search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணல் லிங்கம்"

    • அம்பாளுக்கு மாங்கல்யம் சாற்றினால் விரைவில் மாங்கல்ய பாக்கியம் கிட்டும்.
    • நாக பிரதிஷ்டைசெய்து, தோஷநிவர்த்தி அடைகின்றனர்.

    தொண்டை நாட்டில் உள்ள மிகப் பழமை வாய்ந்த திருத்தலங்களுள் ஒன்று, பழங்காமூர் காசிவிசுவநாதர் ஆலயம். ஈசனின் இடப்பாகம் பெற நினைத்த அம்பிகை, காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்டு திருவண்ணாமலை நோக்கி சென்றார். வழியில் ஓர் வாழைக்காட்டில் (கதலிவனம்) வாழைப்பந்தல் அமைத்தார். பின்னர் அங்கேயே மணல் லிங்கம் அமைத்து ஈசனை வழிபட நினைத்தார். ஆனால் அதற்கு நீர் தேவைப்பட்டது. உடனே தனது மைந்தர்களான கணபதியையும், கந்தனையும் அழைத்து நீர் கொண்டுவர கட்டளையிட்டார்.

    அதன்படி கணபதி மேற்கு நோக்கிச் சென்றார். அங்கே ஜவ்வாதுமலை அடிவாரத்தில் ஜமதக்னி முனிவர் தவம் இயற்றிக் கொண்டிருப்பதைக் கண்டார். குண்டலிபுரம் என்று முன்பு போற்றப்பட்ட படைவீட்டில் வாழ்ந்த இந்த முனிவர், கடுமையான தவசீலர்.

    ரிஷி பத்தினிகளில் ஒருவரான ரேணுகையின் கணவர். அத்தகைய ஜமதக்னி முனிவரிடம் வந்த கணபதி, காக வடிவம் எடுத்து, அந்த முனிவர் அருகில் இருந்த கமண்டலத்தை தட்டி விட்டார். அதில் இருந்து கங்கையைக் காட்டிலும் புண்ணியம் மிகுந்த நீர், நதியாகப் பெருக்கெடுத்து ஓடியது. (அகத்தியரின் கமண்டலத்தை கணபதி காகமாக வந்து தட்டிவிட்டு காவிரி நதி உருவான கதை வேறு). அந்த நதியே கமண்டல நதியானது. இந்த தீர்த்தமானது, கங்கையை விடவும் கால் மடங்கு புண்ணியம் மிகுந்தது.

    தர்மாரண்ய ஷேத்திரம் என்னும் ஆரணி வழியே இந்த கமண்டல நதி பாய்ந்து, வாழைப்பந்தலில் கந்தனால் ஏற்படுத்தப்பட்ட செய்யாற்றுடன் கலக்கின்றது. தர்மாரண்ய ஷேத்திரத்தின் வடபுறம், கமண்டல நாகநதியின் வடகரையில் காசியைப் போன்றே அமையப்பெற்றுள்ள ஊர்தான் பழங்காமநல்லூர் என்னும் பழங்காமூர். வாரணாசியைப் போன்று இங்கும் காசி விசுவநாதர் - விசாலாட்சி அம்மனோடு கோவில் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.

    திரேதா யுகத்தின்போது இத்தலத்தில் ரிஷ்யசிருங்கர் என்னும் கலைக்கோட்டு முனிவர் வாழ்ந்து வந்தார். இவர் பன்னெடுங்காலமாக கமண்டல நதியில் நீராடி, வடகரையில் உள்ள காசி விசுவநாதரை அனுதினமும் வழிபட்டு வந்தார். அப்போது ஒரு சமயம் வசிஷ்டரின் ஆலோசனைப்படி தென்னகம் வந்த தசரதரின் வேண்டுகோளுக்கிணங்க, அக்கரைக்கு (கமண்டல நதியின் தென்கரைக்கு) அவரை அழைத்துச் சென்று புத்திரகாமேஷ்டி யாகத்தை நடத்தி வைத்தார்.

    மேலும் தசரதரின் விருப்பப்படி புத்திரகாமேஷ்டி ஈசுவரரையும் நிறுவி வழிபாடு நடத்தினார். ரிஷ்யசிருங்கரின் காலத்திற்கும் முன்பே கமண்டல நதியின் வடகரையில், தானாக தோன்றியப் பெருமானாக காசி விசுவநாதர் வீற்றிருந்து அருள்பாலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

     பழங்காமூர் ஊரின் மையத்தில் கிழக்கு பார்த்தபடி காசி விசுவநாதர் ஆலயம் அமைந்துள்ளது. கருவறைக்குள் சற்றே இடதுபுறம் சாய்ந்த நிலையில் லிங்கத் திருமேனியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார், காசி விசுவநாதர். ஆலயத்தின் தென்புறமாக அரசும் - வேம்பும் இணைந்து காணப்படுகிறது. அதன் கீழே நாகர் சிலைகள், அருகே சமயக்குரவர்கள் நால்வர் உள்ளனர். நிருதி திசையில் தல கணபதி சன்னிதி கொண்டுள்ளார். மேற்கில் வள்ளி - தெய்வானையுடன் சண்முகர் எழுந்தருளியுள்ளார்.

    அம்பிகையாக விசாலாட்சி புன்னகை ததும்ப புன்முறுவலுடன் தனி சன்னிதியில் அருள்மழை பொழிகிறாள். ஏனைய சிவாலய தெய்வங்களும் ஆலயத்தை அலங்கரிக்கின்றன. தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது. இத்தல அம்பாளுக்கு மாங்கல்யம் சாற்றுவதாக வேண்டிக்கொள்ள விரைவில் மாங்கல்ய பாக்கியம் கிட்டும்.

    நாகதோஷத்தால் பாதிப்படைந்தவர்கள், இங்கு நாக பிரதிஷ்டையை முறைப்படி செய்து, தோஷநிவர்த்தி அடைகின்றனர். சிறந்த வேலை வேண்டுவோர் பிரதோஷத்தை நடத்திட, நல்ல வேலை கிடைக்கப் பெறுகின்றனர். பிள்ளைச் செல்வம் இல்லாதோர் சுவாமி - அம்பாளுக்கு தேன் கலந்த பால் மற்றும் தயிரினால் அபிஷேகம் செய்து பலன் அடைகின்றனர்.

    அமைவிடம்

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத்தில், ஆரணியில் இருந்து செய்யாறு செல்லும் வழியில் ஆரணியில் இருந்து ௩ கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பழங்காமூர் திருத்தலம்.

    ×