என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சைதை துரைசாமி"

    • தைலாபுரம் தோட்டத்திற்கு சென்னை முன்னாள் மேயரும், அ.தி.மு.க. முக்கிய நிர்வாகியான சைதை துரைசாமி வருகை தந்தார்.
    • தயவு செய்து அரசியல் பேச வேண்டாம் என கூறி புறப்பட்டு சென்றார்.

    விழுப்புரம்:

    தந்தை- மகனுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பா.ம.க.வில் குழப்பம் நிலவி வருகிறது. சமாதானம் செய்ய முயன்ற நிர்வாகிகளை ராமதாஸ் சந்திப்பதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை தைலாபுரம் தோட்டத்திற்கு சென்னை முன்னாள் மேயரும், அ.தி.மு.க. முக்கிய நிர்வாகியான சைதை துரைசாமி வருகை தந்தார். அவர் ராமதாசை சந்தித்து பேசினார்.

    இதன்பின் வெளியே வந்த சைதை துரைசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- டி.என்.பி.எஸ்.சி-யில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த மாணவி வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி முதலிடம் பிடித்ததற்காக ராமதாஸ் என்னை பாராட்டி இருந்தார். அதனால் ராமதாசை நேரில் சந்தித்து நன்றி கூறுவதற்காகவே வந்தேன்.

    இதனிடையே, ராமதாஸ், அன்புமணி என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தயவு செய்து அரசியல் பேச வேண்டாம் என கூறி புறப்பட்டு சென்றார். 

    • நேற்று சுமார் இரவு 4 மணி நேரமாக டாக்டர் ராமதாசிடம் ஜி .கே. மணி ஆலோசனை மேற்கொண்டார்.
    • பா.ம.க. நிர்வாகிகள் டாக்டர் ராமதாசை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது, பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைராக நானே செயல்படுவேன். செயல் தலைவராக அன்புமணி செயல்படுவார் என பரபரப்பாக பேட்டியளித்தார்.

    இந்த நிலையில் அவரை சமாதானம் படுத்துவதற்காக கடந்த 3 நாட்களாக பா.ம.க. முக்கிய நிர்வாகிகள், டாக்டர் ராமதாசின் மகள்கள் மற்றும் குடும்பத்தினர் டாக்டர் ராமதாசை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். நேற்று சுமார் இரவு 4 மணி நேரமாக டாக்டர் ராமதாசிடம் ஜி .கே. மணி ஆலோசனை மேற்கொண்டார்.

    இந்த நிலையில் இன்று காலை தைலாபுரம் தோட்டத்திற்கு சென்னை முன்னாள் மேயரும், அ.தி.மு.க. முக்கிய நிர்வாகியான சைதை துரைசாமி, பா.ம.க. தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், மயிலம் எம்.எல்.ஏ.சிவக் குமார், விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஜெயராஜ், மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் டாக்டர் ராமதாசை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் நிருபர்களை சந்தித்து தனது முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • சுயநலவாதிகளுக்கு என் கருத்து இடையூறாக இருக்கிறது என்றால், இருந்துவிட்டு போகட்டும்.
    • அ.தி.மு.க.வின் தலைவர்களை ஒருங்கிணைத்தால் கட்சி பலம் பெறும்.

    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி சமீபத்தில், 'பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. பலமான கூட்டணி அமைத்து தி.மு.க.வை வீழ்த்த வேண்டும்' என்பது உள்ளிட்ட கருத்துகளை முன்வைத்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

    அந்த அறிக்கை தொடர்பாக அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, 'வேலைவெட்டி இல்லாமல், எங்கோ அமர்ந்துகொண்டு, யாரையோ திருப்திப்படுத்த சைதை துரைசாமி கருத்துகளை கூறி வருகிறார்' என்று கடுமையாக பேசி இருந்தார்.

