search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரவு உணவு சாப்பிட சரியான நேரம்"

    • ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வது அவசியமானது.
    • அத்தகைய உணவுகளை எப்போது சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியமானது.

    உடல் நலனை பாதுகாப்பதற்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வது அவசியமானது. அத்தகைய உணவுகளை எப்போது சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியமானது. நிறைய பேர் விரும்பிய நேரத்தில் உணவு உண்ணும் வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். இரவு உணவை தாமதமாக உட்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

    அலுவலகம் முடியும் நேரத்திலோ, வீடு திரும்பும் வழியிலோ நொறுக்குத்தீனிகளை உட்கொண்டுவிட்டு இரவு உணவு உண்ணும் நேரத்தை தாமதப்படுத்துகிறார்கள். 9 மணிக்கோ, அதற்கு பிறகோ சாப்பிடுபவர்களும் இருக்கிறார்கள். அப்படி சாப்பிடுவது செரிமான செயல்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

    இரவு 7 மணிக்குள் சாப்பிடுவதுதான் சரியானது. அதுதான் ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் நல்லது என்பது உணவியலாளர்களின் கருத்தாக இருக்கிறது. முன்னோர்களும் அப்படி சாப்பிடும் வழக்கத்தைத்தான் பின்பற்றினார்கள். அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு அதுவும் ஒரு காரணமாக அமைந்திருக்கிறது.

     இரவு 7 மணிக்குள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

    * தூக்கத்திற்கும், செரிமானத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு. இரவு தாமதமாக சாப்பிட்டுவிட்டு உடனே தூங்க செல்லும்போது செரிமான செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படும். அது தன் வேலையை செய்வதில் தொய்வு ஏற்படும். தூக்கமும் தடைபடும். இரவு 7 மணிக்குள் சாப்பிட்டுவிட்டு 9 மணிக்கு பிறகு தூங்கச் செல்லும் வழக்கத்தை பின்பற்றினால் செரிமானம் சீராக நடைபெறும். உடல் உறுப்புகளுக்கும் எந்தவித பாதிப்பும் நேராது. அவை ஓய்வெடுத்து ஆழ்ந்த தூக்கத்திற்கு வித்திடும். காலையில் எழும்போது சோர்வு எட்டிப்பார்க்காது.

    * இரவு உணவுக்கும், காலை உணவுக்கும் இடையே போதுமான இடைவெளி இருப்பது உடல் எடையை சீராக பராமரிக்கவும் உதவும். இரவு 7 மணிக்குள் உணவு உட்கொள்ளும்போது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு எரிக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

    * இரவு உணவை 7 மணிக்கு உண்ணும்போது உடலில் உள்ள கலோரிகளை எதிர்த்து போராடுவதற்கு உதவும். உடல் எடை குறைவதற்கும் வழிவகுக்கும்.

    * இரவு தாமதமாக சாப்பிடும்போது விரைவாக செரிமானம் ஆவதற்கு செரிமான மண்டலம் ஒத்துழைப்பு கொடுக்காது. இரவு உணவுக்கும், தூங்கச் செல்லும் நேரத்திற்கும் இடையே போதிய இடைவெளி இருக்க வேண்டும். தாமதமாக சாப்பிடும்போது அந்த இடைவெளி குறைந்துவிடும். அதன் காரணமாக அஜீரணம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளும் உண்டாகும்.

    * இரவு உணவை தாமதமாக சாப்பிடும்போது கூடுதல் கலோரிகளை எரிப்பதற்கு போதிய நேரமில்லாமல் போய்விடும்.

    * நீரிழிவு, இதயம், தைராய்டு சார்ந்த நோய் பாதிப்பு கொண்டவர்கள் இரவு உணவை குறைவாக சாப்பிட வேண்டும். மேலும் இரவில் சீக்கிரமாகவே சாப்பிட்டுவிடுவதும் நல்லது.

    ×