search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரசவத்துக்கு சாப்பிட்டு செல்லலாமா"

    • திட உணவை சாப்பிடாமல் மருத்துவமனைக்குச் செல்வதுதான் நல்லது.
    • உணவு இருந்தால், பிரசவம் நிகழ்வது சிரமமாகலாம்.

    கர்ப்பத்தின் ஒன்பது மாதம் பிறந்தவுடனேயே கர்ப்பிணியானவர் மருத்துவமனைக்கு கிளம்பத் தயாராகிவிட வேண்டும். பிரசவம் சிரமமில்லாமல் நிகழ்வதற்கு மகப்பேறு மருத்துவர் மற்றும் மருத்துவமனையின் எல்லா தொடர்பு எண்களையும், மருத்துவமனை நடைமுறை விதிமுறைகளையும் தெரிந்துகொள்வது நல்லது.

    முக்கியமாக, மருத்துவமனை பணிநேரம் முடிந்த பிறகு எவ்வாறு மருத்துவரைத் தொடர்புகொள்வது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் பிரசவத்துக்கு அசாதாரண நேரங்களிலும் அவசர நேரங்களிலும் சென்றாலும் கவலை ஏற்படாது.

    பேறுகால விடுமுறை எடுப்பதில் தொடங்கி, வீட்டுக்கும் மருத்துவமனைக்கும் இடையில் உள்ள தூரம், மருத்துவ மனைக்குச் செல்ல எடுத்துக்கொள்ளும் நேரம், வாகன வசதி, எந்த நேரத்தில் சென்றால் சாலையில் வாகன நெருக்கடி இல்லாமல் இருக்கும், வீட்டில் உள்ள குழந்தையை யார் கவனிப்பது போன்ற விஷயங்கள் வரை அனைத்திலும் கவனம் செலுத்தி, முன்னேற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும்.

    தற்போது தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட காரணத்தாலும், வீட்டில் உள்ளவர்கள் எல்லோருமே பணிக்குச் செல்வதாலும், பிரசவ நேரத்தில் வீட்டைக் கவனிக்க ஒரு நபரை முன்கூட்டியே வரவழைத்து பழக்கிவிடுவது நல்லது.

     கர்ப்பிணிக்கு ஒருவேளை பிரசவ வலி வீட்டிலேயே வந்துவிட்டாலும், மருத்துவமனை செல்வதற்குக் கொஞ்சம் காலதாமதம் ஆகிறது என்றாலும் பதற்றமடையவோ பயப்படவோ தேவையில்லை. பெரும்பாலானவர்களுக்குப் பிரசவ வலி வந்து சில மணி நேரம் கழித்துத்தான் பிரசவம் ஆகும்.

    'குழந்தையை பெற்றெடுக்க சக்தி வேண்டும் அதனால் வயிற்றுக்குச் சாப்பிட்டுப் போ' என்று வீட்டில் யாராவது யோசனை சொன்னால், அதைக் கேட்க வேண்டாம். எவ்விதத் திட உணவையும் சாப்பிடாமல் மருத்துவமனைக்குச் செல்வதுதான் நல்லது. காரணம், வயிற்றில் உணவு இருந்தால், பிரசவம் நிகழ்வது சிரமமாகலாம்.

    கருப்பையின் வாய்ப்பகுதி திறக்கப்படும்போது, வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படுவது வழக்கம். அப்போது வயிற்றில் இருப்பதெல்லாம் வெளியில் வந்துவிடும். இது கர்ப்பிணிக்குக் களைப்பை ஏற்படுத்தும். பிரசவத்தின்போது கர்ப்பிணி அழுத்தம் கொடுக்க வேண்டி இருக்கும். அதற்கு சக்தி இல்லாமல் போகும். மேலும், சிசேரியன் சிகிச்சை தேவைப்பட்டால், வயிற்றில் எதுவும் இல்லாமல் இருப்பதே நல்லது. அப்படி உணவு இருந்தால், மயக்கம் தருவதற்கு அது தடைபோடும்.

    மிகவும் தேவைப்பட்டால், மருத்துவரின் யோசனைப்படி, சிறிதளவில் ஊட்டச்சத்து பானம், பால், மோர், தண்ணீர், பழச்சாறு போன்றவற்றில் ஒன்றை அருந்தலாம். இதனால் வயிறு நிரம்பி இருக்காது பிரசவத்துக்கும் தடை ஏற்படாது. சிசேரியனுக்கு மயக்க மருந்து கொடுக்கவும் தயக்கம் தேவைப்படாது.

    மருத்துவமனைக்குச் சென்றதும், கர்ப்பிணிக்கு உண்மையான பிரசவ வலி வந்துவிட்டதா என்று மகப்பேறு மருத்துவர் அல்லது உதவியாளர் பரிசோதிப்பார். கருப்பை உட்புறப் பரிசோதனை செய்து அதை உறுதி செய்வார். தேவைப்பட்டால், கர்ப்பிணியை அறைக்குள்ளேயோ, வராந்தாவிலோ நடக்கச் சொல்வார். அதைத் தொடர்ந்து பிரசவம் மேற்கொள்வதற்குத் தயாராவார்.

    ×