    அவருடைய இந்த பேச்சுக்கு சைதை துரைசாமி பதில் அளிக்கும் வகையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் முதலில் தன்னை பற்றி எம்.ஜி.ஆர். பேசிய வீடியோவை காண்பித்தார்.

    எம்.ஜி.ஆர். அந்த வீடியோவில், "சைதாப்பேட்டை என்றாலே எனக்கு எலுமிச்சை பழம்தான் நினைவுக்கு வரும். எலுமிச்சை பழத்தை மாலையாக போட்ட சைதை துரைசாமியைத்தான் எனக்கு ஞாபகம் வருமே தவிர, பிறகுதான் இந்த நிகழ்ச்சியே ஞாபகம் வரும். நான் ஒரு அரசியல்வாதி. என் அரசியல் கட்சியில் இருந்த சைதை துரைசாமி அப்போதிருந்த முதலமைச்சருக்கு இந்த சைதாப்பேட்டையிலே துணிச்சலாக எலுமிச்சம்பழ மாலையை போட்டார். ஆனால் அந்த மேடையிலேயே அடித்து தூளாக ஆக்கி சைதை துரைசாமியை தூக்கி கொண்டுபோய் சிறைச்சாலையில் போட்ட அனுபவம்தான் என் கண்முன்னே நிற்கும்'' என பேசியிருந்தார்.

    அதனைத்தொடர்ந்து ஜெயலலிதா அவரை பற்றி பேசிய வீடியோவை காண்பித்தார். அதில், 'மனிதாபிமானத்தின் மணிமகுடம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.. அந்த மகத்தான தலைவரின் கனவுகளை நனவாக்கி வரும் சிறந்த மக்கள் நலத் தொண்டனும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சைதை துரைசாமி உருவாக்கி இருக்கும் அறக்கட்டளையையும், அதன் கீழ் இயங்கும் இந்த இலவச திருமண மண்டபத்தின் சிறப்பையும் பார்க்கும்போது, சாதி, பேதம் பாராமல் எல்லா மக்களுக்கும் பயன்படும் சிறந்த பணிகளை ஆற்ற பிறந்தவர்கள் அ.தி.மு.க. உடன்பிறப்புகள்தான் என்பது உறுதிப்படுகிறது. கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் பயன்படும் ஒரு சீரிய பணி இது. கிஞ்சித்தும் லாப நோக்கம் இல்லாமல், மக்கள் தொண்டே மகேசன் தொண்டு எனும் மனப்பாங்கோடு இந்த இலவச திருமண மண்டபத்தை உருவாக்கியிருக்கும் சைதை துரைசாமியை மனம் மாற பாராட்டுகிறேன். ஆகவே இந்த நேரத்தில் நான் சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம், நிச்சயமாக எனக்கு சைதை துரைசாமி மீது முழு நம்பிக்கை உண்டு' என்று பேசி இருந்தார்.

    இந்த வீடியோக்களை காண்பித்த பிறகு சைதை துரைசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்னுடைய தியாகம், நேர்மை, அறம் சார்ந்த வாழ்வு, சேவை நிறைந்த செயலை பாராட்டியுள்ளனர். ஆனால் ஒருவர் என்னை வேலைவெட்டி இல்லாதவன் என்று சொல்லி இருக்கிறார். சேவை பற்றி உணராத இப்படிப்பட்ட மனிதர்கள் பொதுவாழ்க்கையில் இருக்கிறார்கள் என நினைத்து அவர்களை பொதுமக்கள் மத்தியில் தோலுரிக்கத்தான் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு.

    அ.தி.மு.க. நல்ல முறையில் இருக்க வேண்டும். வெற்றி பாதையில் செல்ல வேண்டும். கருத்துகளை ஏற்றுக்கொள்ள விருப்பம் இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையென்றால் விட்டுவிடுங்கள். சுயநலவாதிகளுக்கு என் கருத்து இடையூறாக இருக்கிறது என்றால், இருந்துவிட்டு போகட்டும். அ.தி.மு.க.வுக்கு விதை போட்டவன், முதல் தியாகி என்னை பார்த்து வேலைவெட்டி இல்லாதவன் என்று சொல்வதா?.

