search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உதடு பராமரிப்பு"

    • குளிர்காலம் தொடர்பான சரும பிரச்சினைகள் கவலைக்கு காரணமாக இருக்கும்.
    • சருமத்தில் க்ரீம் பூசுவதால் ஈரப்பதமான சருமமாக மாறாது.

    குளிர்காலம் நெருங்க நெருங்க, சரும பராமரிப்பு குறித்த கவலைகள் பெண்களை ஆட்கொள்ளும். வறண்ட சருமம், மெல்லிய தோல், உதடு வெடிப்பு உள்பட குளிர்காலம் தொடர்பான பல்வேறு சரும பிரச்சினைகள் அந்த கவலைக்கு காரணமாக இருக்கும். இதற்கிடையே குளிர்கால சரும பராமரிப்பு பற்றி பல கட்டுக்கதைகளும் உலவுகின்றன. அத்தகைய கட்டுக்கதைகள் குறித்தும், உண்மை நிலவரம் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

    சருமத்தில் அதிக கிரீம் தடவினால் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்

    உண்மை: உதடோ, சருமமோ எந்த அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துவதாக இருந்தாலும் குறைவாகவே பூச வேண்டும். அதிகம் பூசுவதால் ஈரப்பதமான சருமமாக மாறாது. மாறாக தோல் சுவாசிக்க முடியாமல், இறுதியில் சருமம் சேதமடையக்கூடும். குறிப்பாக குளிர்காலத்தில் சருமங்களை பராமரிப்பதற்கு இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அடர் தன்மை கொண்ட கிரீம்களை பயன்படுத்துவதை விட லோஷன்களை பயன்படுத்துவது ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும்.

     குளிர்காலத்தில் சருமத்திற்கு ஈரப்பதத்தை தக்க வைக்க எண்ணெய் உதவும், மாய்ஸ்சுரைசர் தேவையில்லை

    உண்மை: வறண்ட மற்றும் எண்ணெய் பசை கொண்ட சருமங்களுக்கு இடையே ஒருசில மாறுபாடுகள்தான் இருக்கிறது. வறண்ட சருமத்தை ஒப்பிடும்போது எண்ணெய் பசை கொண்ட சருமத்திற்கு ஈரப்பதத்தை தக்கவைக்க மென்மையான தன்மை கொண்ட லோஷன் தேவைப்படும். ஒவ்வொரு சரும வகையும் வானிலை மாற்றங்களால் பாதிக்கப்படும். குளிர்ந்த காற்று சருமத்தை வறண்டு போகச் செய்துவிடும். இதற்கு எண்ணெய் சருமமும் விதிவிலக்கல்ல.

    அதனால் குளிர்காலத்தில் எண்ணெய் பசை கொண்ட சருமத்திற்கு ஈரப்பதத்தை தக்க வைக்க எதுவும் பயன்படுத்த வேண்டியதில்லை என்பது தவறானது. சருமத்தின் தன்மைக்கு ஏற்ப சம நிலையை பராமரிக்கும் தன்மை கொண்ட மாய்ஸ்சுரைசரை பயன்படுத்துவது நல்லது. அவை ஈரப்பதத்தை பராமரிப்பதற்கும், புற ஊதாக்கதிர்களிடம் இருந்து சருமத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்கும் உதவும்.

     குளிர்காலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை தவிர்க்கலாம்

    உண்மை: பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த சீரான உணவை உண்பது சருமத்தின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. குளிர்காலத்திலும், இந்த உணவுகள் சருமத்தை பாதுகாக்கக்கூடிய அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகளை வழங்குகின்றன. எனவே அவற்றை தவிர்க்கக்கூடாது.

    குளிர்காலத்தில் லிப் பாம்களை அதிகமாகப் பயன்படுத்துவது உதடு வெடிப்பு பிரச்சினையை சரி செய்யும். உண்மை: உதட்டுக்கு லிப் பாம்களை அதிகமாக போடுவது பிரச்சினைக்குத்தான் வித்திடும். உதடுகள் வறண்டு போயிருந்தால் அதன் மீது படிந்திருக்கும் இறந்த செல்களை அகற்றாமல் லிம் பாம் உபயோகிப்பது பயனற்றது. எப்போதும் லிப் பாமை ஒரு அடுக்கு மட்டுமே போடுவது போதுமானது. முதலில் இறந்த செல்களை நீக்க உதவும் 'லிப் ஸ்கிரப்'களை பயன்படுத்திவிட்டு அதன் பிறகு லிப் பாமை தடவ வேண்டும்.

