search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாசுரம்-6"

    • வெள்ளை சங்கின் பேரொலியை நீ கேட்கவில்லையா?
    • எல்லோருக்கும் தலைவனாக விளங்கும் இறைவனை நீ பாடுவாயாக!

    திருப்பாவை

    பாடல்

    புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில்

    வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?

    பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு

    கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி

    வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை

    உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

    மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்

    உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

    விளக்கம்

    பெண்ணே! பொழுது விடிந்தது. இதோ பறவைகள் ஒலி எழுப்புகின்றன. கருடனை வாகனமாக கொண்ட பெருமாள் கோவிலில் இருந்து ஒலிக்கின்ற வெள்ளை சங்கின் பேரொலியை நீ கேட்கவில்லையா? தூக்கத்தில் இருந்து எழுந்திரு! பூதகி என்னும் ராட்சசியின் மார்பில் சுரந்த விஷப்பாலை குடித்து அவளை அழித்தவன், வண்டிச் சக்கரத்தின் வடிவில் வந்த சகடாசுரனை தன் கால்களால் உதைத்துக் கொன்றவன், திருப்பாற்கடலில் ஆதிசேஷன் என்னும் பாம்பின் மீது துயில் கொண்டிருப்பவன். இப்படி பல சிறப்புகள் உடைய திருமாலை, முனிவர்களும் யோகிகளும் மெல்ல எழுந்து 'அரி அரி்' என்று போற்றி அழைக்கும் பேரொலி உள்ளத்தில் புகுந்து குளிர்விக்கிறதே! நோன்புக்கு செல்வோம் எழுந்து வா!

    திருவெம்பாவை

    பாடல்

    மானேநீ நென்னலை நாளைவந் துங்களை

    நானே யெழுப்புவன் என்றலும் நாணாமே

    போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ

    வானே நிலவே பிறவே அறிவரியான்

    தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்

    வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்

    ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்

    ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்

    விளக்கம்

    மான் போன்ற சாயலை உடையவளே! நாளைக்கு நானே முதலில் வந்து உங்களை எழுப்புவேன் என்று கூறினாயே! இப்போது நாங்கள் உன்னைத் தேடி வந்து எழுப்புகிறோம். நேற்று நீ சொன்ன சொல் எந்ததிசையில் சென்றுவிட்டது? நீ பதில் சொல்லமாட்டாய். இன்னும் பொழுது விடியவில்லையா? வானுலக தேவர்களும், மண்ணில் வாழும் மக்களும் மற்ற உலகில் உள்ளவர்களால் கூட அறிய முடியாத தன்மையை கொண்டவன் இறைவன். அப்படிப்பட்டவன் எங்கள் மீது வலிய வந்து கருணைகாட்டுகிறான். அவன் புகழை நாங்கள் பாடுவதைக் கேட்டும் நீ உறங்குகிறாய்? பதில் எதுவும் சொல்லாமலும், இறைவனைப் பாடி உருகாமலும் இருக்கிறாயே! இது உனக்கு சரிதானா? உனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் தலைவனாக விளங்கும் இறைவனை நீ பாடுவாயாக!

    ×