    2021-ல் சட்டமன்ற தேர்தலின்போது பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது போல, பாராளுமன்ற தேர்தலிலும் தொடர்ந்திருந்தால் தமிழ்நாட்டில் 26 இடங்களுக்கு மேல் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றிருக்கும். 2 மத்திய மந்திரிகள் கிடைத்திருப்பார்கள். மேலும் மத்தியில் அதிகார மையத்தில் இருக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தால், இங்குள்ள மாநில அதிகார மையத்திடம் இருந்து அவர்கள் நம்மை காப்பாற்றுவார்கள்.

    அ.தி.மு.க.வின் தலைவர்களை ஒருங்கிணைத்தால் கட்சி பலம் பெறும். பிளவு என்ற சொல் இருக்கக்கூடாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அதுபோல் செய்து இருக்கிறார்கள். அவர்களே செய்தபோது, இவர்களால் முடியாதா?. எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் உள்துறை மந்திரி அமித்ஷாவை கூட்டணி விஷயமாக சந்தித்து இருந்தால், அதனை நான் வரவேற்கிறேன்.

    வரும் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற முடியாவிட்டால், இனி அ.தி.மு.க.வை யாராலும் காப்பாற்ற முடியாது. எம்.ஜி.ஆரை முதன்மைப்படுத்தினால் கட்சி வளரும். அவர்தான் சொத்து, மூலதனம். அ.தி.மு.க. ஆட்சியில் மீண்டும் அமர பா.ஜ.க.வுடன் கூட்டணியை உடனே அறிவிக்க வேண்டும். ஒற்றுமையுடன் இருந்து ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடலில் எதிர்நீச்சல் அடித்து தேர்தல் என்னும் கரை சேர்பவன் தான் அண்ணா திமுக தொண்டன்.
    • இந்த இயக்கத்தால் வந்தது தான் தன் வாழ்வு என்பதை உணர்ந்திருப்பார் எனில், இப்படி அவர் பேசமாட்டார்.

    அதிமுகவை ஒருங்கிணைத்து பாஜக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்ட முன்னாள் மேயர் சைதை துரைசாமிக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சும்மா இருந்த சங்கொன்று, தன்னைத் தானே ஊதிக் கெடுத்துக்கொண்டு இருக்கிறது!

    அஇஅதிமுக-வில் உள்ள ஒவ்வொரு தொண்டனும் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் தொண்டர்கள் தான். "நான் மட்டும் தான் எம்ஜிஆர் தொண்டன்" என்று சொல்லிக்கொண்டு பாடம் எடுக்கும் இவர், என்றைக்காவது இந்த இயக்கப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாரா?

    கழகப்பணி எனும் கடலில் எதிர்நீச்சல் அடித்து தேர்தல் என்னும் கரை சேர்பவன் தான் அண்ணா திமுக தொண்டன்.

    கழகப்பணி பக்கமே தலை வைக்காமல், தேர்தல் மேகங்கள் சூழும் சமயத்தில் "நானும் அரசியலில் இருக்கிறேன்" என்று தன் இருப்பைக் காட்டிக்கொள்ள மட்டுமே உள்ள திரு. சைதை துரைசாமி போன்றோருக்கு, இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் பற்றி என்ன தெரியும்?

    இன்றும் பூத் கமிட்டி வரை கழகப்பணிகளில் தொண்டர்கள் தங்களை உற்சாகமாக ஈடுபடுத்தி வருவதை திரு. சைதை துரைசாமி போன்ற Guest Role அரசியல்வாதிகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

    இந்த இயக்கத்தால் வந்தது தான் தன் வாழ்வு என்பதை உணர்ந்திருப்பார் எனில், இப்படி அவர் பேசமாட்டார். "அஇஅதிமுக-வில் இருந்திருக்காவிட்டால் தான் யார்?" என்ற கேள்வியை திரு. சைதை துரைசாமி கண்ணாடியைப் பார்த்து கேட்டுக்கொள்ளட்டும்.

