தீவிரமாக தனது விசாரணையை விரிவுப்படுத்தி இருக்கிறது.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
தி.மு.க. ஐ.டி. பிரிவு சார்பில் வெளியிட்டுள்ள பதிவில், "கவர்னர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை முந்தைய வழக்கில் ஜாமினில் எடுத்த திருவாரூர் மாவட்ட பா.ஜனதா வக்கீல் பிரிவு செயலாளர் முத்தமிழ் செல்வக்குமார். அம்பலமான பா.ஜனதாவின் தனக்குத்தானே வெடிகுண்டுத் திட்டம்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே பாரதிய ஜனதா வெளியிட்டுள்ள டுவிட்டர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய கருக்கா வினோத் என்ற நபரை சிறையில் இருந்து ஜாமினில் வெளியே கொண்டு வந்தது தி.மு.க. நிர்வாகிகள் இசக்கி பாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவர் என்பது தெரிய வருகிறது. பா.ஜனதா வக்கீல் என்று பரப்பப்படும் முத்தமிழ்செல்வன் என்பவர் தமிழக பா.ஜனதா கட்சி பொறுப்பில் இருந்து 2021-ம் ஆண்டே விலகி விட்டார்.
அது மட்டும் அல்லாது தி.மு.க. நிர்வாகிகள் இசக்கி பாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவரும் முத்தமிழ் செல்வனிடம் அனுமதி பெறாமல் அவரது பெயரை பயன்படுத்தி ஜாமின் பத்திரத்தில் கையெழுத்து போட்டுள்ளனர் என்று செய்திகளும் வருகிறது.
தன் மீதே பல ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டு ஊழல் தடுப்புப் பிரிவைக் கையாளும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மூன்றாம் தர இணைய ஊடகங்களை போல பொய்ச் செய்திகளை பரப்பிக் கொண்டு இருக்கிறார்.
நீதிமன்ற வளாகத்திலேயே கொலைகள் நடப்பது முதல் தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கையில், சட்டத்துறை அமைச்சர் சிறிதேனும் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்தது யார்? என்கிற விவகாரத்தில் தி.மு.க-பா.ஜனதா இடையே சமூக வலைதளங்களில் வார்த்தை போர் முற்றியுள்ளது.
- கருக்கா வினோத்தின் பின்னணி பற்றி அதிரடியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த 2021-ம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு அவருக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றுள்ளன.
சென்னை:
கிண்டி கவர்னர் மாளிகை வாசல் முன்பு ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டுகளை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அவரது பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
ரவுடி கருக்கா வினோத் கடந்த ஆண்டு பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டை வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் அவர் சிறையில் இருந்து வெளியில் வந்து உள்ளார்.
இதன் பிறகுதான் கவர்னர் மாளிகை வாசல் முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசி கைதாகி இருக்கிறார். சிறையில் இருந்து வெளிவந்த பிறகு கருக்கா வினோத் கடந்த 3 நாட்களில் எங்கெங்கு சென்றார்? யாரையெல்லாம் சந்தித்தார்? என்பது போன்ற தகவல்களை திரட்டி வருகிறார்கள்.
இதுதொடர்பாக கவர்னர் மாளிகை பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் பெட்ரோல் குண்டுகளை வீசுவதற்கு கருக்கா வினோத் மட்டுமே வந்திருப்பது தெரியவந்துள்ளது.
இருப்பினும் கருக்கா வினோத் கடந்த 3 நாட்களில் எந்தெந்த பகுதிக்கு சென்று உள்ளார் என்பது பற்றி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருக்கா வினோத்தின் பின்னணியில் இருக்கும் நபர்கள் யார்-யார்? என்பதை கண்டுபிடித்து அவர்களையும் தண்டிக்க வேண்டும் என்று கவர்னர் மாளிகை தரப்பில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதே கருத்தை பாரதிய ஜனதா கட்சியினரும் கூறி வருகிறார்கள். கருக்கா வினோத் மட்டுமே கவர்னர் மாளிகை வாசலில் நடந்த பெட்ரோல் குண்டு தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை இதுதொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மத்திய மந்திரி எல்.முருகன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆகியோர் கூறியுள்ளனர்.
இப்படி கவர்னர் மாளிகை மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் கூறி இருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நேற்று விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
அதில் கருக்கா வினோத் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன? என்பதை பட்டியலிட்டு உள்ளார். கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போதிலும் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் தொடர்பாக தொடர்ந்து முழுமையாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படியே கருக்கா வினோத்தின் பின்னணி பற்றி அதிரடியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கருக்கா வினோத் மட்டுமே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டாரா? வேறு யாரும் அவருக்கு உதவி செய்துள்ளனரா? இதில் யார்-யாருக்கு தொடர்பு உள்ளது? என்பது பற்றிய தகவல்களை போலீசார் திரட்டி வருகிறார்கள்.
