search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்திய மூர்த்தி பவன்"

    • சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை பதவியேற்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
    • தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருப்பவர்கள் விளிம்பு நிலை மக்கள், தலித்துகள் தான்.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டு, மாநிலத் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார். அவர் மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சி சென்னை சத்திய மூர்த்தி பவனில் நடை பெற்றது.

    இதையொட்டி அண்ணா சாலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சத்தியமூர்த்தி பவனை அடைந்த செல்வப் பெருந்தகை, கட்சியின் மேலிட பார்வையாளர் அஜோய் குமார் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண் டார். முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி பொறுப்புகளை ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை பதவியேற்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசும்போது, ''தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருப்பவர்கள் விளிம்பு நிலை மக்கள், தலித்துகள் தான். கடந்த 70 ஆண்டுகளாக அவர்களிடம் நிறைய வாக்குகளை பெற்றிருக்கிறோம். ஆனால் அவர்களுக்கு நாம் குறைவாகவே செய்துஇருக்கிறோம். இன்று செல்வப்பெருந்தகை தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில் அவரை நான் மனமார வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன்.

    நான் திருநாவுக்கரசரிடமிருந்து தலைவர் பதவியை பெற்றபோது மகிழ்ந்தேன். அதே மகிழ்ச்சியோடு இந்த பதவியை செல்வப் பெருந்தகைக்கு வழங்குகிறேன்'' என்றார். நிகழ்ச்சியில் செல்வப்பெருந்தகை பேசியதாவது:-

    இந்தியாவுக்கு மிகப் பெரிய ஆபத்து வந்திருக்கிறது. நாட்டை காப்பாற்ற ராகுல்காந்தி பிரதமராக வேண்டும். மல்லிகார்ஜூன கார்கே நம்பிக்கையோடு இந்த பொறுப்பை எனக்கு வழங்கி இருக்கிறார். இந்த நாட்டை காக்க முடியும் என்றால் அது காங்கிரசால் மட்டுமே முடியும். அழகிரியின் பணி பாராட்டுக்குரியது. அவர் எல்லோரையும் அரவணைத்துச் சென்றார். 18 எம்.எல்.ஏ.க்கள், 8 எம்.பி.க்களை பெற்றுத்தந்தார்.


    காங்கிரஸ் தொண்டர்கள் ஒருபோதும் பாஜகவை தமிழகத்தில் காலூன்ற அனுமதிக்கமாட்டார்கள். அனைவரும் கூட்டு முயற்சி மேற்கொண்டால் காமராஜர் ஆட்சி கொண்டுவர முடியும். அதற்கு எல்லோரும் சேர்ந்து களம் அமைப்போம். இன்று இல்லை என்றாலும் ஒருநாள் நடந்தே தீரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட தலைவர் சிவ.ராஜ சேகரன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் தேசிய செயலாளர் சிரி வெல்ல பிரசாத், பெ.விஸ்வநாதன், முன்னாள் மாநில தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, கிருஷ்ணசாமி, திரு நாவுக்கரசர், முன்னாள் மத்திய அமைச்சர்கள் மணி சங்கர் அய்யர், சுதர்சன நாச்சியப்பன், தனுஷ்கோடி ஆதித்தன், மாநில சிறு பான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல் போன்ஸ், செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், மாநில பொருளாளர் ரூபி மனோகர், சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, எம்.பி.க்கள் விஜய்வசந்த், ஜோதிமணி, ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், ரஞ்சன்குமார், முத்தழகன், டில்லி பாபு, மகளிர் அணி தலைவி சுதா ராமகிருஷ்ணன், ஓ.பி.சி. பிரிவு மாநில துணை தலைவர் ரவிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×