search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "7காங்கிரஸ்"

    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு பாராளுமன்ற தொகுதி ஒதுக்கி தர வேண்டும்
    • நாங்கள் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தான் இருக்கிறோம்.

    சென்னை:

    தி.மு.க-தமிழக வாழ்வுரிமை கட்சி இடையே இன்று தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.

    பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு பாராளுமன்ற தொகுதி ஒதுக்கி தர வேண்டும் என்கிற வேண்டுகோளை தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவிடம் வைத்து உள்ளேன். அதற்கான நியாயமான காரணங்களையும் எடுத்து வைத்திருக்கிறேன்.

    கடந்த பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான இடங்களுக்கு சென்று பிரசார பீரங்கியாக இருந்து இந்த மாபெரும் வெற்றி கூட்டணியில் நானும் ஒரு சிறு பங்காற்றி இருக்கிறேன்.

    தமிழக வாழ்வுரிமை கட்சியின் குரல் தமிழக மக்களுக்காக சட்டமன்றத்தில் எப்படி ஓங்கி ஒலிக்கிறதோ அதேபோல் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்கிற எனது விருப்பத்தையும், கட்சியின் பொதுக்குழு தீர்மானத்தையும் தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவிடம் ஒப்படைத்திருக்கிறேன். அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு எடுத்து சென்று நல்ல பதிலை தருகிறேன் என்று தெரிவித்து இருக்கிறார்கள். எனவே தி.மு.க. கூட்டணியில் ஒரு இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    மேலும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்கிற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளேன். இந்த சந்திப்பு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிற சந்திப்பாக இருந்தது.

    நாங்கள் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தான் இருக்கிறோம். இதுவரை நடந்த தேர்தல்களில் நான் காங்கிரஸ் மேடைகளில் ஏறி பிரசாரம் செய்தது இல்லை. இந்த தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு பிரசாரம் செய்ய மாட்டேன்.

    தி.மு.க. கூட்டணியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் எங்கள் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும். நான் தேர்தலில் போட்டியிடமாட்டேன். எனது கட்சி நிர்வாகிகளில் ஒருவருக்கு போட்டியிடும் வாய்ப்பை கொடுப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×