search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தன்வந்திரி ஆலயம்"

    • தன்வந்திரி பகவானுக்கான கோவில்கள் அபூர்வம்.
    • மூலிகைகளின் வாசனை தெய்வீகமாகக் கமழ்கிறது.

    கோவில் தோற்றம்

    மனிதனுக்கு உண்மையான செல்வம் நோய் நொடி இல்லாத வாழ்க்கைதான். அப்படி ஒரு வாழ்க்கையை நமக்கு அளிப்பவர் தன்வந்திரி பகவான். மகாவிஷ்ணுவின் அம்சமான அவரை, வேதங்கள் `தேவர்களின் மருத்துவர்', `ஆயுர்வேத மருத்துவத்தின் கடவுள்' என்றெல்லாம் குறிப்பிடுகிறது. இருப்பினும் தன்வந்திரி பகவானுக்கான கோவில்கள் அபூர்வம். அப்படி அமைந்த சில ஆலயங்களில் பண்ருட்டியில் உள்ள தன்வந்திரி ஆலயமும் ஒன்று.

    நூறு ஆண்டுகளுக்கு முன்னால் பண்ருட்டியில் வாழ்ந்த பெருமாள் பக்தர் ஒருவர், நேரம் கிடைக்கும் போதெல்லாம் பல ஊர்களுக்குச் சென்று பெருமாளை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருசமயம் அவர் நோயால் பாதிக்கப்பட்டார். அதனால் எந்த வெளியூருக்கும் சென்று பெருமாளை தரிசிக்க முடியவில்லை. பல நாட்களாக பிணி தொடர்ந்து நிலையில், தாம் இருந்த இடத்தில் இருந்தே திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் இருக்கும் தன்வந்திரி பகவானிடம், "என்னை நோய் நொடியில் இருந்து மீட்டெடுப்பாய் எம்பெருமாளே..." என மானசீகமாக வேண்டிக்கொண்டார். அதன் பலனாக அவர் மிக விரைவிலேயே குணமடைந்தார்.

    சிலநாட்களுக்குப் பிறகு அவர் கனவில் தோன்றிய தன்வந்திரி பகவான், "நான் எங்கும் இருக்கிறேன். எனவே திருவரங்கம் நேரில் வரமுடியவில்லையே என கவலை கொள்ளாதே! உங்கள் ஊரிலே எனக்குக் கோவில் அமைத்து வழிபடுங்கள். எல்லோரையும் நோய் நொடியில் இருந்து காக்கிறேன்" என்று கூற, அதன்படி கட்டப்பட்டதுதான் இந்தக் கோவில் என்று கூறப்படுகிறது.

     நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆலயத்தின் முகப்பு வாசல் வழியே நுழைந்தால், வியந்து போவீர்கள். அங்கே எழில் கொஞ்சும் மூலிகைத் தோட்டம், அதன் நடுவில் எம்பெருமாளின் அழகுமிகு ஆலயம் அமைந்திருக்கிறது. கோவில் வளாகத்திற்குள் பலவிதமான மூலிகைகளின் வாசனை தெய்வீகமாகக் கமழ்கிறது. அதை சுவாசிக்கும் பொழுது, மிகப்பெரிய ஆற்றலும், புத்துணர்ச்சியும் நம்மை தொற்றிக்கொள்ளும். ஆகவே இங்கே ஏராளமான பக்தர்கள் அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது.

    கருவறையில் சங்கு, சக்கரம், அமிர்த கலசம் மற்றும் அட்டைப் பூச்சியை கரங்களில் ஏந்தி, மார்பில் அமிர்த லட்சுமியோடு சேவை சாதிக்கிறார், மூலவரான தன்வந்திரி வைத்திய நாராயணப்பெருமாள். இவரது திரு உருவம் திருமலை திருப்பதி சிற்பக் கல்லூரியில் உருவாக்கப்பட்டது என்பது சிறப்பு. இந்த ஆலயத்தில் இரவு நேரத்தில் நடைபெறும் அர்த்தஜாம பூஜைக்கே அதிக அளவில் பக்தர்கள் வருகிறார்கள். காரணம், தினந்தோறும் இந்த ஆலயத்திலேயே நாட்டு வைத்தியரைக் கொண்டு தயாரிக்கப்படும் அமிர்த கசாயத்தை, சுவாமியின் அர்த்தஜாம பூஜைக்குப் பின் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகிறார்கள்.

