search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அத்ரி மலை"

    • சைவ வழிபாட்டில் மிக முக்கியமானது லிங்க வழிபாடு.
    • மேற்கு நோக்கிய சிவலிங்கங்களுக்கு அதிக சக்தி உண்டு

    ``கோவில் விளங்க குடி விளங்கும்'' என்றார்கள் நம் முன்னோர்கள். இறைவன் எங்கும் நிறைந்த பரம்பொருள் என்றபோதிலும், கோவிலுக்கு சென்று அமைதியான சூழலில் கண்மூடி பிரார்த்தித்து, இதயத்தில் உள்ள பாரத்தை சற்று இறக்கி வைத்துவிட்டு வந்தால் மனதும், உடலும் லேசானது போன்ற உணர்வும், நிம்மதியும் கிடைக்கும்.

    பழங்காலத்தில் இருந்து இப்போது வரை கோவில்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்லாமல், மக்களின் வாழ்க்கையோடு இணைந்த ஓர் அம்சமாகவும், சமுதாய கட்டமைப்பின் முக்கிய அங்கமாகவும் விளங்கி வருகின்றன. இறை நம்பிக்கையும், வழிபாட்டுத் தலங்களும் மனிதனை நல்வழிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    அந்த காலத்தில் மன்னர்கள் ஆற்றங்கரை மற்றும் நீர்நிலைகளையொட்டியே கோவில்களை கட்டினார்கள். பெரும்பாலான கோவில்கள் சூரியன் உதிக்கும் கிழக்கு திசையை நோக்கியே கட்டப்பட்டன. இதற்கு மாறாக சில கோவில்கள் மேற்கு திசையை நோக்கியும் கட்டப்பட்டு இருக்கின்றன.

    சைவ வழிபாட்டில் மிக முக்கியமானது லிங்க வழிபாடு. சிவலிங்கம் என்றால் சிவபெருமானின் அடையாளம்-உலகிற்கே தந்தையான ஈசனின் அடையாளம் என்று சொல்வார்கள். பெரும்பாலான சிவன் கோவில்களில் ஈசன் லிங்க திருமேனியாகவே காட்சி தருகிறார். மேற்கு நோக்கிய சிவலிங்கங்களுக்கு அதிக சக்தி உண்டு என்றும், அத்தகைய சிவலிங்கங்கள் அமைந்த கோவில்களுக்கு சென்று வழிபட்டால் அதிக பலன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

    சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், திருச்சி தாயுமானவர் ஆலயம், மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள வைத்தியநாதசாமி கோவில், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல கோவில்கள் மேற்கு நோக்கிய சிவாலயங்களாக விளங்குகின்றன.

    அப்படிப்பட்ட ஒரு பிரசித்திபெற்ற சிவத்தலம்தான் தென்காசி மாவட்டம் சிவசைலத்தில் அமைந்துள்ள சிவசைலநாதர் கோவில். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த பிரமாண்டமான ஆலயம் கடனா ஆற்றின் தென்கரையில் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்கும் திரிகூடபர்வதத்தில் உற்பத்தியாகும் கடனா, தாமிரபரணியின் முக்கிய உபநதிகளில் ஒன்றாகும்.

    தென்காசி-அம்பாசமுத்திரம் மார்க்கத்தில் உள்ள ஆழ்வார்குறிச்சியில் இருந்து மேற்கே மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ள கடனா அணைக்கு செல்லும் சாலையில் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிவசைலநாதர் கோவில் வரலாற்று சிறப்புமிக்க ஆலயம் ஆகும்.

    மூன்று புறமும் மலைகளால் சூழப்பட்ட எழில்மிகுந்த இந்த ஆலயத்தின் மேற்கேயும் தெற்கேயும் மேற்குத் தொடர்ச்சி மலையின் பகுதிகளாக விளங்கும் திரிகூடபர்வதமும், வெள்ளிமலையும், வடக்கே முள்ளி மலையும் உள்ளன.

    கோவிலின் முன்நின்று நோக்கினால் மேற்கேயும், தெற்கேயும் மலையடிவாரம் வரை கண்ணுக்கெட்டிய தூரம் பசுமை போர்த்திய வயல்வெளிகள். அமைதியான சூழ்நிலை, தூய்மையான பொதிகை தென்றல் என்று இயற்கையின் அருட்கொடைக்கு பஞ்சம் இல்லாத பூமி. தென்மேற்கு பருவமழை காலத்தில் குற்றாலத்தின் குளுகுளு சீசனை இங்கேயும் அனுபவிக்கலாம்.

