search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமணத்தடை அகலும்"

    • 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு பழமையான வைணவத் திருத்தலம் ஆகும்.
    • லட்சுமி நாராயணப் பெருமாள், கருவறையில் அழகே உருவாக வீற்றிருக்கிறார்.

    சென்னை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம், பள்ளஈகை. இந்த கிராமத்தில் லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில் இருக்கிறது. இந்த ஆலயமானது, 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு பழமையான வைணவத் திருத்தலம் ஆகும்.

    ஒரு கட்டத்தில் சிதிலமடைந்து பராமரிப்பு இன்றி கிடந்த இந்த ஆலயத்தை, அந்தப் பகுதி மக்கள் ஒத்துழைப்போடு, புனரமைத்ததோடு, ராஜகோபுரம் மற்றும் சுற்றுச்சுவரும் கட்டப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததும் கடந்த 2013-ம் ஆண்டு ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பச்சை பசேலென்று இயற்கை படர்ந்த பள்ளஈகை கிராமத்தில் இத்தலம் அழகுற அமைந்திருக்கிறது. கோவிலுக்கு வெளியே விளக்குத் தூணும், பலிபீடமும் அமைந்துள்ளன. ஒரு நிலை ராஜகோபுரத்தோடு காட்சி தரும் இத்தலத்திற்குள் நுழைந்தால், நான்கு கால் மண்டபம் காணப்படுகிறது.

    இந்த ஆலயமானது, அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்போடு திகழ்கிறது. ஆலயத்தின் உள்பகுதியில் இடது புறத்தில் ராமர், லட்சுமணர், சீதாதேவி ஆகியோர் எழுந்தருளியுள்ள சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சன்னிதிக்கு எதிரில் ஆஞ்சநேயர் சன்னிதி இருக்கிறது.

    மேலும் ஆலயத்திற்குள் ஆதிசேஷன் (நாகர்) திருமேனியும் உள்ளது. அர்த்த மண்டபத்தில் விஷ்வக்சேனர், நம்மாழ்வார், உடையவர், ஸ்ரீதேசிகன் ஆகியோர் சிலை ரூபத்தில் வீற்றிருந்து அருள்கிறார்கள்.

    இவ்வாலய மூலவரான லட்சுமி நாராயணப் பெருமாள், கருவறையில் அழகே உருவாக வீற்றிருக்கிறார். அவர் தனது இடது பக்க மடி மீது மகாலட்சுமி தாயாரை அமர வைத்து, தனது இடது கரத்தால் தாயாரை அணைத்தவாறு நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். மூலவருக்கு முன்பாக ஸ்ரீதேவி- பூதேவி சமேத லட்சுமி நாராயணரின் உற்சவத் திருமேனியும் உள்ளது.

    அருகிலேயே சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், ஸ்ரீதேசிகர் ஆகியோருக்கும் உற்சவ மூர்த்தங்கள் வைக்கப்பட்டுள்ளன. பெருமாள் ஆலயங்கள் அனைத்திலும் வீற்றிருக்கும் பெரிய திருவடி எனப்படும் கருடாழ்வார் இங்கு இல்லை. மாறாக ஆலயத்தின் தீபத் தூணில் சிற்பமாக அவர் காணப்படுகிறார்.

    தாயாருடன் அருளும் இத்தல பெருமாளை வணங்கி வழிபட்டால், திருமணத் தடைகள் அனைத்தும் அகலும் என்பது ஐதீகம். தாயாரை மடியில் இருத்திய நிலையில் சேவை சாதிக்கும் மூலவரை பிரார்த்திப்பதால், கணவன் - மனைவி ஒன்றுமை ஓங்கும் என்பதும், மன வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர் என்பதும் இத்தலத்திற்கே உரிய பெரும் சிறப்பாகும். இதுதவிர குழந்தை பாக்கியம் கிடைக்கவும், சர்வ தோஷங்களும் நிவர்த்தியாகவும், இத்தல இறைவனை வழிபாடு செய்கிறார்கள்.

    ஆண்டுதோறும் இத்தலத்தில் பலவிதமான விழாக்கள் நடைபெறுகின்றன. சித்திரை வருடப்பிறப்பு, ஆனித் திருவோணம் (கும்பாபிஷேக தினம்), ஆவணி மாதத்தில் திருபவித்ரோத்சவம், கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை, விஜயதசமி, தீபாவளி, கார்த்திகை தீபம், அனுமன் ஜெயந்தி, தைப்பொங்கல் (சங்கராந்தி), ராமநவமி, பங்குனி உத்திரம் முதலான உற்சவங்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. இவ்வாலயத்தில் பாஞ்சராத்ர ஆகமப்படி, காலை 7 மணி முதல் 9 மணி வரை, ஒரு கால நித்திய பூஜை தவறாமல் நடைபெறுகிறது.