    இந்த இயக்கத்தை அழிக்க நினைத்த, நம் இதயதெய்வங்கள் இன்றும் குடியிருக்கும் கோயிலாக நாம் கருதும் நம் தலைமைக் கழகத்தை சூறையாடிய துரோகியின் பெயரை அஇஅதிமுக பெயர் கொண்ட, இரட்டை இலை சின்னம் கொண்ட Letter Head-ல் குறிப்பிடதற்கே திரு. சைதை துரைசாமி வெட்கப்பட வேண்டும்.

    இப்போதும் சரி, எப்போதும் சரி- இந்த இயக்கத்தின் பாதை நேரானது! நம் இலக்கு முடிவானது!

    மாண்புமிகு புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிசாமி

    அவர்கள் தலைமையில், மாண்புமிகு அம்மாவின் நூற்றாண்டு கனவு நோக்கி, தமிழ்நாட்டு நலனுக்கான தனிப்பெரும் இயக்கமாக அதிமுக என்றும் பயணிக்கும்...!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • காரில் பயணம் செய்த வெற்றி துரைசாமியை காணவில்லை.
    • வெற்றி துரைசாமி குடும்பத்தாரிடம் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய திட்டம்.

    முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, இமாசல பிரதேசத்தில் உள்ள லடாக் பகுதிக்கு சுற்றுலா சென்றார். இவருடன் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்த உதவியாளர் கோபிநாத் (35) சென்றிருந்தார்.

    கடந்த 4-ம் தேதி மாலை அங்கிருந்து சென்னை திரும்புவதற்காக வெற்று துரைசாமி வாடகை காரில் விமான நிலையம் புறப்பட்டார். கார் கஷங் நாலா என்ற மலைப்பகுதியில் வந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தாக்கு பகுதியில் விழுந்து, அருகே ஓடிக்கொண்டிருந்த சட்லஜ் நதிக்குள் பாய்ந்தது.

    இந்த விபத்தில் ஓட்டுனர் தஞ்ஜின் உயிரிழந்தார். மேலும் கோபிநாத் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டார். எனினும், காரில் பயணம் செய்த வெற்றி துரைசாமியை காணவில்லை. இவரை தேடுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    வெற்றி துரைசாமி மாயமான நிலையில், விபத்து நடந்த இடத்தில் இருந்த ரத்த கறைகள், திசுக்கள் சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதோடு வெற்றி துரைசாமியின் குடும்த்தாரிடம் இன்று டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

    இந்த நிலையில், மாலை 5 மணிக்கு மேல் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய முடியாது என ராயப்பேட்டை மருத்துவமனை ஊழியர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் வெற்றி துரைசாமி குடும்பத்தாரிடம் டி.என்.ஏ. பரிசோதனை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    • வெற்றி துரைசாமியின் செய்தியை பார்த்து மிகுந்த வேதனையும் அடைந்தேன்.
    • சைதை துரைசாமிக்கு இதயபூர்வமான இரங்கல்.

    சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

    இமாச்சல பிரதேசத்தில் நடந்த கார் விபத்தில் சிக்கி வெற்றி துரைசாமி உயிரிழந்து, அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது குறித்த செய்தியை பார்த்து மிகுந்த வேதனையும் அடைந்தேன்.

    மகனை இழந்து தவிக்கும் சைதை துரைசாமிக்கு இதயபூர்வமான ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாழத் தொடங்கும் வயதில் கம்பீரமாகத் தன் பணிகளைச் செய்துவந்த இளைஞர் இப்படியொரு விபத்தில் இறுதியை அடைந்தது எண்ணத் தாளாத துக்கம்.
    • மகனை இழந்து தவிக்கும் தந்தையை கனத்த மனத்தோடு ஆறுதல் கூறித் தழுவிக்கொள்கிறேன்.