கருக்கா வினோத் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியதாக ஏற்கனவே 3 வழக்குகள் உள்ளன. இது 4-வது வழக்காகும்.
கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த 2021-ம் ஆண்டு பொறுப்பேற்ற பிறகு அவருக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றுள்ளன.
ஆனால் அந்த போராட்டங்கள் எல்லாம் அமைதியாக நடந்து முடிந்துள்ள நிலையில் கருக்கா வினோத் பெட்ரோல் குண்டுகளை வீசி கைதானவுடன் அளித்த வாக்குமூலத்தில் நீட் தேர்வு விவகாரத்தில் கவர்னர் நடந்து கொள்வது பிடிக்காத காரணத்தாலேயே பெட்ரோல் குண்டை வீசியதாக தெரிவித்து உள்ளார்.
இது அவராக அளித்த வாக்குமூலம் தானா? திட்டமிட்டு பெட்ரோல் குண்டுகளை வீச செய்துவிட்டு அதுபோன்று வாக்குமூலம் அளிப்பதற்கு யாரும் தூண்டுதலாக இருந்தார்களா? என்பது பற்றிய சந்தேகமும் உள்ளது. இதனை தெளிவுப்படுத்தும் வகையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- தமிழக கவர்னர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
- தண்டனைகள் கடுமையாகும்போது தான் குற்றச்செயல்கள் குறையும்.
சென்னை:
பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
சென்னை கிண்டியிலுள்ள தமிழக கவர்னர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதை எதிர்க்கட்சிகள் பலமுறை சுட்டிக்காட்டியும் ஆளும் தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வந்ததின் விளைவாகதான் ஆளுனர் மாளிகை வாசலில் குண்டு வெடித்துள்ளது.
இந்த குண்டு வெடிப்புக்கு காரணமான உண்மை குற்றவாளியையும் அதற்கு காரணமாக மூளையாக இருந்து செயல்பட்ட சமூக விரோதியையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். தண்டனைகள் கடுமையாகும் போது தான் குற்றச்செயல்கள் குறையும் என்பதை அரசு புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கருக்கா வினோத்தை பிடிக்க சென்ற போலீசார் மீதும் கருக்கா வினோத் இன்னொரு பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து வீசினார்.
- கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் பெட்ரோல் குண்டுகள் விழுந்து வெடிக்கவில்லை என்பது போன்றே தகவல்கள் பரவி வந்தன.
சென்னை:
சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டுகளை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தின் போது நடந்தது என்ன? என்பது பற்றிய அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
கிண்டி போலீஸ் நிலையத்தில் கருக்கா வினோத் மீது போடப்பட்டு உள்ள எப்.ஐ.ஆரில் இடம் பெற்றுள்ள விவரங்கள் வருமாறு:-
கவர்னர் மாளிகையில் பிரதான நுழைவு வாயிலான எண்.1-ல் போலீசார் பணியில் இருந்த போது, கருக்கா வினோத் என்பவர் எதிரில் உள்ள நடைபாதையில் இருந்து 2 பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலில் (பெட்ரோல் குண்டு) தீப்பற்ற வைத்து வீசினார். முதல் பாட்டில் நுழைவு வாயில் முன்பு வைக்கப்பட்டிருந்த தடுப்பு (பேரி கார்டு) அருகே வந்து விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்து தீப்பற்றி எரிந்தது.
அப்போது கருக்கா வினோத்தை பிடிக்க சென்ற போலீசார் மீதும் கருக்கா வினோத் இன்னொரு பெட்ரோல் பாட்டிலில் தீ வைத்து வீசினார். அது அருகில் உள்ள பூந்தோட்ட தடுப்பு சுவர் மீது விழுந்தது. அப்போது போலீசாரை பார்த்து என்னை பிடிக்க வந்தீர்கள் என்றால் உங்க மேலேயும் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீசி விடுவேன் என்று கருக்கா வினோத் மிரட்டல் விடுத்தார்.
இவ்வாறு எப்.ஐ.ஆரில் பரபரப்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
கிண்டி கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் பெட்ரோல் குண்டுகள் விழுந்து வெடிக்கவில்லை என்பது போன்றே தகவல்கள் பரவி வந்தன. இந்த நிலையில் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்களை பார்க்கும் போது கவர்னர் மாளிகை அருகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தும் வகையிலேயே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அரங்கேறி இருப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
இதற்கிடையே கவர்னர் இந்த சம்பவம் தொடர்பாக 124 ஐ.பி.சி. (கவர்னர் மீது தாக்குதல்) சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வாய்ப்பு உள்ளதா? என்பது பற்றி போலீசாரிடம் கேட்டபோது அதுபற்றி சட்ட நிபுணர்களுடன் ஆலோசிதது முடிவு எடுக்க இருப்பதாக தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்