search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காரைக்குடி தொழிலதிபர் கைது"

    • தனக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதற்காக அழகப்பன் உள்ளிட்ட 3 பேரையும் பவர் ஏஜெண்டுகளாக கவுதமி நியமித்தார்.
    • வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ் மூலம் நிலம் விற்ற பணம் ரூ.11 கோடி என்பது அவருக்கு தெரியவந்தது.

    சென்னை:

    பிரபல நடிகை கவுதமிக்கு சொந்தமான 8.63 ஏக்கர் நிலம், திருவள்ளூர் மாவட்டம், கோட்டையூர் கிராமத்தில் இருந்தது. அந்த நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்த அவருக்கு, காரைக்குடியைச் சேர்ந்த அழகப்பன் என்பவர் நிலத்தை விற்பதற்கு உதவுவதாக கூறினார்.

    பின்னர் சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த பலராமன், செங்கல்பட்டைச் சேர்ந்த ரகுநாதன் ஆகிய ரியல் எஸ்டேட் தரகர்களை நடிகை கவுதமிக்கு, அழகப்பன் அறிமுகம் செய்தார். பின்னர் தனக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதற்காக அழகப்பன் உள்ளிட்ட 3 பேரையும் பவர் ஏஜெண்டுகளாக கவுதமி நியமித்தார்.

    இந்தநிலையில் கடந்த 2015-ம் ஆண்டு மும்பையில் உள்ள நிறுவனத்திற்கு நிலத்தை விற்று விட்டதாக கூறி, சுமார் ரூ.4 கோடியை கவுதமிக்கு அவர்கள் 3 பேரும் கொடுத்தனர். பின்னர் வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ் மூலம் நிலம் விற்ற பணம் ரூ.11 கோடி என்பது அவருக்கு தெரியவந்தது.

    ரூ.7 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதை அறிந்த நடிகை கவுதமி, இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

    இதையடுத்து புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் செந்தில்குமாரி மேற்பார்வையில், உதவி கமிஷனர் ஜான்விக்டர், இன்ஸ்பெக்டர்கள் மேனகா, பூமாரன், புஷ்பராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    வழக்கு தொடர்பாக காரைக்குடியில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் அழகப்பன் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள். அழகப்பன் குடும்பத்தோடு தலைமறைவானார்.

    நடிகை கவுதமியின் புகாரின் பேரில் ரியல் எஸ்டேட் தரகர் பலராமன் (வயது 64) கைது செய்யப்பட்டார். அழகப்பன் மற்றும் ரகுநாதன் உள்ளிட்டோரை போலீசார் தேடி வந்தனர்.

    இதனிடையே நடிகை கவுதமி இன்னொரு நில மோசடி புகாரை காஞ்சிபுரம் மத்திய குற்றப்பிரிவு போலீசிலும் கொடுத்துள்ளார்.

    தலைமறைவான அழகப்பனுக்கு 'லுக் அவுட்' நோட்டீஸ் கொடுத்து, அவரை தேடப்படும் குற்றவாளியாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிவித்தனர்.

    அழகப்பன் (63), அவருடைய மனைவி நாச்சியாள் (57), மகன் சிவ அழகப்பன் (32), மருமகள் ஆர்த்தி (28), டிரைவர் சதீஷ் (27) ஆகியோர் கேரள மாநிலம் திரிச்சூர் அருகே உள்ள கிராமத்தில் பதுங்கி இருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அங்கு சென்ற மத்திய குற்றப்பிரிவு போலீசார், அழகப்பன், அவருடைய மனைவி, மகன், மருமகள் மற்றும் டிரைவர் ஆகிய 5 பேரை நேற்று கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் சென்னைக்கு அழைத்துவரப்பட்டு, விசாரணைக்கு பின்னர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

    ×