search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டு தோட்டம் பராமரிப்பு"

    • லாவண்டர் செடி, மகரந்த சேர்க்கைக்கு வித்திடும் குணாதிசயம் கொண்டது.
    • வசீகரிக்கும் தோற்றம் மட்டுமல்ல நறுமணமும் கொண்டது.

    வீட்டில் செடிகள் வளர்க்க ஆசைப்படுபவர்கள், தாங்கள் நிர்வகிக்கும் மினி தோட்டத்தில் லாவண்டர் செடியையும் நிச்சயம் இடம்பெற செய்ய வேண்டும். அதற்கான 6 காரணங்கள் குறித்து பார்ப்போம்.

    வசீகரிக்கும் நறுமணம்

    லாவண்டர் செடி வசீகரிக்கும் தோற்றம் மட்டுமல்ல நறுமணமும் கொண்டது. அதன் பூக்கள் இனிமையான வாசனை தரக்கூடியவை. அவற்றை நுகர்வது மனதை தளர்வடையச் செய்யும். மனதையும் சாந்தப்படுத்தி அமைதியடையச் செய்யும்.

    வீட்டுத்தோட்டத்தில் லாவண்டர் செடியை வளர்த்தால் அதன் நறுமணம் ஒட்டுமொத்த தோட்டத்திலும் பரவி இருக்கும். அங்கு சென்றாலே இனிமையான சூழலை உணர முடியும். லாவண்டர் பூக்களை வீட்டின் உள் அறைகளில் ரோஜா மலர் இதழ்களை போல் உதிர்த்து, அலங்கரித்து வைத்தால் அதன் வாசனை வீடெங்கும் பரவி புத்துணர்ச்சியூட்டும்.

     மகரந்த சேர்க்கைக்கு வித்திடும்

    லாவண்டர் செடி, மகரந்த சேர்க்கைக்கு வித்திடும் குணாதிசயம் கொண்டது. தேனீக்கள், பட்டாம்பூச்சிகள் உள்பட செடிகளுக்கு நன்மை செய்யும் பூச்சிகளை உங்கள் தோட்டத்திற்கு வர வழைத்துவிடும். லாவண்டர் செடியை வளர்ப்பதன் மூலம் தோட்டச் செடிகள் பூத்துக்குலுங்கி காய்ப்பதற்கு அத்தியாவசிய தேவையான மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதற்கு நீங்கள் புகலிடத்தை உருவாக்குகிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். இப்படி மற்ற தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுவதன் மூலம் சுற்றுச்சூழல் அமைப்பில் இந்த செடி முக்கிய பங்கு வகிக்கிறது. மகரந்தச் சேர்க்கை தடையின்றி நடைபெறுவதன் மூலம் காய்கறிகள், பழங்கள் விளைச்சல் அதிகரிப்பதற்கு வித்திடக்கூடியது.

    அழகான அலங்கார செடி

    லாவண்டர் நறுமண செடி மட்டுமல்ல, அற்புதமான அலங்கார தாவரமாகும். அதன் மெல்லிய, வெளிர் பச்சை நிற பசுமையான தண்டு, வெள்ளை மற்றும் ஊதா நிறம் கலந்த பூக்களின் அடுக்கடுக்கான கிளை பகுதிகள் பார்ப்பதற்கு அழகாக காட்சி அளிக்கும். லாவண்டர் செடியை அழகான பூந்தொட்டிகளில் நட்டு வளர்த்தால் இன்னும் வசீகரமாக தோற்றமளிக்கும்.

      மருத்துவ பயன்பாடு

    லாவண்டர் அரோமாதெரபி மற்றும் மருத்துவத்தில் நீண்டகாலமாக பயன்பாட்டில் இருக்கிறது. லாவண்டர் பூக்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் மனதை அமைதிப்படுத்தும் பண்புகளை கொண்டது. மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், ஓய்வெடுப்பதற்கும் அரோமாதெரபியில் முக்கிய அங்கம் வகிக்கிறது. லாவண்டர் எண்ணெய்யை சரும எரிச்சல் மற்றும் சிறிய வெட்டுக்காயங்களுக்கு பயன்படுத்தலாம்.

    குறைந்த பராமரிப்பு

    செடிகளை பராமரிப்பதற்கு போதிய நேரம் ஒதுக்க முடியாதவர்களுக்கு லாவண்டர் சரியான தேர்வாக அமையும். இது ஓரளவுக்கு வறட்சியை தாங்கக்கூடியது. அதனால் குறைந்தபட்ச கவனிப்பு முறையை கையாண்டாலே போதுமானது. சூரிய ஒளியை அது விரும்பும். வெயில் உக்கிரமாக இருந்தாலும் கூட தாக்குப்பிடித்து வளரக்கூடியது. அதனால் அதிக வெயில், வறண்ட கால நிலை நிலவும் பகுதிகளில் வளர்க்க ஏற்றது. பூக்கள் பூத்த பிறகு நேர்த்தியாக கத்தரித்துவிட்டால் ஒரே அளவில் வடிவம் மாறாமல் அழகுற வளரக்கூடியது.

     தூக்கத்திற்கு உதவும்

    லாவண்டரின் அமைதியான பண்புகள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுவதாக கூறப்படுகிறது. படுக்கை அறையில் லாவண்டர் செடியை வைப்பது, டிப்யூசர் எனப்படும் உமிழும் கருவியில் லாவண்டர் எண்ணெய்யை பயன்படுத்துவது நிம்மதியான தூக்கத்திற்கு பங்களிக்கும். அமைதியான வாசனையை அனுபவிக்க விரும்பினாலும், மகரந்த சேர்க்கைக்கு நன்மை பயக்கும் பூச்சிகளை வரவழைக்க முயற்சித்தாலும் லாவண்டர் உங்கள் வீட்டுத்தோட்டத்தில் கட்டாயம் இடம்பெற வேண்டும்.

    ×