    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில்,

    சென்னையின் முன்னாள் மேயர், நண்பர் சைதை துரைசாமி அவர்களின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவுச் செய்தி மிகுந்த துயரத்துக்கு உள்ளாக்குகிறது.

    வாழத் தொடங்கும் வயதில் கம்பீரமாகத் தன் பணிகளைச் செய்துவந்த இளைஞர் இப்படியொரு விபத்தில் இறுதியை அடைந்தது எண்ணத் தாளாத துக்கம்.

    மகனை இழந்து தவிக்கும் தந்தையை கனத்த மனத்தோடு ஆறுதல் கூறித் தழுவிக்கொள்கிறேன். அவர் விரைவில் இத்துயரிலிருந்து மீள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • எட்டு நாட்களுக்கு பிறகு வெற்றி துரைசாமியின் உடல் மீட்கப்பட்டது.
    • வெற்றி துரைசாமி உடலுக்கு பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, இமாசல பிரதேசத்தில் உள்ள லடாக் பகுதிக்கு சுற்றுலா சென்றார்.

    சுற்றுலா முடிந்து திரும்பும் போது, இவர் பயணம் செய்த கார் கஷங் நாலா என்ற மலைப்பகுதியில் வந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தாக்கு பகுதியில் விழுந்து, அருகே ஓடிக்கொண்டிருந்த சட்லஜ் நதிக்குள் பாய்ந்தது.

    நதியில் 5 கி.மீ. தொலைவுக்கு அடித்து செல்லப்பட்டு இருந்த வெற்றி துரைசாமியின் உடலை உள்ளூர் நீச்சல் வீரர்கள் கண்டுபிடித்து மீட்டனர். 8 நாட்களுக்கு பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டது. பின்னர் சிம்லாவில் உள்ள மருத்துவமனையில் வெற்றி துரைசாமியின் உடல் பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    பிறகு, அங்கிருந்து இன்று பிற்பகலில் சென்னை கொண்டுவரப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெற்றி துரைசாமி வீட்டிற்கு சென்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினார். பிறகு சைதை துரைசாமி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் சுகாதார துறை அமைச்சர் மா சுப்ரமணியன் நேரில் அஞ்சலி செலுத்தினார். முதல்வர் மட்டுமின்றி வெற்றி துரைசாமியின் உடலுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, வைகோ, சசிகலா, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அன்புமணி ராமதாஸ், எடப்பாடி பழனிசாமி உள்பட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

    சென்னையில் வெற்றி துரைசாமியின் உடல் வைக்கப்பட்டு இருந்த வீட்டிற்கு பொது மக்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். 

    • எனக்கு ஒரு மகன் போனாலும், பக்கபலமாக இங்கு என்னுடைய மகன்கள் இருக்கிறார்கள், மகள்கள் இருக்கிறார்கள்.
    • நான் இன்னும் உறுதியோடு, வலிமையோடு சேவையை செய்து என்னுடைய வாழ்க்கை அமைத்துக்கொள்வேன்.

    பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி. இவரது மகன் வெற்றி (வயது 45). இவர் இமாசல பிரதேச மாநிலத்துக்கு சுற்றுலா சென்றார். கடந்த 4-ந்தேதி அவர் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சட்லஜ் நதியில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் கார் டிரைவர் பலியானார். உதவியாளர் கோபிநாத் படுகாயத்துடன் மீட்கப்பட்டார். வெற்றி மாயமானார்.

    அவரது உடல் 8 நாட்களுக்கு பின்னர் சட்லஜ் நதியில் பாறைகளுக்கு அடியில் இருந்து நேற்று முன்தினம் உள்ளூர் நீச்சல் வீரர்கள் மூலம் மீட்கப்பட்டது.

