என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பட்ச சிவராத்திரி"
- சிவபெருமானை பூஜை செய்வது மோட்சத்தை வழங்கும் என்பது ஐதீகம்.
- சதுர்த்தசி திதியில் வரும் சிவராத்திரியை, `மகா சிவராத்திரி' என்று வழிபடுகிறோம்.
சக்தியை வழிபட நவராத்திரி என்னும் ஒன்பது இரவுகள் இருப்பது போல், சிவபெருமானை வழிபாடு செய்ய மகா சிவராத்திரி என்னும் ஒரு நாள் முக்கியமானதாக இருக்கிறது. இந்த நாளில் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரையான 4 ஜாம வேளைகளில் சிவபெருமானை பூஜை செய்வது மோட்சத்தை வழங்கும் என்பது ஐதீகம்.
மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை முதல் கால பூஜை, இரவு 9 மணி முதல் இரவு 12 மணி வரை இரண்டாவது கால பூஜை, இரவு 12 முதல் அதிகாலை 3 மணி வரை மூன்றாம் கால பூஜை, அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை நான்காவது கால பூஜை. இதில் இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை லிங்கோத்பவ காலமாகும். இதை ஞாபகப்படுத்தும் விதமாக சிவாலயங்களில் கர்ப்பக் கிரக (வெளிப்புறத்தில்) கோஷ்டத்தில் லிங்கோத்பவர் மூர்த்தி காட்சி தருவதைப் பார்க்க முடியும்.
சிவராத்திரியை ஐந்து வகையாக சொல்வார்கள். அது நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி. மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதியில் வரும் சிவராத்திரியை, `மகா சிவராத்திரி' என்று வழிபடுகிறோம்.
அன்றைய தினம் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருந்து மாலை முதல் மறுநாள் காலை வரை நான்கு யாமங்களிலும் ஸ்ரீ ருத்ர மகா மந்திரங்களை சொல்லி,11 திரவியங்களால் (வாசனை தைலம், பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்துவிட்டு, பின்னர் சுத்தமான நீர் கொண்டு அல்லது விபூதி கொண்டு அபிஷேகம் செய்யப்படும்) சிவபெருமானை அபிஷேகித்து வழிபடுவார்கள்.
மகா சிவராத்திரி பிறந்த கதை
ஒரு கிருத யுகத்தில் இந்திரன் தனது ஐராவதம் என்னும் யானை மீது ஏறி வந்துகொண்டிருந்தான். அப்போது துர்வாச முனிவர் தனக்கு மகாலட்சுமி அளித்த மாலையை, இந்திரனுக்கு கொடுத்தார். அதை இந்திரன் தன் கையால் வாங்காமல் தன் வாகனமாகிய ஐராவதத்தை வாங்கச் சொல்ல, யானையோ அந்த மாலையை அலட்சியமாக வாங்கி தன் காலில் போட்டு மிதித்தது. இதனால் கோபம் அடைந்த துர்வாச முனிவர், இந்திரன் தன் செல்வத்தை இழந்துபோவான் என்று சபித்தார். அதன்படி செல்வத்தை இழந்துபோன இந்திரன், பிரம்மதேவனிடம் சென்று முறையிட்டு, இழந்த செல்வத்தைப் பெற முயற்சித்தான். இந்திரன் பூஜித்த காலமே மகா சிவராத்திரி என்கிறார்கள்.
அதே நேரத்தில் இன்னொரு கதையும் சொல்வார்கள். அசுரர்கள் இறந்து விட்டால் அவர்களுக்கு குருவாக இருக்கக்கூடிய சுக்ராச்சாரியார், தனக்கு தெரிந்த `மிருத்த சஞ்ஜீவினி' மந்திரத்தால் அவர்களை பிழைக்க வைத்து விடுவார். எனவே தேவர்கள், தாங்களும் இறக்காமல் இருக்க ஏதாவது வழி உண்டா என்று பிரம்மாவிடம் கேட்டனர். அதற்காக பாற்கடல் உள்ளிருக்கும் அமிர்தத்தை எடுக்க யோசனை கூறப்பட்டது. அதன்படி தேவர்கள் மந்தார மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைய முற்பட்டனர். ஆனால் தேவர்களால் பாற்கடலைக் கடைய முடியவில்லை. எனவே துணைக்கு அசுரர்களையும் அழைத்தனர். அசுரர்களும், தேவர்களும் சேர்ந்து திருப்பாற் கடலைக் கடைவதாகவும், கிடைக்கும் அமிர்தத்தை பகிர்ந்து கொள்வதாகவும் முடிவு செய்யப்பட்டது.