    அமைவிடம்

    திருக்கழுக்குன்றத்தில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சாலையில் கொத்திமங்கலம் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் பள்ளஈகை கிராமம் அமைந்துள்ளது.

    • அம்பாசமுத்திரம் அருகே மயில் ஏறி முருகன் கோவில் உள்ளது.
    • ஆலயத்தை அடைய 500 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.

    'குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடியிருப்பான்' என்பார்கள். அப்படி ஒரு குன்றின் மேல் அமைந்த ஆலயம்தான், அம்பாசமுத்திரம் அருகே உள்ள மயில் ஏறி முருகன் கோவில். இந்த குன்றின் மீதுள்ள முருகன் ஆலயத்தை அடைய 500 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். குன்றின் அடிவாரத்தில் சிறிய பிள்ளையார் கோவில் ஒன்று உள்ளது. மலை ஏறிச் செல்லும் வழியில் இடும்பன் சன்னிதியும், அகத்தியர் சன்னிதியும் உள்ளன 

    குன்றின் உச்சியில் சிறிய அளவிலான முருகன் கோவில் அமைந்துள்ளது. கருவறையில் வள்ளி-தெய் வானையுடன் கல்யாண கோலத்தில், மயில் வாகனத்துடன் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். அருகிலேயே உற்சவ மூர்த்தங்களும் காணப்படுகின்றன. கருவறையின் முன்பாகவும் மயில் வாகனம் இருக்கிறது.

    தல வரலாறு

    தூத்துக்குடியில் துறைமுகம் அமைத்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்கு தேவையான பாறைகளை அருகில் உள்ள மலைக் குன்றில் இருந்து வெட்டி எடுத்தனர். இந்த பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள், அயர்ச்சியையும் சோர்வையும் போக்குவதற்காக தங்களின் இஷ்ட தெய்வமான முருகப்பெருமானை வேண்டிக்கொண்டனர். அதற்காக அங்கிருந்த பாறை ஒன்றில், வேல், மயில், ஓம் என்ற எழுத்துக்களை புடைப்புச் சிற்பமாக செதுக்கி வைத்து வழிபடுவதையும் வழக்கமாக்கிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் அவர்கள் வந்த வேலை முடிந்ததும், தொழிலாளர்கள் அனைவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

    காலப்போக்கில் மலையடிவாரத்தில் மக்கள் வீடு கட்டி குடியேறத் தொடங்கினர். மக்கள் நடமாட்டம் அதிகரித்த நிலையில், அனுதினமும் காலையிலும் மாலையிலும் ஒரு மயில் எங்கிருந்தோ பறந்து வந்து, தொழிலாளர்கள் புடைப்புச் சிற்பமாய் முருகனை வணங்கிய பாறையில் நின்று தோகை விரித்து நடனமாடிச் சென்றது.

    தினம் தினம் இது நடக்கவே, என்ன காரணமாக இருக்கும் என யோசித்த மக்கள், ஒருநாள் மலை மீது ஏறிச் சென்று பார்த்தனர். அங்கு பாறையில் புடைப்புச் சிற்பத்தை கண்டு மெய்சிலிர்த்த அப்பகுதி மக்கள், இவ்விடத்தில் முருகன் கோவில் அமைத்து வழிபட நினைத்தனர்.

    ஆனால் இங்கு கோவில் அமைப்பதில் இறைவனுக்கு விருப்பமா என்பதை அறிய, அந்த ஊரில் இருந்து ஒரு சிறுவனிடம் வேல் ஒன்றைக் கொடுத்து, "உனக்கு விருப்பமாக இடத்தில் இந்த வேலை ஊன்று" என்று கூறினர்.

    உடனே அந்த சிறுவன், தன்னுடைய குடியிருப்பு பகுதியில் இருந்து மலைக் குன்றை நோக்கி ஓடினான். குன்றின் மீது ஏறிச் சென்று அங்கு புடைப்புச் சிற்பங்கள் இருந்த இடத்தில் வேலை ஊன்றினான். எனவே மக்கள் அனைவரும் ஒரு மனதாக அங்கே கோவில் அமைத்து வழிபாடு செய்யத் தொடங்கினர் என்பது இந்த ஆலயத்தின் வரலாறாக சொல்லப்படுகிறது.