    தமிழர்களின் கட்டிட கலைக்கு சான்றாக விளங்கும் சிவசைலநாதர் கோவிலின் தூண்கள் உள்ளிட்ட ஒவ்வொரு பகுதியும் மிகவும் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் அற்புதமாக வடிவமைக்கப்பட்டு உள்ளன. புராண சம்பவங்களை சொல்லும் அழகிய ஓவியங்கள் ஆங்காங்கே வரையப்பட்டு இருக்கின்றன.

    வாருங்கள்... இந்த கோவிலில் ஸ்தல புராணத்தை பார்ப்போம்...

     அம்பாள் கல்யாணியுடன் ஈசன் குடிகொண்டிருக்கும் இந்த சிவசைலம் முன்னொரு காலத்தில் சோலைகள் நிறைந்த கடம்ப வனமாக இருந்தது. சித்தர்களும், முனிவர்களும் வாழ்ந்த பூமி.

    சிவபெருமானின் திருமண கோலத்தை காண தேவர்கள், முனிவர்கள் என அனைவரும் கைலாய மலைக்கு சென்றதால், பாரம் தாங்காமல் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதனை சரி செய்ய ஈசன், குறுமுனியான அகத்தியரை தென் கோடியில் உள்ள பொதிகைக்கு அனுப்பி வைத்தார்.

    ஈசனின் ஆணையை சிரமேற்கொண்டு அத்ரி மகரிஷியுடன் தென்திசை வந்த அகத்தியர் பொதிகை மலையில் குடிசை அமைத்து தவவாழ்வு மேற்கொண்டார். தனது திருமணம் முடிந்ததும் அகத்தியருக்கு சிவபெருமான் மணக்கோலத்தில் பார்வதிதேவியுடன் காட்சி அளித்தார். அதாவது, பொதிகை மலையின் அடிவாரத்தில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள திருக்கோவிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி காட்சி கொடுத்தார்.

    அகத்தியருடன் வந்த மற்றொரு மகரிஷியான அத்ரிமுனிவர் பாபநாசத்தில் இருந்து வடமேற்கே மேற்குத் தொடர்ச்சி மலையின் மற்றொரு பகுதியாக விளங்கும் திரிகூடபர்வதத்தில் குடில் அமைத்து மனைவி அனுசூயையுடனும், கோரக்கர் போன்ற சீடர்களுடனும் வாழ்ந்து வந்தார். `சைலலிங்கம்' என்ற திருப்பெயர் கொண்ட லிங்கத்தை அவர் பிரதிஷ்டை செய்து தினசரி பூஜை செய்து வந்தார்.

    ஒரு சமயம் அகத்தியரை தரிசித்துவிட்டு வந்த அத்ரி மகரிஷிக்கு ஒரு மனக்குறை தோன்றியது. ''அகத்தியருக்கு சுயம்புவாக எழுந்தருளி காட்சியளித்த ஈசன் தனக்கு அப்படி காட்சி அளிக்கவில்லையே!'' என்று வருந்தினார். தனது மனக்குறையை அடிக்கடி ஈசனிடம் முறையிடத் தொடங்கினார்.

    அவரது வேண்டுதலுக்கு செவிமடுத்த சிவபெருமான் அசரீரியாக, ``மகரிஷியே சிவசைலர் என்ற பெயருடன் சுயம்புவாக நான் கடனா நதிக்கரையில் வாசம் செய்து வருகிறேன். என்னை வெளிக்கொணர்ந்து நீ பூஜிப்பாயாக'' என கூறி மறைந்தார்.

    இந்தநிலையில் அத்ரி முனிவரின் சீடர்கள் ஒரு நாள் பூஜைக்காக பூப்பறிக்க சென்ற போது, ஓரிடத்தில் பசு ஒன்று தானாக பால் சுரப்பதை கண்டு அதிசயித்து நின்றனர். பின்னர் அந்த இடத்தை அத்ரி முனிவரும் சீடர்களுடம் தோண்டிப்பார்த்த போது அங்கு சுயம்பு வடிவில் லிங்கம் காட்சி அளித்தது. அதை எடுத்து அத்ரி முனிவர் பூஜித்து வணங்கினார்.

    அந்த இடம்தான் தற்போது பரமகல்யாணி உடனுறை சிவசைலநாதர் அமர்ந்துள்ள சிவசைலம் ஆகும்.

    சிவசைலத்துக்கு நேராக மேற்கே சற்று தொலைவில் உள்ள திரிகூடபர்வதத்தில் அத்ரி மகரிஷியின் குடில் அமைந்திருந்தது. அவர் தினமும் தன்னை தரிசனம் செய்வதற்காகவே சிவசைலம் கோவிலில் ஈசன் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார்.