    இதையடுத்து அவரது உடல் ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் நேற்று மாலை 4 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. அங்கு அவரது உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏற்றப்பட்டது. கிழக்கு தாம்பரம் ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் அஜித்குமார் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.

     

    அதன் பின்னர் உடல் நந்தனம் சி.ஐ.டி. நகரில் உள்ள சைதை துரைசாமியின் இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் சைதை துரைசாமிக்கு ஆறுதல் கூறி சென்றனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் அஞ்சலி செலுத்த வந்தார். ஆனால், கூட்ட நெரிசல் காரணமாக அவரால் உள்ளே வர முடியவில்லை. பின்னர், தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நடிகர் விஜய் சார்பில் வெற்றியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    நேற்று இரவு 8.20 மணிக்கு மேல் சென்னை நந்தனத்தில் உள்ள சைதை துரைசாமியின் இல்லத்தில் இருந்து வெற்றியின் உடல் தகனம் செய்வதற்காக தியாகராயநகரில் உள்ள கண்ணாம்மாபேட்டை மயான பூமிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு, வெற்றியின் உடலுக்கு சைதை துரைசாமியின் பேரன் சித்தார்த் கொள்ளி வைத்தார்.

    தகன சடங்குகள் நிறைவடைந்த நிலையில் சைதை துரைசாமி மற்றும் அவரின் குடும்பத்தினர் வெளியே வந்தனர். மயானத்திற்கு முன்பு திரண்டு இருந்த ஆதரவாளர்கள், அ.தி.மு.கவினர் முன்னிலையில், சைதை துரைசாமி பேசியதாவது:-

    வெற்றி நம்மை விட்டு பிரிந்தது என்பது விதி. போகவே வேண்டாம் என்று நான் சொன்னேன். இந்த முறை இது கடைசி என்று சொல்லி சென்றான். அது அவனுக்கு கடைசி பயணமாக இருக்கும் என்று நான் ஒரு காலமும் நினைக்கவில்லை.

    இந்தியா மற்றும் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், அரசின் உயர் பதவிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். பதவிகளில் பணியாற்ற வாய்ப்பை பெற்ற மகன்களும், மகள்களும் இங்கு வந்துள்ளார்கள்.

    எனக்கு ஒரு மகன் போனாலும், பக்கபலமாக இங்கு என்னுடைய மகன்கள் இருக்கிறார்கள், மகள்கள் இருக்கிறார்கள் என்ற மன வலிமையுடன் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    நான் மனம் கலங்கமாட்டேன். காரணம் இத்தனை மகன்களை நான் பெற்றுள்ளேன். அவர்கள் எல்லோரும் இருக்கிறார்கள். ஆகவே, நான் இன்னும் உறுதியோடு, வலிமையோடு சேவையை செய்து என்னுடைய வாழ்க்கை அமைத்துக்கொள்வேன் என்று உறுதி எடுத்து, என் மகனின் இறுதி நாளில் நான் சூளுரை கொண்டு அந்த பாதையில் நான் பயணிக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சட்லஜ் நதியில் விழுந்து கார் விபத்துக்குள்ளானது.
    • வெற்றி துரைசாமியின் சடலம் 8 நாட்களுக்கு பிறகு மீட்கபட்டது.

    சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, இமாச்சல பிரதேசத்தின் சட்லஜ் நதியில் விழுந்து கார் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார்.

    இவரது சடலம் 8 நாட்களுக்கு பிறகு மீட்கபட்டது. பின்னர், சென்னைக்கு உடல் கொண்டு வரப்பட்டதை அடுத்து, இறுதிச்சடங்கு நடைபெற்றது.

    இந்நிலையில், வெற்றி துரைசாமி மறைவுக்கு சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியை நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.

    கேரள மாநிலம் பாலக்காட்டில் புனரமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தை கவர்னர் சதாசிவம் நாளை திறந்து வைக்கிறார். #MGRHouse
    கொழிஞ்சாம்பாறை:

    சினிமா, அரசியல் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்த மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வடவனூர் ஆகும்.

