என் மலர்
நீங்கள் தேடியது "ஜிந்தாபாத்"
- பாஜகவிற்கு தான் பாகிஸ்தான் எதிரி நாடு எங்களுக்கு அண்டை நாடுதான்
- ஜின்னாவின் சமாதிக்குச் சென்று அவரைப் போல் மதச்சார்பற்ற தலைவர் வேறு யாரும் இல்லை என்று கூறிய எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னம் விருதை பாஜக கொடுத்துள்ளதே
பாஜகவிற்கு தான் பாகிஸ்தான் எதிரி நாடு எங்களுக்கு அண்டை நாடுதான் என கர்நாடக காங்கிரஸ் சட்டமேலவை உறுப்பினர் பி.கே.ஹரிபிரசாத் கூறியுள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் நான்கு மாநிலங்களவை இடம் காலியாக உள்ளது. நான்கு இடத்திற்கு காங்கிரஸ் தரப்பில் மூன்று பேரும், பா.ஜனதா- மதச்சார்பற்ற ஐக்கிய தளம் சார்பில் இருவரும் போட்டியிட்டதால் தேர்தல் நடத்தப்பட்டது.
காங்கிரஸ் தரப்பில் நிறுத்தப்பட்ட மூன்று வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். அவர்களில் ஒருவர் சயீத் நசீர் ஹுசைன். இவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் சட்டமன்ற வளாகத்தில் அவர்களுடைய ஆதரவாளர்கள் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷம் எழுப்பியதாக பா.ஜனதாவினர் குற்றஞ்சாட்டினர். மேலும், இது தொடர்பாக புகார் அளிக்க வேண்டும் என வற்புறுத்தினர். மேலும், கோஷம் எழுப்பியதற்கான ஆடியோ ஆதாரத்தையும் வழங்கினர்.
இது தொடர்பான விவாதத்தில் பேசிய பி.கே.ஹரிபிரசாத், "பாஜகவை பொறுத்தவரை பாகிஸ்தான் எதிர் நாடாக இருக்கலாம், ஆனால் எங்களை பொறுத்தவரை பாகிஸ்தான் அண்டை நாடுதான். லாகூரில் உள்ள ஜின்னாவின் சமாதிக்குச் சென்று அவரைப் போல் மதச்சார்பற்ற தலைவர் வேறு யாரும் இல்லை என்று கூறிய எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னம் விருதை பாஜக கொடுத்துள்ளதே. அப்போது பாகிஸ்தான் எதிரி நாடாக இல்லையா? என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக நான்கு முறை போர் நடத்திய பாகிஸ்தானை "எதிரி தேசம்" என்று காங்கிரஸ் கட்சி கூறவில்லை. ஆகையால் "தேச விரோதமாக காங்கிரஸ் கட்சி நடந்து கொண்டுள்ளது என்று பாஜக விமர்சித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறுகையில் "நாங்கள் குரலை ஆடியோவை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளோம். அறிக்கை வரும்போது, சிலர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கமிட்டது உண்மையாக இருந்தால், அந்த நபர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். அவர்களை காப்பாற்றும் என்ற கேள்விக்கே இடமில்லை" என்றார்.