search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நூல் உற்பத்தி ஆலைகள்"

    • கடந்த ஒரு ஆண்டு காலமாக விசைத்தறி காடா துணி ஏற்றுமதி தேக்கம் அடைந்ததால் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு துணிக்கு விலை கிடைக்கவில்லை.
    • தமிழ்நாடு அரசு உயர்த்திய மின் கட்டணத்தை உடனடியாக குறைத்து பழைய மின் கட்டணத்தை அமல்படுத்த வேண்டும்.

    திருப்பூர்:

    தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட கழிவுபஞ்சு பஞ்சாலை(ஓ.இ.) மில்கள் இயங்கி வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு 25 லட்சம் கிலோ நூல்கள் கழிவு பஞ்சில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு நேரடியாகவும், ஒரு லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    கழிவு பஞ்சு விலை ஏற்றம் மற்றும் குறைந்த நூல் விலை போன்ற காரணங்களால் ஓ.இ., மில்கள் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருவதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை உற்பத்தி நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர். அதன்படி இன்று முதல் சில ஆலைகள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் ஓ.இ. மில்கள் இயங்கி வருகின்றன. இதில் ஒரு சில மில்களில் நூல் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டது. மற்ற மில்களில் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து ஓ.இ. மில்கள் சங்கமான ஒஸ்மா தலைவர் அருள்மொழி கூறுகையில், மூலப்பொருள் வரலாறு காணாத விலையில் விற்பதினால் 20 வருட காலமாக இருந்த காட்டன் விலை 60 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இனிவரும் காலங்களில் பஞ்சு விலை குறைந்தால் மட்டுமே ஓ.இ., மில்களை தொடர்ந்து இயக்க முடியும். தமிழ்நாடு அரசு கடந்த வருடம் மின்சார கட்டணம் உயர்த்தியதால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டு காலமாக விசைத்தறி காடா துணி ஏற்றுமதி தேக்கம் அடைந்ததால் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு துணிக்கு விலை கிடைக்கவில்லை. இதனால் ஓ.இ., மில்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

    எனவே தமிழ்நாடு அரசு உயர்த்திய மின் கட்டணத்தை உடனடியாக குறைத்து பழைய மின் கட்டணத்தை அமல்படுத்த வேண்டும். காட்டன் வேஸ்ட் மூலப்பொருள் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு கழிவு பஞ்சு ஏற்றுமதியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றார்.

    ×