வாசுகி பாம்பின் தலைப் பகுதியை அசுரர்களும், வால் பகுதியை தேவர்களும் பிடித்து மந்தார மலையைக் கொண்டு பாற்கடலைக் கடையத் தொடங்கினர். அப்பொழுது பாற்கடலின் உள்ளிருந்து காமதேனு, கற்பக தரு, ஐராவதம், கவுஸ்துபம் என்ற மணி, லட்சுமி தேவி, சந்திரன் போன்றோர் வெளிவர ஆரம்பித்தனர். ஆனால் இவற்றிற்கெல்லாம் முன்பாக ஆலகாலம் என்ற விஷம் வெளிப்பட்டது. இதன் சக்தியால் அனைத்து உலகங்களும் வெப்பத்தில் தகித்தது. இதைக் கண்டு பார்வதி தேவி, பரமேஸ்வரனிடம் முறையிட்டார்.
உடனே பரமேஸ்வரன் அந்த ஆலகால விஷத்தை எடுத்து உண்டார். உலகத்தையே காத்தருளும் சிவனை, ஆலகால விஷம் என்ன செய்து விட முடியும்? ஆனாலும் மயங்கி சரிவதுபோல் தோற்றம் கொண்டார், நீலகண்டர். இதைக் கண்ட தேவர்கள் பயந்து, "சுவாமி தாங்கள் கண் விழித்து எங்களை காக்க வேண்டும்" என்று பிரார்த்தனை செய்தனர். தேவர்கள் அவ்வாறு சிவபெருமானை பூஜித்த அந்த காலமே `மகா சிவராத்திரி' என்று அழைக்கப்படுகிறது.
மகா சிவராத்திரி விரத பலன்
முன்பொரு சமயம் வேதங்கள் நன்றாக கற்ற ஒரு அந்தணர், அவர் இல்லத்தில் கிளிகள் வளர்த்து வந்தார். கூண்டில் அடைத்து கிளி வளர்த்த தோஷத்தாலும், அதன் மேல் உள்ள பற்றாலும், இறக்கும் பொழுது கிளிகளின் நினைவாகவே இறந்தார். மறுஜென்மத்தில் அவர் வேடனாக பிறந்து, காட்டில் வேட்டையாடி தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். ஒரு முறை காட்டில் வேட்டையாட சென்றபோது, வேடனுக்கு எதுவும் கிடைக்கவில்லை.
எனவே விலங்குகளைத் தேடி நீண்ட தூரம் காட்டிற்குள் சென்றுவிட்டான். இருள் சூழும் நேரம் ஆகிவிட்டதால் காட்டை விட்டு வெளியேற முடியவில்லை. அப்போது தாகம் எடுக்க, வில் -அம்புகளை தரையில் வைத்து விட்டு ஒரு குளத்தில் தண்ணீர் குடிக்க இறங்கினான்.
அந்த வேளையில் வேடனை தாக்க ஒரு புலி பாய்ந்து வந்தது. இதனால் பதறிப்போன வேடன், வில்-அம்புகளை எடுக்க முடியாமல் அவசரமாக ஓடி பக்கத்தில் இருந்த மரத்தின் மேல் ஏறி அமர்ந்து கொண்டான். இரவு முழுவதும் புலி அந்த மரத்தை சுற்றி வந்தது.
வேடனுக்கு கை, கால் எல்லாம் நடுக்கமாக இருந்தது. பசியால் தலை சுற்றியது. எதுவும் சாப்பிடாமல் இரவு முழுவதும் அந்த மரத்தின் கிளைகளைப் பற்றிய படியே இருந்தான். மறுநாள் பொழுது விடிந்ததும் கீழே பார்த்தபோது, புலி அங்கே இல்லை. இதையடுத்து வேடன் கீழே இறங்கி வந்தான். பல ஆண்டுகள் வாழ்ந்த அந்த வேடன் வயது முதிர்ச்சியால் இறந்தான்.