    அத்ரி மகரிஷி வாழ்ந்த இடத்தில் தற்போது சிறிய கோவில் உள்ளது. பவுர்ணமி, அமாவாசை தினங்களில் அங்கு ஏராளமான பக்தர்கள் செல்கிறார்கள். கடனா அணைக்கு மேலே அடர்ந்த மலைப்பகுதியில் அமைந்திருப்பதால், வனத்துறையின் அனுமதி பெற்றுத்தான் அந்த கோவிலுக்கு செல்ல முடியும்.

    அத்ரி முனிவர் வாழ்ந்த இடம் என்பதால் திரிகூடபர்வதம் `அத்ரி மலை' என்றும் அழைக்கப்படுகிறது.

    பிரம்மனும், இந்திரனும் வழிபட்ட பெருமைமிக்க புண்ணிய தலம் சிவசைலநாதர் கோவில்.

    பாண்டிய மன்னனுக்கு சிவபெருமான் ஜடாமுடியுடன் காட்சி அளித்த அதிசய சம்பவமும் இந்த திருத்தலத்தில்தான் நடந்தது. இதற்காக ஈசன் ஒரு திருவிளையாடலையே நடத்தினார்.

    மணலூர் என்ற ஊரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்த சுதர்சன பாண்டியன் என்ற மன்னன் அடிக்கடி சிவசைலநாதர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து இறையருள் பெற்று வந்தான். அப்படி ஒரு நாள் மன்னன், சாமி கும்பிடுவதற்காக கோவிலுக்கு வந்தபோது கடனா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மன்னனால் ஆற்றை கடந்து தென்கரையில் உள்ள கோவிலுக்கு செல்ல முடியவில்லை.

    எனவே வடகரையில் நின்றபடியே சிவசைலநாதரை மனதில் நினைத்து வேண்டினான். அவனது வேண்டுதலுக்கு ஈசன் செவிசாய்க்கவே சிறிது நேரத்தில் வெள்ளம் வடியத்தொடங்கியது. வெள்ளம் குறைந்ததும் மன்னன் ஆற்றை கடந்து தென்கரையில் உள்ள கோவிலுக்கு சென்றான்.

    மன்னன் கோவிலுக்கு வருவதற்குள் நடை சாத்தப்பட்டு விட்டது. மன்னனின் `திடீர்' வருகையை கண்டு திடுக்கிட்ட அர்ச்சகர், மன்னனை மகிழ்விக்கும் பொருட்டு, கோவிலின் பிரதான நாட்டிய மங்கைக்கு பிரசாதமாக வழங்கி, அவள் தலையில் சூடியிருந்த மலர்மாலையை பெற்று மன்னனுக்கு கொடுத்துவிட்டார்.

    சுவாமியை தரிசிக்க இயலாவிட்டாலும் அவருக்கு சூட்டிய மலர்மாலையையாவது தரிசிக்கும் பாக்கியம் கிடைத்ததே என்று மகிழ்ந்த மன்னன் சுதர்சன பாண்டியன், அந்த மாலையை பயபக்தியுடன் வாங்கி பரவசத்துடன் கண்களில் ஒற்றிக் கொண்டான்.

    அப்போது அதில் தலைமுடி இருப்பதை கண்டு, அபசகுனமாக கருதிய மன்னன், ''ஈசனுக்கு சூடிய மலர்மாலையில் தலைமுடி எப்படி வந்தது?'' என்று கோபமாக கேட்டான்.

    இதனால் பயந்து போன அர்ச்சகர், ``ஈசனுக்கு சடைமுடி உண்டு. மலர்மாலையில் காணப்பட்டது சுவாமியின் முடிதான்'' என்று ஒரு பொய்யைக் கூறி சமாளித்தார்.

    இதை நம்பாத அரசன், ``அப்படியானால் நான் அடுத்த முறை கோவிலுக்கு வரும் போது அந்த சடை முடியை தரிசிக்க ஏற்பாடு செய்யுங்கள்'' என்று கட்டளையிட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.

    இதனால் அர்ச்சகரின் நிலைமை இருதலைக்கொள்ளி எறும்பானது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தன்னை காப்பாற்றி அருளுமாறு சிவசைலநாதரிடம் வேண்டி பிரார்த்தனை செய்தார். அவரது நிலைமையை கண்டு மனமிறங்கிய ஈசன் அசரீரியாக, ''சுதர்சன பாண்டியனை சோதிக்கவே யாம் இவ்வாறு செய்தோம். அவனுக்கு மலர்மாலை பிரசாதம் தந்த உம்மை நிச்சயம் காப்பாற்றுவேன். கருவறையின் மூன்று பக்கங்களிலும் சாரளரங்கள் அமைப்பாயாக'' என்று கூறிவிட்டு மறைந்தார்.

    இதைத்தொடர்ந்து, கருவறையின் வலது, இடது மற்றும் பின் பக்கங்களில் சிறிய சாளரங்கள் (துவாரங்களுடன் கூடிய கல் ஜன்னல்) அமைக்கப்பட்டன. நாட்கள் உருண்டோடின.