    சிறுவயதில் இங்கு எம்.ஜி.ஆர். குடும்பத்தோடு வசித்தார். அவர் வசித்த வீடு தற்போது அங்கன்வாடி மையமாக செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்த இந்த வீட்டை எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி 2 முறை பராமரித்தார். அதன் பின்னர் அந்த வீட்டை யாரும் கண்டு கொள்ளவில்லை. இதனால் வீடு சிதிலமடைந்து குடியிருக்க முடியாமல் இருந்தது.

    இது குறித்து அறிந்த சென்னை முன்னாள் மேயரும், எம்.ஜி.ஆர். பேரவைத்தலைவருமான சைதை துரைசாமி அந்த வீட்டை பார்வையிட்டார். எம்.ஜி.ஆர். வசித்த வீட்டை புனரமைக்க முடிவு செய்தார்.

    அதன்படி ரூ.50 லட்சம் செலவில் சிதிலமடைந்த வீட்டை புதுப்பொலிவுடன் மாற்றி எம்.ஜி.ஆர். நினைவு இல்லமாக அமைக்கப்பட்டது. இந்த இல்லத்தில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையம் தொடர்ந்து செயல்படும்.


    இது தவிர பார்க்கிங், எம்.ஜி.ஆர். அருங்காட்சியகம், பார்வையாளர்கள் கேலரி, சுகாதார வளாகம் ஆகியவைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இல்லத்தின் முன்பு எம்.ஜி.ஆர். உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. முகப்பில் ‘சத்திய விலாசம்’ என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து எம்.ஜி.ஆரின் சகோதரரின் பேரன் கூறும்போது, எம்.ஜி.ஆரின் நினைவு இல்லத்திறப்பு விழா நாளை நடைபெறுகிறது. இந்த இல்லத்தை கேரள கவர்னர் சதாசிவம் திறந்து வைக்கிறார்.

    கேரள மாநில கலாசார துறை அமைச்சர் பாலன், நீர்பாசன துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர் என்றார்.

    எம்.ஜி.ஆரின் நினைவுகளை அங்கிருந்தவர்கள் நினைவு கூர்ந்து வருகிறார்கள்.  #MGRHouse

    சென்னை மேயராக பதவி வகித்தபோது கொளத்தூர் தொகுதியில் நிறைவேற்றப்பட்ட பணிகள் என்ன? என்பது குறித்து சைதை துரைசாமி பட்டியலிட்டுள்ளார். #ADMK #SaidaiDuraisamy #KolathurConstituency
    சென்னை:

    பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொளத்தூர் இரட்டை ஏரி 100 அடி சாலை சந்திப்பில், நெடுஞ்சாலைத்துறை மூலம், மேம்பாலம் கட்டுவதற்கு இன்றைய முதல்-அமைச்சர், அன்றைய நெடுஞ்சாலைத்துறை அமைச்சரிடம், பலமுறை விண்ணப்பம் கொடுத்து, நேரிடையாக பார்வையிடச் செய்து, சுமார் ரூ.48 கோடி செலவில் மேம்பாலம் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதேபோல், கொளத்தூர் - வில்லிவாக்கம் எல்.சி.1 சந்திக்கடவின் குறுக்கே மேம்பாலம் அமைப்பதற்கு தடைகள் பல இருந்து கைவிடப்பட்ட இந்த திட்டம், 2012-2013 நிதிநிலை அறிக்கையில் என்னால் அறிவிக்கப்பட்டு, தற்போது சுமார் ரூ.58.5 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவங்கப்படவுள்ளன. கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மேம்பாட்டிற்காக கடந்த 25-10-2011 முதல் இன்று வரை சென்னை மாநகராட்சியால் ரூ.205 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டிலான 1,916 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

    அதாவது, கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 1,431 உட்புறச்சாலைகளில், 248 கான்கிரீட் சாலைகள் மற்றும் 943 உட்புற தார்சாலைகளை மேம்படுத்தும்பணி, மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, பூங்கா, மாநகராட்சி கட்டிடம், பொதுக் கழிப்பிடம், மயானம், நடைபாதை, மழைநீர் சேகரிப்புத் தொட்டி போன்ற அபிவிருத்திப் பணிகளின் மேம்பாட்டிற்காக மொத்தம் ரூ.205 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டிலான 1,916 பணிகள் நடைபெற்றுள்ளது.

