என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புண்ணிய தீர்த்தம்"
- ஐப்பசி மாதம் காவிரியில் நீராடுவது 'துலா ஸ்நானம்'
- 14 உலகங்களில் உள்ள புண்ணிய தீர்த்தங்களின் தேவதைகளும் சங்கமம் ஆவதாக ஐதீகம்
ஐப்பசி மாதம் காவிரி நதியில் நீராடுவதை 'துலா ஸ்நானம்' என்று கூறுவார்கள். துலா மாதமான ஐப்பசி மாதத்தில், உலகில் உள்ள 66 கோடி தீர்த்தங்களும், 14 உலகங்களில் உள்ள புண்ணிய தீர்த்தங்களின் தேவதைகளும், காவிரி நதியில் சங்கமம் ஆவதாக ஐதீகம். அன்றைய தினம் மயிலாடுதுறை மயூரநாதர் திருக்கோவில் முன்பு உள்ள தீர்த்தத்தில் நீராடுவது சிறப்புக்குரியது.
புண்ணிய நதிகளில் நீராடினால் தங்களின் பாவங்கள் போகும் என்ற நம்பிக்கையில், பலரும் புனித தீர்த்தங்களில் நீராடி வருகிறார்கள். அப்படி தங்களை நாடி வருபவர்களின் பாவங்களைப் போக்கி, அந்த பாவங்களை புண்ணிய நதிகள் ஏற்றுக்கொள்கின்றன.
இதனால் அனைத்து பாவங்களையும் சுமந்து மாசுபட்டு நிற்கும் புண்ணிய நதிகள் அனைத்தும், ஒவ்வொரு ஆண்டும் துலா மாதம் என்னும் ஐப்பசியில், மயிலாடுதுறையில் உள்ள துலா கட்ட காவிரியில் நீராடி தங்களின் பாவங்களைப் போக்கிக் கொள்வதோடு, தங்களை மென்மேலும் புனிதப்படுத்திக் கொள்வதாக ஐதீகம்.
அப்படி அனைத்து புண்ணிய நதிகளும் வசிக்கும் காவிரியில், ஐப்பசி மாதம் முழுவதும் சூரிய உதயமாகி, 6 நாழிகைக்குள் நீராட வேண்டும். அதாவது சூரியன் உதயமாகி 2 மணி நேரத்திற்குள் காவிரியில் நீராட வேண்டும். துலா மாதத்தில் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், 68 ஆயிரம் ரிஷிகளும், முனிவர்களும் கூட காவிரியில் நீராடுவதாக சொல்லப்படுகிறது. எனவே ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவதை சிறப்பான ஒன்றாக கருதுகிறார்கள்.
ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவிரியில் நீராட வேண்டும். அவ்வாறு செய்ய முடியாதவர்கள், ஐப்பசி மாதம் கடைசி நாள் அன்றாவது மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் நீராடி, மயிலாடுதுறை அபயாம்பிகை சமேத மயூரநாதர் கோவிலுக்குள் சென்று இறைவனையும், இறைவியையும் வழிபட வேண்டும். ஐப்பசி கடைசி நாள் நீராடலை, "கடை முழுக்கு' என்று அழைக்கின்றனர்.
திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்களிலும். திருநாவுக்கரசர் ஒரு பதிகத்திலும் மயூரநாதரைப் போற்றி பாடியுள்ளனர்.
கோவிலின் முதல் சுற்று பிரகாரத்தில் தென்கிழக்கு திசையில் மயிலம்மன் சன்னிதி இருக்கிறது. இத்தலத்தில் அம்மன். மயில் வடிவில் தாண்டவம் ஆடி ஈசனை வழிபட்டதால். இத்திருத்தலத்திற்கு 'மயிலாடுதுறை' என்று பெயர் வந்தது. ஐப்பசி திருவிழாவின் ஐந்தாம் நாளில் சிவன்- பார்வதி இருவரும் ஆடிய மயூர தாண்டவத்தை இங்கு தரிசிக்கலாம். இங்குள்ள நடராஜப்பெருமான், மயூர தாண்டவ கோலத்தில் அருள்பாலிக்கிறார். தினமும் மாலையில், இந்த நடராஜருக்குத் தான் முதல் பூஜை செய்யப்படும்.
முடவன் முழுக்கு
ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியின் துலா கட்டத்தில் நீராடினால் நன்மைகள் கிடைக்கும். பாவங்கள் விலகும் என்பதால், அந்த நாளில் நீராட ஒரு சிவ பக்தர் நினைத்தார். ஆனால் அவரால் நினைத்தபடி ஐப்பசி மாதத்தில் காவிரி துலா கட்டத்தில் நீராட முடியவில்லை. அந்த சிவ பக்தர், ஒரு கால் பலகீனமான மாற்றுத் திறனாளி. அந்த பக்தர் காவிரி துலா கட்டத்திற்கு வருவதற்குள், ஐப்பசி மாத இறுதி நாளில் நடைபெறும் கடைமுக தீர்த்தவாரி நடைபெற்று முடிந்து விட்டது.
அப்போது அவர் சிவபெருமானை நினைத்து தன் வேதனையை வெளிப்படுத்தினார். "இறைவா.. ஐப்பசி மாதத்தில் இந்த தீர்த்தத்தில் நீராட வேண்டும் என்ற என்னுடைய ஆசை நிறைவேறவில்லையே" என்று புலம்பினார். அப்போது சிவபெருமான் அசரீரியாக தோன்றி, `கார்த்திகை முதல் நாளில் நீ, இந்த துலா கட்டத்தில் நீராடு. ஐப்பசி மாதத்தில் இந்த தீர்த்தத்தில் நீராடினால் என்ன பலன்கள் கிடைக்குமோ, அந்த பலன்கள் அனைத்தும் உனக்கும் கிடைக்கும்" என்று அருளினார்.
அதன்படி கார்த்திகை மாத முதல் நாளில், அந்த சிவபக்தர் தீர்த்த நீராடி பலன்களை அடைந்தார். எனவே இந்த நிகழ்வு கார்த்திகை முதல் நாளில் 'முடவன் முழுக்கு' என்ற பெயரில் நடைபெறுகிறது. இந்த தினத்திலும் பக்தர்கள் காவிரி தீர்த்தத்தில் நீராடினால், உரிய பலன்கள் கிடைக்கும்.
அமைவிடம்
மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அபயாம்பிகை உடனுறை மயூர்நாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்