search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடி நஷ்டம்"

    • சுமார் 2 லட்சம் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. பல இடங்களில் தரை தளம் முற்றிலும் மூழ்கியது.
    • மொத்தத்தில் சிட்கோ சிறு நிறுவனங்களுக்கு மட்டும் ரூ.2,800 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    மிக்ஜம்... மிக் ரக போர் விமான போல் சுழன்று வந்தது. சென்னையை போட்டு தாக்கி விட்டு சென்றது. அது ஏற்படுத்திய பாதிப்புகள், இழப்புகளில் இருந்து மீள முடியாமல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் தவித்து கொண்டிருக்கிறார்கள்.

    சாதாரண மக்கள், வணிகர்கள், தொழில் நிறுவனங்கள் என்று எந்த தரப்பையும் விட்டு வைக்கவில்லை.

    சுமார் 2 லட்சம் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. பல இடங்களில் தரை தளம் முற்றிலும் மூழ்கியது.

    இந்த வீடுகளில் இருந்த பிரிட்ஜ், வாஷிங்மெஷின், தொலைக்காட்சி பெட்டிகள் முதல் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தும் நாசமாகிவிட்டன.

    சேறும், சகதியும் நிறைந்து கிடக்கும் இந்த வீடுகளை சுத்தம் செய்து, மின் சாதனைங்களை பழுது பார்த்து மீண்டும் குடியேற வேண்டுமென்றால் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை ஆகும். புதிய வீட்டு உபயோக பொருட்களை வாங்க வேண்டும்.

    பல வீடுகளில் கார்கள், இரு சக்கர வாகனங்களும் தண்ணீரில் மூழ்கி கிடக்கின்றன.

    அம்பத்தூர் பகுதியில் 1,800 தொழிற்சாலைகள் உள்ளன. இதில் 500-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் ரூ.2 ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிறு தொழில் நிறுவன சங்க தலைவர் கன்னியப்பன் தெரிவித்தார்.

    வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விலை உயர்ந்த எந்திரங்களும் தண்ணீரில் மூழ்கி பழுதாகி உள்ளன. இனி வெளிநாடுகளில் இருந்து பொறியாளர்கள் வந்தால்தான் இந்த பழுதை சரி செய்ய முடியும் என்கிறார்கள்.


    பெருங்குடியில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை உற்பத்தி செய்யும் 250 நிறுவனங்கள் உள்ளன. இந்த பகுதியில் ரூ.400 கோடி வரை இழப்பு ஏற்பட்டு இருப்பதாக சங்க தலைவர் அன்பு செல்வம் தெரிவித்துள்ளார்.

    திருமுடிவாக்கத்தில் 600 நிறுவனங்களில் தண்ணீர் புகுந்தது. 6 அடி உயரத்துக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. இந்த பகுதியில் மட்டும் ரூ.200 கோடி வரை இழப்பு ஏற்பட்டு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

    இதே போல் திருமழிசையில் 200 தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் தண்ணீர் புகுந்ததால் ரூ.200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் சிட்கோ சிறு நிறுவனங்களுக்கு மட்டும் ரூ.2,800 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த 4 மாவட்டங்களிலும் டீ கடைகள் முதல் பெரிய ஓட்டல்கள் வரை சுமார் 8 ஆயிரம் ஓட்டல்கள் உள்ளன.

    இந்த ஓட்டல்களை 3 நாட்கள் மூடியது மற்றும் பொருட்கள் சேதம் காரணமாக சுமார் ரூ.700 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் ரவி தெரிவித்தார்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் வந்து குவிந்த காய்கறிகள் வாங்குவதற்கு ஆள் இல்லாமலும், மழைத் தண்ணீரில் அழுகியும் லாரி லாரியாக குப்பையில் கொட்டப்பட்டது. கொட்டிய காய்கறிகள் மட்டும் ரூ.2 கோடி இருக்கும் என்று காய்கறி மொத்த வியாபாரி எஸ்.எஸ்.டி. ராஜேந்திரன் கூறினார்.


    அழுகிய பூக்களும், பழங்களும் டன் கணக்கில் குப்பையில் கொட்டப்பட்டது. இதன் மதிப்பும் சுமார் ரூ.2 கோடி வரை இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    இந்த 4 மாவட்டங்களிலும் சிறிய பெட்டிக் கடை முதல் பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரை 60 ஆயிரம் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் வியாபாரம் பாதிப்பு, பொருட்கள் சேதம் ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என்று வணிகர் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

    முக்கியமாக வியாபாரிகளுக்கு கிடைக்க வேண்டிய லாபம், அரசுக்கு கிடைக்க வேண்டிய வரிகள் சுமார் ரூ.600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

    ×