    மேயர் நிதியின் கீழ் ரூ.8 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் 34 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை, 2 உயர்கோபுர மின்விளக்கு அமைக்கும் பணிகள், 15 பேருந்து நிழற்குடைகள் அமைக்கும் பணிகள், குளம் அபிவிருத்தி செய்யும் பணிகள், பள்ளிக்கட்டிடம் அபிவிருத்தி செய்யும் பணிகள் நடைபெற்றுள்ளன.

    பேருந்து சாலைகள் துறையின் கீழ் ரூ.21 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் 18.3 கிலோ மீட்டர் நீளத்தில், 34 பேருந்து சாலைகள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ரூ.1 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் 16 பேருந்து நிழற்குடைகள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மின்துறை மூலம் புதிதாக 832 மின்கம்பங்கள் அமைப்பது, 7 உயர்கோபுர மின் விளக்குகள் அமைப்பது, 17.3 கி.மீ. நீளத்தில் புதை மின் வடம் இடுவது மற்றும் 5,655 புதிய எல்.இ.டி. விளக்குகள் மாற்றும் பணி உள்ளிட்ட ரூ.10 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டிலான 60 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

    மழைநீர் வடிகால்வாய் துறை மூலம் மழைநீர் வடிகால்வாய்கள் 19.53 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.19 கோடியே 91 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. கட்டிடத்துறை மூலம் ரூ.4 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில், 3 பள்ளிக் கட்டிடம், ஒரு நகர நல்வாழ்வு நிலையம் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. துப்புரவுப் பணிக்காக இயந்திரப் பொறியியல் துறை மூலம் ரூ.2 கோடியே 30 லட்சம் செலவில் 9 எண்ணிக்கையிலான கனரக காம்பாக்டர் வாகனங்களும், ரூ.91 லட்சம் செலவில் 6 எண்ணிக்கையிலான இலகு ரக காம்பாக்டர் வாகனங்களும் கொள்முதல் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

    கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சிப் பள்ளிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 663 மாணவ - மாணவியர்களுக்கு வண்ணச் சீருடைகளும், 5 ஆயிரத்து 254 மாணவ - மாணவியர்களுக்கு சைக்கிள்களும், 5 ஆயிரத்து 274 மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கப்பட்டுள்ளன.

    மாவட்ட குடும்ப நலத்துறை மூலம் கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 9 ஆயிரத்து 786 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் 1,418 பேருக்கு, ரூ.5 கோடியே 49 லட்சத்து 25 ஆயிரம் காசோலையாகவும் மற்றும் 5 ஆயிரத்து 672 கிராம் தங்க நாணயமாகவும் வழங்கப்பட்டுள்ளது.

    விதவை, முதியோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என ஆயிரக்கணக்கான பேருக்கு உதவித்தொகை கிடைத்திடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி பெற்றுத்தரப்பட்டது. இது மட்டுமல்லாது குடிசைமாற்று வாரியம், வீட்டுவசதி வாரியம் போன்ற அரசின் பல்வேறு துறைகளின் மூலம் ஏராளமான நலத்திட்டப் பணிகள், அபிவிருத்தி பணிகள் போன்றவைகள் பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப, அனைத்து மனுக்களின் மீதும் நடவடிக்கை எடுத்து நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு சைதை துரைசாமி கூறியுள்ளார். #ADMK #SaidaiDuraisamy #KolathurConstituency
    ×