    இந்த ஆலயத்தில் உள்ள முருகப்பெருமானை வழிபாடு செய்தால், திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. தொடர்ந்து 13 செவ்வாய்க்கிழமைகளில், இத்தல முருகனுக்கு செவ்வரளி மாலை சூட்டி, எலுமிச்சைப் பழம் சமர்ப்பித்து, விளக்கேற்றி வழிபட்டால், விரைவில் திருமணம் நடந்தேறும் என்கிறார்கள். வேலை கிடைக்கவும், கடன் தொல்லை அகலவும் இந்த முருகனை வழிபாடு செய்கிறார்கள்.

    இந்த ஆலயத்தில் தெற்கு நோக்கியவாறு தொழிலாளர்கள் அமைத்த பாறை சிற்பம் அமைந்துள்ளது. அதன் பின்புறம் உள்ள பாறை, இயற்கையாக நந்தி அமர்ந்திருப்பது போல் காட்சி தருகிறது. அதன் அருகில் காசியில் இருந்து கொண்டுவந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். மலையில் இருந்து கீழிறங்கி வர தனியாக படிகள் உள்ளன.

    இங்கு பவுர்ணமி இரவில் அகத்தியருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படுகிறது. அன்றைய தினம் கூட்டு வழிபாடும் உண்டு. மயிலேறி முருகனுக்கு கார்த்திகை நட்சத்திரம் மற்றும் சஷ்டி திதியில் அபிஷேக அலங்கார ஆராதனை சிறப்பாக நடைபெறும். வைகாசி விசாகம் அன்று சிறப்பு வழிபாடும் நடக்கிறது.

    அமைவிடம்

    அம்பாசமுத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆலங்குளம் செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் டீச்சர்ஸ் காலனி பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு இறங்கி நடந்து செல்லும் தொலைவில் என்.ஜி.ஓ. காலனியில் இருக்கிறது, மலையேறி முருகன் கோவில்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 108 வைணவ திவ்ய தலங்களில் 45-ம் திவ்ய தேசமாகும்.
    • நின்ற நாராயணப்பெருமாள்' நிற்கும் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

    விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ளத தொன்மை வாய்ந்த திருநின்ற நாராயண பெருமாள் கோவில் உள்ளது. விரும்பும் வாழ்க்கைத் துணையை அடைய விரும்புபவர்கள் திருநின்ற நாராயண பெருமாளை வேண்டி வணங்கினால் பிரார்த்தனை நிறைவேறும்.

    திருமணத் தடை உள்ளவர்கள் பெருமாளையும், தாயாரையும் தொடர்ந்து வணங்கினால் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பெருமாளுக்கு பரிவட்டம் சாற்றி வழிபடுகின்றனர். சிலர் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்தும், புளியோதரை படைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    சித்ரா பவுர்ணமி, வைகாசி வசந்தோற்சவம், ஆனி பிரமோற்சவம், ஆவணி பவித்ரோற்சவம், புரட்டாசி கருட சேவை, பங்குனி திருக்கல்யாண உற்சவம் ஆகிய விழாக்கள் இக்கோயிலில் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.

     தல வரலாறு

    இந்த கோவிலில் மூலவராக திருநின்ற நாராயண பெருமாள் வீற்றிருக்கிறார். செங்கமலத்தாயார், ஆஞ்சநேயர், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன. கோயிலில் கொடிமரம் உள்ளது. பாஸ்கர தீர்த்தம், பாபநாச தீர்த்தம், அர்ச்சுனா நதி ஆகியவை தல தீர்த்தங்களாக உள்ளன. ஸ்ரீரங்கம், அழகர்கோவில் போன்று இங்கும் சோமசந்திர விமானம் உள்ளது.

    திருத்தங்கல்லில் உள்ள `தங்காலமலை' என்ற குன்றின் மீது திருநின்ற நாராயண பெருமாள் கோவில் உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. கோயிலை கட்டியவர் குறித்து விபரம் எதுவும் இல்லை.

    இந்த கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 45-ம் திவ்ய தேசமாகும். 2 நிலைகளாக உள்ள இந்த கோயிலில் முதல் நிலை கோயிலில் மூலவரான 'நின்ற நாராயணப்பெருமாள்' நிற்கும் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இவரது திருமேனி சுதையால் ஆனது. இவருக்கு தெய்வீக வாசுதேவன், திருத்தங்காலப்பன் என திருநாமங்கள் உள்ளன. 2-ம் நிலை கோவிலில் செங்கமலத்தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    ×