அந்த வேடனின் ஆன்மா எமலோகம் சென்றது. அங்கே எமனிடம் `இந்த வேடனின் வாழ்வில் பாவங்கள் எதுவும் இல்லை' என்று சித்திரகுப்தன் கூறினார். தன் வாழ்நாளில் பல மிருகங்களை வேட்டையாடிய வேடனின் பாப கணக்கில் எதுவும் இல்லை என்றது, எமதர்மனுக்கு அதிர்ச்சியை அளித்தது.
வேடன் செய்த புண்ணியம் என்ன என்று பார்க்க, முன்பு புலிக்கு பயந்து வேடன் ஏறி அமர்ந்தது, வில்வ மரம் ஆகும். அன்றைய தினம் மகா சிவராத்திரி. பயத்தில் கைகள் நடுங்க கிளைகளைப் பற்றி இருந்ததால், அந்த நடுக்கத்தில் வில்வ இலைகள் உதிர்ந்து கீழே விழுந்தன.
வில்வ இலைகள் விழுந்த இடத்தில் ஒரு பழமையான சிவலிங்கம் மண்ணில் புதைந்திருந்தது. அந்த சிவலிங்கத்தின் மீது வில்வ இலைகள் விழுந்தன. மகா சிவராத்திரி அன்று சாப்பிடாமல், வில்வ இலைகளால் சிவலிங்கத்தை அர்ச்சனை செய்த புண்ணியம் வேடனுக்கு கிடைத்தது என்பதை எமதர்மனும், சித்திரகுப்தனும் அறிந்தனர். வாழ்நாள் முழுவதும் செய்த பாவங்களை கூட போக்கும் தன்மை கொண்டது, மகா சிவராத்திரி வழிபாடு.
மகா சிவராத்திரி அன்று உபவாசம் இருத்தல் (சாப்பிடாமல் இருப்பது), பூஜை செய்வது, தூங்காது இருத்தல் ஆகியவை முக்கியமானவை. சிவராத்திரி அன்று உணவு தவிர்க்க முடியாதவர்கள், பால், பழம், வேகவைத்த பொருள் சாப்பிட்டு உபவாசம் இருக்கலாம். பகலிலும், இரவிலும் தூங்காமல் இருப்பது, புண்ணியத்தை தரும் சிவலிங்கத்தை பூஜிப்பது, சுவாமியை சிவாலயம் சென்று தரிசிப்பது மிக விசேஷமானது. 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி தொடங்கி 9-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6 மணி வரை சிவராத்திரி தினம். அன்றைய தினம் இரவு கண் முழிப்பது மிக அவசியம். விளக்கேற்றுவதும், அபிஷேகப் பொருட்கள் கொடுப்பதும் மிகுந்த புண்ணியத்தை தரும்.
மகா சிவராத்திரியில் சொல்ல வேண்டிய மந்திரம்
அரிதிலும் அரிதான அனைவரும் ஜெபிக்க வேண்டிய மோட்சத்தைத் தரும் சிவ பஞ்சாட்சர மகா மந்திரம், 'ஓம் நமசிவாய'. இந்த மந்திரத்தை நம் சக்திக்கேற்றபடி 108 அல்லது 1008 முறை மகா சிவராத்திரி அன்று ஜெபிக்கலாம். சக்தி பஞ்சாட்சரி மந்திரம், `ஓம் ஹ்ரீம் நமசிவாய'. இதனையும் தங்களின் சக்திக்கேற்ப ஜெபிக்கலாம்.
ஸ்ரீ குரு தாரக பஞ்சாட்சரி மந்திரம், 'ஓம் ஓங்காராய நம சிவாய, ஓம் நகாராய நமசிவாய, ஓம் மகாராய நமசிவாய, ஓம் சிகாராய நமசிவாய, ஓம் வகாராய நமசிவாய, ஓம் யகாராய நமசிவாய, ஓம் நம ஸ்ரீகுருதேவாய பரம புருஷாய ஸர்வ தேவதா வசீகராய ஸர்வாரிஷ்ட விநாசாய ஸர்வ துர்மந்த்ர ச்சேதனாய த்ரைலோக்யம் வசமானய ஸ்வாஹா' என்ற மந்திரத்தையும் உச்சரிக்கலாம்.
