search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரவுடி கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்தது தி.மு.க.வினர்: பா.ஜனதா குற்றச்சாட்டு
    X

    ரவுடி கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்தது தி.மு.க.வினர்: பா.ஜனதா குற்றச்சாட்டு

    • பா.ஜனதா அலுவலகம் முன்பு இதே போல் தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த வினோத்தை பா.ஜனதா வக்கீல் ஜாமினில் எடுத்துள்ளது வேறொரு சந்தேகத்தை கிளப்புகிறது.
    • சட்டத்துறை அமைச்சர் சிறிதேனும் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.

    சென்னை:

    கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் கைதான கருக்கா வினோத்தை சிறையில் இருந்து ஜாமினில் எடுத்தது பாரதிய ஜனதா கட்சி வக்கீல்தான் என்று தி.மு.க. கூறி இருந்தது.

    அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தி.மு.க.வினரே கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இரு தரப்பினரும் வார்த்தைகளில் மோதிக்கொண்டுள்ளனர்.

    இதுதொடர்பாக அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    கவர்னர் மாளிகை நுழைவாயில் முன்பு எரிபொருள் நிரப்பிய புட்டியை வீசிய புகாரில் கைது செய்யப்பட்டு உள்ள கருக்கா வினோத் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. இவரை சிறையில் இருந்து ஜாமினில் எடுத்த வழக்கறிஞர் பா.ஜனதாவில் இருப்பதாக ஒரு தகவல் வெளியானது.

    ஏற்கனவே பா.ஜனதா அலுவலகம் முன்பு இதே போல் தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த வினோத்தை பா.ஜனதா வக்கீல் ஜாமினில் எடுத்துள்ளது வேறொரு சந்தேகத்தை கிளப்புகிறது. இந்த கோணத்திலும் போலீசார் தீவிரமாக தனது விசாரணையை விரிவுப்படுத்தி இருக்கிறது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    தி.மு.க. ஐ.டி. பிரிவு சார்பில் வெளியிட்டுள்ள பதிவில், "கவர்னர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை முந்தைய வழக்கில் ஜாமினில் எடுத்த திருவாரூர் மாவட்ட பா.ஜனதா வக்கீல் பிரிவு செயலாளர் முத்தமிழ் செல்வக்குமார். அம்பலமான பா.ஜனதாவின் தனக்குத்தானே வெடிகுண்டுத் திட்டம்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே பாரதிய ஜனதா வெளியிட்டுள்ள டுவிட்டர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய கருக்கா வினோத் என்ற நபரை சிறையில் இருந்து ஜாமினில் வெளியே கொண்டு வந்தது தி.மு.க. நிர்வாகிகள் இசக்கி பாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவர் என்பது தெரிய வருகிறது. பா.ஜனதா வக்கீல் என்று பரப்பப்படும் முத்தமிழ்செல்வன் என்பவர் தமிழக பா.ஜனதா கட்சி பொறுப்பில் இருந்து 2021-ம் ஆண்டே விலகி விட்டார்.

    அது மட்டும் அல்லாது தி.மு.க. நிர்வாகிகள் இசக்கி பாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவரும் முத்தமிழ் செல்வனிடம் அனுமதி பெறாமல் அவரது பெயரை பயன்படுத்தி ஜாமின் பத்திரத்தில் கையெழுத்து போட்டுள்ளனர் என்று செய்திகளும் வருகிறது.

    தன் மீதே பல ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டு ஊழல் தடுப்புப் பிரிவைக் கையாளும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மூன்றாம் தர இணைய ஊடகங்களை போல பொய்ச் செய்திகளை பரப்பிக் கொண்டு இருக்கிறார்.

    நீதிமன்ற வளாகத்திலேயே கொலைகள் நடப்பது முதல் தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கையில், சட்டத்துறை அமைச்சர் சிறிதேனும் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்தது யார்? என்கிற விவகாரத்தில் தி.மு.க-பா.ஜனதா இடையே சமூக வலைதளங்களில் வார்த்தை போர் முற்றியுள்ளது.

    Next Story
    ×