    அதுதவிர மாதம்தோறும் அமாவாசை அன்று மாலை 5 மணி முதல் 8 மணி வரை இந்த ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. அப்போதும் ஆயுர்வேத லேகியம் பிரசாதம் வழங்கப்படுகிறது. இதைப் பெற வெளியூர்களில் இருந்தும் பத்தர்கள் வருகிறார்கள். ஒருமுறையாவது இத்தலம் வந்து அமிர்த கசாயத்தையும், ஆயுர்வேத லேகியத்தையும் பெற்று உட்கொண்டால் எந்தவிதமான நோயும் நம்மை தாக்காது என்பது நம்பிக்கை.

    தினசரி சுப்ரபாத பூஜை, கோ பூஜையும் செய்யப்படுகிறது. மரத்தால் செய்யப்பட்ட வைகுண்ட பால மூர்த்தியை ஆண்டுக்கு ஒருமுறை, வைகுண்ட ஏகாதசியன்று மட்டுமே பக்தர்கள் தரிசிக்க முடியும். இந்த சிறப்பான நிகழ்வைக் காண பெருமளவில் பக்தர்கள், வைகுண்ட ஏகாதசி அன்று இவ்வாலயத்திற்கு வருகை தருவார்கள். அமாவாசை, பவுர்ணமி, வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி, தமிழ்மாத பிறப்பு, சுவாதி நட்சத்திர நாட்களில் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது.

    குழந்தைப் பேறு இல்லாதவர்கள் தன்வந்திரி பகவானை மனதார பிரார்த்தனை செய்துகொள்ள, அவர்களுக்கு சுவாமியின் திருப்பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட தாம்பூலம் பிரசாதமாகத் தரப்படுகிறது. அதை கோவிலில் வழங்கப்படும் தீர்த்தத்தில் கலந்து சாப்பிட்டால் குழந்தைப்பேறு கிட்டும் என்பது ஐதீகம். பெருமாள் கோவில்களில் முக்கிய பிரசாதம் புளியோதரை. ஆனால் இங்கு மருத்துவராக இருக்கும் தன்வந்திரி வைத்திய நாராயணப் பெருமாளுக்கு, தன்வந்திரி ஜெயந்தி அன்று ஒருநாள் மட்டுமே புளியோதரை நிவேதனமாக செய்யப்படுகிறது. புளி, மருந்துகளை முறிக்கும் தன்மை கொண்டது. அதனால், அது பத்தியமாகவும் சொல்லப்படும். அதையொட்டியே இங்கே ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே புளியோதரை நைவேத்தியம் செய்யப் படுகிறது.

    இவ்வாலயத்தில் கருடாழ்வாருக்கு தனிச் சன்னிதி உள்ளது. இந்த ஆலயத்தில் நவக்கிரகங்களுக்கு உகந்த மூலிகைகள் நவக்கிரக சன்னிதியாக அமைக்கப்பட்டுள்ளது, வேறு எங்கும் காணமுடியாத சிறப்பம்சம். உங்களால் முடிந்தபோது இந்தக் கோவிலுக்கு ஒருமுறை வாருங்கள். உங்களுக்கு நல் ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் தந்து தன்வந்திரி பகவான் ஆசிர்வதிப்பார். இந்த ஆலயம் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    பண்ருட்டி பேருந்து நிலையம் அருகே இருக்கும் நான்கு முனை சாலை அருகில் இந்த தன்வந்திரி கோவில் உள்ளது.

    ×