search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்யநாராயண பூஜை"

    • இந்த பூஜையைத் தொடர்ந்து ஒவ்வொரு பௌர்ணமியன்றும் செய்யலாம்.
    • பவுர்ணமி அன்று காலையில் குளித்துவிட்டு எந்த ஆகாரமும் எடுத்துக்கொள்ளாமல் விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.

    சத்யநாராயண விரதம் நம் வேண்டுதல் நிறைவேறிய பிறகு அதற்காக நன்றி சொல்லும்விதமாக அமைந்த விரதமாகும்.

    இந்த விரதம் அனுஷ்டிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம்.

    பவுர்ணமி அன்று சத்ய நாராயண விரதம் கடை பிடிக்கப்படுகிறது.

    பொதுவாகவே விரதம் என்பது எதையாவது வேண்டிக்கொண்டு அது நடக்கவேண்டும் என்பதற்காக அனுசரிக்கப்படுவது.

    ஆனால், இந்த சத்யநாராயண விரதம் அப்படியல்ல, நம் வேண்டுதல் நிறை வேறிய பிறகு அதற்காக நன்றி சொல்லும் விதமாக அமைந்த விரதம்.

    இந்த சத்யநாராயண பூஜையை எப்படி அனுஷ்டிப்பது? பொதுவாகவே இந்த விரத பூஜையை எந்த மாதத்திலும் வரும் பவுர்ணமி அன்றைக்கு அனுசரிக்கலாம்.

    அன்றைக்கு பகல், இரவு பொழுதுகளைத் தவிர்த்து, பூர்ண சந்திரனின் உதய நேரத்தைப் பார்த்து அப்போது மேற்கொள்ளலாம்.

    இந்த பூஜையைத் தொடர்ந்து ஒவ்வொரு பௌர்ணமியன்றும் செய்யலாம்.

    பவுர்ணமி அன்று காலையில் குளித்துவிட்டு எந்த ஆகாரமும் எடுத்துக்கொள்ளாமல் விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.

    மஹாவிஷ்ணுவின் ஓர் அம்சம்தான் சத்யநாராயணர் என்பதால் அன்று மாலைப் பொழுதுவரை விஷ்ணு ஸ்லோகங்களை சொல்லிக்கொண்டிருக்கலாம்.

    திரும்பத் திரும்ப விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லலாம்.

    பூஜையறையிலேயே இந்த பூஜையை அனுசரித்தால் ரொம்பவும் விசேஷம்

    அல்லது பூஜை செய்வதற்காகத் தேர்ந்தெடுத்திருக்கும் இடத்தை பெருக்கி, நீரால் துடைத்து சுத்தம் செய்து, மாவுக்கோலம் போட்டுக்கொள்ளுங்கள்.

    இடவசதிக்கேற்ப சின்னதாக மண்டபம் போல அமைத்துக் கொள்ளலாம்

    அல்லது ஒரு மணை போட்டு அதிலே சத்யநாராயணர் விக்ரகத்தை வைத்தும் பூஜை செய்யலாம்.

    அல்லது சத்யநாராயணர் படம் கிடைத்தாலும் உபயோகப் படுத்திக்கொள்ளலாம்.

    மண்டபத்துக்குச் சின்னதாக ஒரு மாவிலைத் தோரணம் கட்டிக்கொள்ளுங்கள்.

    மணை அல்லது மண்டபத்துக்குள் விக்ரகம் அல்லது படத்தை வைப்பதற்கு முன்னால் அதை நன்கு துடைத்து சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள்.

    இரண்டு வாழைக் கன்று வாங்கி இருபக்கமும் சாய்த்து வையுங்கள்.

    இந்த மண்டபம் மேற்கு பார்த்தபடி இருக்கலாம்.

    நீங்கள் ஒரு மணைமேல், கிழக்கு பார்த்தோ அல்லது வடக்கு பார்த்தோ உட்கார்ந்து பூஜையை ஆரம்பிக்கலாம்.

    உங்களுக்கு இடது பக்கத்தில் இரண்டு நுனி வாழை இலைகளை ஒன்றன்மேல் ஒன்றாகக் கொஞ்சம் இடைவெளி விட்டு சேர்த்துப் போட்டுக் கொள்ளுங்கள்.