- உபவாசம் இருந்து பட்ச சிவராத்திரியில் சிவபெருமானை வழிபட வேண்டும்.
- சிவன் என்றால் மங்களம் என்று பொருள்.
சிவபெருமானுக்கே உரிய சிவராத்திரி 5 வகையாக கூறப்பட்டு இருக்கிறது.
முதலாவதாக நித்திய சிவராத்திரி:
நித்திய சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபட்ச, சுக்லபட்ச சதுர்த்தசிகளில் வரும். மாதம் இரண்டாக வரும் நித்திய சிவராத்திரியை தொடர்ந்து 24 முறையும் அனுசரிக்க வேண்டும்.
இரண்டாவதாக பட்ச சிவராத்திரி:
தை மாதம் கிருஷ்ணபட்ச பிரதமை முதல் 13 நாட்கள் ஒரு நேரம் மட்டும் உணவு உண்டு 14-ம் நாளான சதுர்த்தசியில் முழு நேர உபவாசம் இருந்து பட்ச சிவராத்திரியில் சிவபெருமானை வழிபட வேண்டும்.
மூன்றாவது மாத சிவராத்திரி:
மாத சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் வரும். சித்திரை மாதம் கிருஷ்ணபட்ச அஷ்டமியில், வைகாசி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில், ஆனி மாதம் சுக்லபட்ச சதுர்த்தியில், ஆடி மாதம் கிருஷ்ணபட்ச பஞ்சமியில், ஆவணி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில் புரட்டாசி மாதம் சுக்லபட்ச திரயோதசியில், ஐப்பசி மாதம் சுக்லபட்ச துவாதசியில், கார்த்திகை மாதம் சுக்லபட்ச சப்தமியில், மார்கழி மாதம் சுக்லபட்ச சதுர்த்தசியில், தை மாதம் சுக்லபட்ச திருதியையில், மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில், பங்குனி மாதம் சுக்லபட்ச திருதியையில் வருவது மாத சிவராத்திரி என்றழைக்கப்படும்.
நான்காவது யோக சிவராத்திரி:
திங்கட்கிழமை அன்று பகல், இரவு முழுவதும் அமாவாசையாக பொருந்தி வந்தால் அது யோக சிவராத்திரி.
ஐந்தாவது மகா சிவராத்திரி:
பெரும்பாலான சிவராத்திரிகளை கூர்ந்து கவனித்தால் அவை சதுர்த்தசி திதியில் வருவது தென்படும். ஏன் அப்படி? அமாவாசைக்கோ பெளர்ணமிக்கோ முன்பு பதினான்காம் நாளாக வருவது சதுர்த்தசி. அந்த நாள் சிவனுக்குரியது என்பது சாஸ்திரங்கள் கூறும் செய்தியாகும்.
ஒவ்வொரு தெய்வத்துக்கும் அவரவருக்கு ஏற்ற திதியை ஒதுக்கி வணங்கும் போது சிவனுக்கு ஒதுக்கப்பட்டது தான் சதுர்தசி. இந்த சதுர்தசி கிருஷ்ணபட்சமானால் மறுநாள் அமாவாசை அதே சுக்லபட்சமானால் மறுநாள் பெளர்ணமி. தொடக்கம் முடிவு இரண்டுமே அந்த சிவனால் தான் என்பதை உணர்த்தவே இந்த திதி சிவனுக்காக ஒதுக்கப்பட்டது. சிவன் என்றால் மங்களம் என்று பொருள். ராத்திரி என்றால் இரவு. எனவே மங்களகரமான இரவு என்று மகாசிவராத்திரியை சொல்லலாம்.
எல்லா வகையான சிவராத்திரிகளிலும் மேலானதும் வருஷம் ஒரு முறை மட்டுமே வருவதும் அனைத்து விதமான பாவங்களையும் நீக்கி நல்வாழ்வை தருவதும், எல்லா நலன்களையும் தரக்கூடியதுமான வார்த்தைகளால் விவரிக்க முடியாத பெருமை பெற்றது தான் மகா சிவராத்திரி.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்