     ஏற்கனவே சொன்னது போல் சில நாட்களுக்கு பின் மன்னன் சுதர்சன பாண்டியன் கோவிலுக்கு வந்தான். அப்போது அர்ச்சகரின் வேண்டுகோளின்படி, கருவறையில் சுவாமிக்கு பின்னால் உள்ள துளையின் வழியே மன்னன், சிவசைலநாதரை தரிசனம் செய்தான். அர்ச்சகர் காட்டிய தீப ஒளியில் ஈசன் ஜடாதாரியாக மன்னனுக்கு காட்சி அளித்தார். இறைவனின் தோற்றத்தை கண்டு மெய்சிலிர்த்த மன்னன், தன் தவறை மன்னிக்கும்படி மனமுருக வேண்டி இறையருள் பெற்றான்.

    இந்த நிகழ்வின் காரணமாகவே, பக்தனுக்கு ஜடாமுடிதாரியாக சிவபெருமான் காட்சியளித்த சிறப்புடைய தலமாக இந்த கோவில் விளங்குகிறது.

    இப்போதும் இந்த கோவிலில் கர்ப்பகிரகத்தின் மூன்று பக்கங்களிலும் சாளரங்கள் இருப்பதை காணலாம். பின் பக்கம் அமைந்துள்ள சாளரத்தின் பின்னால் உள்ள கோவிலின் மதில் சுவரில் ஒரு துளை இருப்பதையும் காண முடியும்.

    5 நிலைகளை கொண்ட கோபுரத்துடன் கூடிய இந்த கோவிலில் சிவசைலநாதருக்கும் அம்பாளுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. ஈசனின் இடப்பக்கம் அம்பாள் சன்னதி அமைந்துள்ளது.

    தேவார பாடல் பெற்ற இந்த கோவிலின் தல விருட்சமாக கடம்ப மரம் விளங்குகிறது.

    கோவிலின் வலதுபுறத்தில் மணிமண்டபத்துடன் கூடிய படித்துறையும், அதன் அருகே மூலிகை தோட்டமும் உள்ளது. பக்தர்கள் படித்துறையில் இறங்கி ஆற்றில் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்கிறார்கள். பல்வேறு இடங்களில் இருந்தும் தினசரி ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.

    கோவில் அமைந்துள்ள ஆற்றின் தெற்கு கரை பகுதி சிவசைலம் என்றும், வடக்கு கரை பகுதி அம்பாள் பெயரில் கல்யாணிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. கல்யாணிபுரத்தில் இருந்து ஆற்றை கடந்து சிவசைலம் செல்ல பெரிய பாலம் கட்டப்பட்டு உள்ளது.

    இயற்கை எழில் சூழ்ந்த சோலைவனம் போன்ற பகுதியில் இந்த கோவில் அமைந்து இருப்பதால் கடனா அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் இங்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

    கோவிலின் எதிரே திருக்கல்யாண வசந்த மண்டபம் உள்ளது. இங்குள்ள கோசாலையில் பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன.

    ஆண்டுதோறும் பங்குனி மாத இறுதியில் நடைபெறும் பிரமோற்சவம் இங்கு நடைபெறும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது.

    அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவில் தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும் வழிபட்ட தலம் என்பதால் அதிர்வலைகள் நிறைந்த தலமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக இங்கு திருமணம் மற்றும் 'மணிவிழா'க்கள் அடிக்கடி நடைபெறுகின்றன.

    கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவதால், தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று அந்த ஊரைச் சேர்ந்த பக்த பிரமுகர் சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    கோவிலுக்கும், ஆற்றுக்கும் இடையேயான வடக்கு பிரகார பகுதியில் சிமெண்டு தரை அமைத்து அதிக ஒளிதரும் மின்விளக்குகள் அமைத்துக் கொடுத்தால் பக்தர்கள் வருவதற்கும், வாகனங்களை நிறுத்துவதற்கும் வசதியாக இருக்கும் என்று கூறிய அவர், கழிவறைகளை நன்கு பராமரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர்கள் அரும்பாடுபட்டு கட்டிய கோவில்கள் வழிபாட்டு தலங்கள் மட்டுமின்றி நமது கலாசாரம், பண்பாடு ஆகியவற்றின் பிறப்பிடமாகவும், கலை பொக்கிஷங்களாகவும் விளங்குகின்றன. அந்த பொக்கிஷங்களை பேணி பாதுகாப்பது நமது கடமை.

    வேர்களை மறந்தால் விருட்சங்களுக்கு விமோசனம் கிடையாது. வந்த வழி மறந்துவிட்டால், போகும் வழி தெரியாமல் போய்விடும்.

    ×