    அதன்மேல் அரிசியைப் பரப்பி வைத்துக் கொள்ளுங்கள்.

    ஆறுமுனை உள்ள ஷட்கோணம் (நட்சத்திரம் போல) கோலத்தை அதன்மேல் விரலால் வரைந்து கொள்ளுங்கள்.

    சுத்தமான நீர் நிரப்பிய ஒரு சொம்பை கோலத்தில் வையுங்கள்.

    சொம்பில் கழுத்தைச் சுற்றி ஒரு பூச்சரத்தைக் கட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

    சொம்பிற்கு சந்தனம் குங்குமம் இடுங்கள்.

    கலசத்தின் வாயில் மாவிலைக் கொத்தை செருகி வையுங்கள்.

    அதன் நடுவே மஞ்சள் பூசிய தேங்காயை வையுங்கள்.

    பிறகு விநாயகரை மனதாற வணங்கி விட்டு பூஜையை ஆரம்பியுங்கள். விஷ்ணு ஸ்தோத்திரங்களைச் சொல்லுங்கள்.

    சத்யநாராயணர் அஷ்டோத்திரம் சொல்லிக் கொண்டே உதிரிப் பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள்.

    பூஜை முடிந்ததும் பாயசம், வடை என்று பிரசாதங்கள் நிவேதனம் செய்யுங்கள்.

    அடுத்து, கற்பூரம் காட்டி இந்த பூஜையை நிறைவு செய்யலாம்.

    பூஜை முடிந்ததும் வீட்டுக்கு வெளியே வந்து, வானில் பூரணமாக ஒளிரும் சந்திரனைப் பார்த்து தரிசனம் செய்துவிட்டு நிவேதனப் பொருட்களை உட்கொண்டு விரதத்தை முடிக்கலாம்.

    சத்யநாராயண பூஜை விரதமிருப்பதாக வேண்டிக்கொண்டு எந்த கோரிக்கை நிறைவேறவேண்டும் என்று நினைக்கிறோமோ, அந்த கோரிக்கை நிறைவேறியதும் மறந்துவிடாமல் கண்டிப்பாக சத்யநாராயண பூஜையை அனுசரித்துவிட வேண்டும்.

    • ஸ்ரீமகாவிஷ்ணு, நாரதருக்கு உபதேசித்த மகிமை பெற்றது.
    • தெய்வ வழிபாட்டில் உயர்ந்தவன்- தாழ்ந்தவன் என்பது ஏது?

    பகவான் ஸ்ரீமகாவிஷ்ணு, நாரதருக்கு உபதேசித்த மகிமை பெற்றது இது. மாதம் தோறும் பவுர்ணமி அன்று மாலையில் சந்திர உதய காலத்தில் சத்யநாராயண விரதம் கடைப்பிடித்து பூஜிக்கலாம் என்று ஸ்காந்த புராணம் கூறுகிறது. இயலாதவர்கள் ஞாயிறு, திங்கள், வெள்ளிக்கிழமைகள் மற்றும் அமாவாசை, அஷ்டமி, துவாதசி, சங்கராந்தி, தீபாவளி ஆகிய நாள்களிலும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளிலும் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கலாம். சத்யநாராயண விரதம் இருப்பவர்கள், இதன் மகிமையைச் சொல்லும் கதையையும் அவசியம் படிக்க வேண்டும்.

    நைமிசாரண்யம் எனும் திருத்தலத்தில் `சத்ர' யாகம் நடந்தபோது, அங்கிருந்த முனிவர்கள், அவர்களின் சீடர்கள், அரசர்கள், அடியார்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் சூதபௌராணிகர் (புராணங்களை யெல்லாம் சொல்பவர்) என்பவர் இந்த கதைகளைக் கூறியதாக ஞான நூல்கள் தெரிவிக்கின்றன.

