search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுரங்க எலி வளை துளை பணியாளர்கள்"

    • 41 உயிர்களை மீட்க 17 நாட்களாக பெரும் போராட்டம் நடந்தது
    • ஆஸ்திரேலிய பேராசிரியரின் ஒத்துழைப்புக்கு பெருமை அடைவதாகவும் அல்பனீஸ் தெரிவித்தார்

    உத்தரகாண்ட் (Uttarakhand) மாநிலத்தின் உத்தரகாசி (Uttarakashi) மாவட்டத்தில் எண் 134 தேசிய நெடுஞ்சாலையில் (NH-134) சில்க்யாரா வளைவு - பார்கோட் பகுதியில் ஒரு சுரங்கம் அமைக்கப்பட்டு வந்தது.

    கடந்த நவம்பர் 12 அன்று காலை 05:30 மணியளவில் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் அதன் நுழைவாயிலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் பணியில் இருந்த 41 கட்டுமான ஊழியர்கள் சிக்கி கொண்டனர்.

    இவர்களை மீட்கும் பணியை போர்க்கால அடிப்படையில் இந்திய அரசாங்கம் முடுக்கி விட்டது.

    சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொழில்நுட்ப ஆலோசனைக்கு சுரங்க கட்டுமான மேலாண்மையில் நிபுணரான ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேராசிரியர் ஆர்னால்ட் டிக்ஸ் என்பவரின் உதவியும் பெறப்பட்டது. மீட்பு பணிக்கு உபயோகப்படுத்தப்பட்டு வந்த பெரிய இயந்திரத்தில் துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்ட கோளாறினால் பணிகளில் சிறிது தொய்வு ஏற்பட்டது.

    இதன் காரணமாக எலி வளை சுரங்க தொழிலாளர்களை (rat hole miners) கொண்டு, இயந்திர உதவி இல்லாமல், துளையிட்டு மீட்கும் முயற்சி நடைபெற்றது.

    சிறப்பான முறையில் செயல்பட்ட இவர்களின் தடையில்லா உதவியினால், நேற்று மாலை 07:05 மணியளவில் 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதையடுத்து, சுமார் 17 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் நல்லவிதமாக முடிவுக்கு வந்தது.


    மீட்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவருடனும் பிரதமர் மோடி தொலைபேசி வழியாக உரையாடி வாழ்த்து தெரிவித்தார்.

    பல உயிர்களை காப்பாற்றும் மிக பெரிய பொறுப்பில் ஓய்வின்றி உழைத்து தங்களின் அதிரடி நடவடிக்கைகள் மூலம் மீட்க உதவிய அனைவருக்கும் பாராட்டு குவிந்து வருகிறது.

    இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் தனது பாராட்டுக்களை அவரது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

    "வியத்தகு சாதனை. மீட்பு பணியில் ஈடுபட்டவர்களின் அற்புதமான சாதனை இது. அனைவருக்கும் பாராட்டுக்கள். களத்தில் இருந்து ஆஸ்திரேலியா நாட்டு பேராசிரியர் நல்கிய ஒத்துழைப்பு குறித்து நாங்கள் பெருமிதம் அடைகிறோம்" என தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய தூதர் பிலிப் க்ரீன் இந்திய முயற்சிகளை பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×