search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிற்பக் கலைக்கூடங்கள்"

    • திரும்பிய திசையெல்லாம் சிற்பக்கலைக் கூடங்கள்.
    • முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்களில் ஒன்று.

    திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி முருகப்பெருமானின் முக்கிய திருத்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. அதே திருமுருகன்பூண்டிக்கு பெருமை சேர்க்கும் வகையில் திரும்பிய திசையெல்லாம் சிற்பக்கலைக் கூடங்கள் நிறைந்து காணப்படுகிறது.

    கலைநயமிக்க சிலைகளை கைவேலைப்பாடுகளுடன் தத்ரூபமாகவும், துல்லியமாகவும் செதுக்குவதில் தனித்தன்மையுடனும், உலக பிரசித்தி பெற்றதாகவும் விளங்குகிறது திருமுருகன்பூண்டி சிற்பக் கலைக்கூடங்கள்.

    குறிப்பாக கருங்கல்லால் செதுக்கப்படும் சாமி சிலைகள் திருமுருகன்பூண்டிக்கு இணையாக தமிழகத்தில் வேறு எங்கும் செய்ய முடியாது என்ற அளவிற்கு பெருமைக்குரிய தொழிலாகவும், சிறந்த கலையாகவும் உள்ளது. 5 தலைமுறைகளை கடந்து, 200 ஆண்டுகள் பழமையும், பாரம்பரியமிக்க தொழிலாகவும், கலைநயம், கைவேலைப்பாடு, கடினமான உடல் உழைப்பு ஆகியவைதான் சிற்பக் கலைக்கூடங்களின் சிறப்பு. திருமுருகன்பூண்டி, அவினாசி, பெரியாயிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 160 சிற்பக்கலைக் கூடங்கள் உள்ளன.

    அங்கு 600-க்கும் மேற்பட்ட சிற்பக் கலைஞர்களும், தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். அங்கு கருங்கல்லால் செதுக்கப்படும் சாமி சிலைகள், தலைவர்களின் திருஉருவச் சிலைகள், கல்வெட்டுக்கள், சாஸ்திர கற்கள் போன்றவை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்படுவது மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    மேலும் திருமுருகன்பூண்டியில் செதுக்கப்படும் சாமி சிலைகள் தமிழகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்வே திருமுருகன்பூண்டி சிற்பக்கலை தொழில் தொடங்கி விட்டது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சிற்பங்கள் செதுக்கப்பட்டாலும், திருமுருகன்பூண்டியில் செதுக்கப்படும் சாமி சிலைகளுக்கு இணையாக அமையாது. அந்த அளவிற்கு கைவேலைப்பாடுடனும், அர்ப்பணிப்புடனும் இந்த தொழில் செய்யப்பட்டு வருகிறது.

    சிலைகள் தயாரிப்பில் எந்திரங்கள் உள்ளிட்ட நவீனங்கள் வந்து விட்டாலும், கைவேலைப்பாட்டில் கிடைக்கும் கலைநயமும், நுணுக்கமும் கிடைக்காது. தொழிலில் ஏற்ற, இறக்கங்கள் இருந்தாலும் கண்ணியம் தவறாமல் கடமையாற்றுவதே திருமுருகன்பூண்டியின் பெயர் இன்று நிலைநிற்பதற்கு காரணமாக அமைந்துள்ளது. சிற்பக்கலை தொழிலில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் பல ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வருகிறார்கள். திருமுருகன்பூண்டி முழுவதும் சிற்பக் கலைக்கூடங்கள் இருந்தாலும் மாசுப் பிரச்சினை காரணமாக சிலைகளை செதுக்கும் பணிகளை குடியிருப்புகள் அல்லாத ஒதுக்குப்புறமான இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதனால் வாடிக்கையாளர்களும் சிலைகளை ஆர்டர் செய்வதற்கு ஒரு இடத்திற்கும், அதை பார்வையிடுவதற்கு ஒரு இடத்திற்கும் வரவேண்டி உள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கும் பணம் மற்றும் நேரத்தை விரயமாக்கும். எனவே 100 க்கும் மேற்பட்ட சிற்பக்கலைஞர்களின் நலன் கருதி தமிழக அரசு சிற்பக்கலைக் கூடங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் அமையும் வகையில் சிட்கோ போன்ற நிரந்தர தொழிற்பேட்டையை ஏற்படுத்தி தர வேண்டும்.

    மேலும் மத்திய அரசு சார்பில் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது சிற்ப கலைஞர்களின் கோரிக்கையாக உள்ளது. தமிழக அரசும் கட்டிட தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கி இருப்பது போன்று சிற்பக் கலைஞர்களுக்கும் கைவினைப் பொருட்கள் துறை சார்பில் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்து வருகிறது.

    திருமுருகன்பூண்டியில் செதுக்கப்படும் சாமி சிலைகள் இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி திருமுருகன் குமாரவேல் சிற்பக்கலை கூடத்தில் செதுக்கப்பட்ட மாரியம்மன், விநாயகர், முருகன் சிலைகள் மலேசிய நாட்டில் உள்ள கோவிலிலும், யானை சிலை அமெரிக்காவில் உள்ள கோவிலிலும், விநாயகர், ஆஞ்சநேயர், லட்சுமி, அய்யப்பன், 9 நவக்கிரகங்கள் உள்ளிட்ட சிலைகள் பிரான்ஸ் நாட்டில் உள்ள மாரியம்மன் கோவிலிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது உலக அளவில் பிரசித்தி பெற்றதாக அமைந்துள்ளது.

    இதே சிற்பக் கூடத்தில் 23 அடி உயரத்தில் 40 டன் எடையில் செதுக்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலையும், 13 அடி உயரத்தில் 60 டன் எடையில் செய்யப்பட்ட நந்தி சிலை ஆகியவை கர்நாடக மாநிலம் பெங்களூரு கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    திருமுருகன்பூண்டி முருகன் சிற்பக்கலைக் கூடத்தில் 33 அடி உயரத்தில் செதுக்கப்பட்ட சங்கடகர சதுர்த்தி விநாயகர் சிலை தமிழகத்திலேயே உயரமான விநாயகர் சிலையாக திண்டுக்கல்லிலும், மற்றொரு சிற்பக் கலைக்கூடத்தில் செதுக்கப்பட்ட 40 அடி உயரத்திலான ஆஞ்சநேயர் சிலை தமிழகத்திலேயே உயரமான ஆஞ்சநேயர் சிலையாக திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டு, திருமுருகன்பூண்டியின் பெருமையை பறை சாற்றுவதாக அமைந்து வருகிறது.

    ×