    மிகுந்த செல்வம், பலம் பொருந்திய ஏராளமான படைகள், அன்பான மனைவி - குழந்தைகள் என எல்லாம் கொண்டவன் மன்னன் துங்கத்வஜன். கர்வம் மிகுந்த இந்த மன்னன், ஒருநாள் காட்டில் வேட்டையாடி விட்டுத் தண்ணீர் குடித்து களைப்பைத் தீர்த்துக்கொண்டு திரும்பும்போது, ஆலமரம் ஒன்று தென்பட்டது, அங்கிருந்து பல்வேறு குரல்கள் கேட்டன.

    மன்னன் ஆல மரத்தை நோக்கிப் போனான். மர நிழலில் இடையர்கள் பலர் ஒன்று சேர்ந்து, சத்ய நாராயண பூஜை செய்து கொண்டிருந்தனர். அருகில் நெருங்காமல் சற்றுத் தள்ளி ஓர் இடத்தில் உட்கார்ந்த மன்னன், அந்த பூஜையைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தான்.

    பூஜை முடிந்தது. கலந்து கொண்டவர்கள் அனைவரும் பிரசாதம் சாப்பிட்டார்கள். சற்று தூரத்தில் இருந்த மன்னனைப் பார்த்த அவர்கள், பிரசாதத்தை ஓர் இலையில் வைத்து அவனிடம் கொடுத்தார்கள். அதை வாங்கிய அரசன் சாப்பிடவில்லை.

    `ஹும்! இடையர்கள், தந்ததை நாடாளும் மன்னனான நான் சாப்பிடுவதா? இதனால் என்ன லாபம்?' என்று கர்வதோடு பிரசாதத்தை அங்கேயே போட்டுவிட்டு, அரண்மனைக்குத் திரும்பினான். அங்கே அவனை அதிர்ச்சி வரவேற்றது. அவனது நாட்டை, மாற்றான் ஒருவன் கைப்பற்றிவிட்டான். தங்களுக்கும் ஆபத்து வந்துவிடுமோ என்று எண்ணி, மன்னனின் மனைவி-மக்கள் எங்கேயோ ஓடி மறைந்து விட்டார்கள்.

    இப்படியான அடி, மன்னனை சிந்திக்க வைத்தது. ''இதற்கெல்லாம் காரணம், எனது அகம்பாவம்தான். சத்ய நாராயண பூஜையை அலட்சியப்படுத்தி, இடையர்கள் தந்த பிரசாதத்தைச் சாப்பிடாமல் தூக்கிப் போட்டுவிட்டு வந்ததன் விளைவே இது!'' என்று சொல்லிக்கொண்டு ஆலமரத்தை நோக்கி ஓடினான் மன்னன்.

    மரத்தடியை அடைந்ததும், ''தெய்வமே! மன்னித்துவிடு. தெய்வ வழிபாட்டில் உயர்ந்தவன்- தாழ்ந்தவன் என்பது ஏது? உத்தம பக்தர்களான இடையர்களைப் போய், தாழ்வாக நினைத்தேனே! அவர்களை அவமானப்படுத்தியது, ஆண்டவனான உன்னையே அவமானப்படுத்தியதற்குச் சமம் என்பதைப் புரிந்து கொண்டேன். பெருமாளே! இன்று முதல் நானும் சத்யநாராயண பூஜையை முறையாகச் செய்வேன்!'' என்று அழுது தொழுதான்.

    கையில் கிடைத்தவற்றைக் கொண்டு சத்யநாராயண பூஜைக்கு ஏற்பாடு செய்த மன்னன், இடையர்களை அழைத்து, எந்த விதமான வேறுபாடும் இல்லாமல் சத்ய நாராயண பூஜையை செய்தான். நைவேத்தியப் பிரசாதத்தைத் தானும் உண்டு, அவர்களுக்கும் கொடுத்தான்.

    அவமானப்படுத்தியபோது தண்டித்த ஆண்டவன், மன்னன் திருந்தியபோது அவனுக்கு அருள் பொழியவும் தவறவில்லை. பகைவரால் கைப்பற்றப்பட்ட நாடு, விரைவில் அந்த மன்னனுக்குக் கிடைத்தது. பயம் நீங்கியதால் மனைவி, மக்களும் திரும்பி வந்தார்கள். அதன்பிறகு சத்யநாராயண விரதத்தைத் தொடர்ந்து செய்து, முக்தி அடைந்தான் அந்த மன்னன்.

    ×