search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரோனா கட்டுப்பாட்டு"

    • 2020-ல் கொரோனா வைரஸ் பரவும்போது ஆல்பா வைரசாக பரவியது.
    • கொரோனாவின் உருமாறிய ஒமைக்ரான் வகை வைரஸ் வெளிநாட்டில் உருவானது.

    சென்னை:

    கொரோனா தொற்றுக்கு பிறகு உருமாறி உருமாறி பல வைரஸ்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அந்த வகையில் ஒமைக்ரானில் இருந்து உருமாறிய ஜே.என்-1 என்ற வைரஸ் பரவி வருவது பற்றி உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளை உஷார்படுத்தி உள்ளது.

    இந்த வைரஸ் தாக்கம் எப்படி இருக்கும் என்பது பற்றி தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது:-

    ஒரு காலத்தில் இன்புளுயன்சா பரவியது. அதன் பிறகு அது மறைந்து விட்டதா? இல்லை. சீசன் காய்ச்சலாக குளிர்காலத்தில் பரவுகிறது. அப்படியே கட்டுப்பட்டும் விடுகிறது.

    அது மட்டுமல்ல இன்புளுயன்சாவில் இருந்து ஏ மற்றும் பி என்ற இரு உருமாறிய வைரஸ்களும் வந்தன.

    இதன் மூலம் சாதாரண வைரஸ் காய்ச்சல், பன்றி காய்ச்சல் ஆகியவையும் வருகின்றன. ஆனால் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

    அதே போல்தான் கொரோனா வைரசும். அது முற்றிலுமாக ஒழிந்து விடாது. இருந்துகொண்டேதான் இருக்கும்.

    2020-ல் கொரோனா வைரஸ் பரவும்போது ஆல்பா வைரசாக பரவியது. அந்த ஆண்டு இறுதியில் 'டெல்டா' வகை வைரசாக உருமாறி பரவியபோதுதான் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. நேரடியாக நுரையீரலை தாக்கி உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.

    அப்போது நம்மிடம் தடுப்பு மருந்துகளும் இல்லை. அதன் பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அனைவருக்கும் செலுத்தப்பட்டது. பெரும்பாலும் எல்லோரும் 3 டோஸ் தடுப்பூசி போட்டுள்ளார்கள்.

    இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவானது. அதேபோல் கொரோனா தாக்கியதாலும் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது. இதனால் படிப்படியாக பாதிப்பு குறைந்தது.

    கொரோனாவின் உருமாறிய ஒமைக்ரான் வகை வைரஸ் வெளிநாட்டில் உருவானது. நம் நாட்டில் நைஜீரியாவில் இருந்து வந்தவரிடம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு எக்ஸ்.பி.பி. என்ற வகை உருமாறி வந்தது. அதுவும் மறைந்து இப்போது உருமாறிய ஜே.என்-1 என்ற வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இது 26 பேரிடம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் யாருக்கும் பரவவில்லை. பரிசோதனையை அதிகரிக்க அதிகரிக்க கூடுதலாக கண்டுபிடிக்க முடியும்.

    இதில் நாம் பார்க்க வேண்டியது பாதிக்கப்பட்டவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதுதான். யாரும் படுத்த படுக்கையாகவில்லை. எனவே இதன் தாக்கம் ஆபத்தை ஏற்படுத்தாது.

    மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இது புதுவகை வைரஸ் இல்லை. மிக தீவிரமாகி நுரையீரலை பாதிப்பது இல்லை. மேலும் ஏற்கனவே தடுப்பூசி எடுத்து கொண்டிருப்பதால் உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியால் வைரசின் வீரியம் குறைக்கப்படும். எனவே கொரோனாவை நினைத்து பீதி அடைய வேண்டியது இல்லை.

    ×