    பெரும்பாலான லிப் பாம்களில் சருமத்திற்கு தீங்கையும், நீரிழப்பையும் ஏற்படுத்தும் வண்ணங்கள் அல்லது வாசனை திரவியங்கள் கலந்திருக்கக்கூடும். குளிர்கால உதடு பராமரிப்புக்கு, இயற்கை எண்ணெய் கொண்டு தயார் செய்யப்பட்ட நெய் பயன்படுத்துவது நல்லது. தரமான லிப் பாமும் பயன்படுத்தலாம்.

    குளிர்காலத்தில் வெந்நீரில் குளிப்பது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதற்கு சிறந்த வழி

    உண்மை: குளிர் சமயத்தில் சுடு நீர் குளியல் உடலுக்கு ஆறுதல் அளிக்கும். ஆனால் சருமத்தில் படர்ந்துள்ள இயற்கை எண்ணெய் பசைகளை அகற்றி சருமத்தை உலர்வடைய செய்துவிடும். சருமத்திற்கு எரிச்சல் உணர்வையும் உண்டுபண்ணும். அதிக சூட்டை உணரவைக்காத வெதுவெதுப்பான நீரில் குளிப்பது அதிகப்படியான ஈரப்பத இழப்பை தடுக்கும். இருப்பினும் சுடு நீர் குளியல் போடுவதாக இருந்தால் அதிக நேரம் குளிக்கக்கூடாது.

    குளிர்காலத்தில் இறந்த செல்களை அகற்றும் செயல்முறையை தவிர்க்க வேண்டும்

    உண்மை: கோடைகாலம் சரும பராமரிப்புக்கு சிறந்த நடவடிக்கையாக கருதப்படுகிறது. குளிர்காலத்திற்கும் முக்கியமானது. இருப்பினும் அடிக்கடி எக்ஸ்போலியேட் செய்வது சருமத்திற்கு வறட்சி மற்றும் எரிச்சலை உண்டாக்கும். சருமத்தின் இயற்கையான எண்ணெய்களை அகற்றாமல் இறந்த சரும செல்களை அகற்றும் தன்மை கொண்ட மென்மையான எக்ஸ்போலியண்ட்களை தேர்வு செய்யவும்.

    குளிர்காலத்தில் சன்ஸ்கிரீன் அவசியம் இல்லை

    உண்மை: சன்ஸ்கிரீன் புற ஊதா கதிர்வீச்சிலிருந்து சருமத்தை பாதுகாக்கும். இந்த கதிர்கள் சருமத்தின் தோலை நேரடியாக பாதிக்கும். குளிர்காலத்தில் கருமேகங்கள் உலவும் என்றாலும் புற ஊதாக்கதிர்கள் வெளிப்படாமல் இருக்காது. அது மேகங்கள் வழியாக ஊடுருவி சருமத்தை பாதிக்கவே செய்யும். எனவே குளிர்கால சரும பராமரிப்பு வழக்கத்திலும் சன்ஸ்கிரீன் இடம் பெறுவதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.

    அடர் தன்மை கொண்ட மாய்ஸ்சுரைசர்கள் எப்போதும் சிறந்தவை

    உண்மை: குளிர்காலத்தில் ஈரப்பதத்தை பராமரிப்பதற்கு உதவும் மாய்ஸ்சுரைசர் அடர் தன்மை கொண்டிருந்தால் சிறந்தது என்பது சரியானது அல்ல. அத்தகைய மாய்ஸ்சுரைசர்கள் சில சமயங்களில் சரும துளைகளை அடைத்துவிடும். வேறு சில சரும பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். அதற்கு பதிலாக, உங்கள் சரும வகைக்கு ஏற்ற ஈரப்பதமூட்டும் மாய்ஸ்சுரைசரை தேர்ந்தெடுப்பது சரியானது. ஹைலூரோனிக் அமிலம், கிளிசரின் அல்லது செராமைடுகள் போன்ற சேர்மங்கள் கொண்ட மாய்ஸ்சுரைசரை பயன்படுத்தலாம்.

    ×