என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை காவல் ஆணையர்"

    • போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
    • போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகும் 10ல் 5பேர் Grindr செயலியை பயன்படுகின்றனர்.

    தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. அதே சமயம் போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை போலீசார் தொடர்ச்சியாக கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில், Grindr செயலியை தடை செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் கடிதம் எழுதியுள்ளார்.

    போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகும் 10ல் 5 பேர் இந்த செயலியை பயன்படுத்துவது உறுதியாகியுள்ளதாக அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

    • சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரப்பட்டிருக்கிறது.
    • குழந்தை கடத்தல் குறித்த தகவல்கள் வெளியாவது உண்மை இல்லை. தேவையற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

    குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் குழந்தை கடத்தல் குறித்து தேவையற்ற வதந்திகளை யாரும் பகிர வேண்டாம் என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், பர்தா அணிந்து பெண் வேடமிட்ட ஆண்கள் சுற்றி வருவதாகவும், இக்கடத்தலுக்காக வடமாநிலங்களில் இருந்து 400 பேர் தமிழகத்தில் குவிந்துள்ளதாகவும், கடத்தப்படும் சிறுவர், சிறுமிகளின் உடல் உறுப்புகளை ஒரு கும்பல் எடுப்பதாக கூறப்படும் தகவல்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அதிவேகமாக பரவி வருகின்றன

    இதற்கு காவல்துறை சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், குழந்தைகள் கடத்தல் என்ற வதந்திகளை பரப்புபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சென்னை ராமாபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சைபர் கிரைம் குறித்த ஹேக்கத்தான் போட்டி நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் சான்றுகளையும் வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இதுபோன்ற ஹேக்கத்தான் போட்டிகளில் பல்வேறு தொழில்நுட்பங்களையும் யுக்திகளையும் கண்டுபிடித்து வருகின்றனர். அவை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். குழந்தை கடத்தல் தொடர்பான தகவல்கள் வெளியாவது உண்மை இல்லை. இது குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டுவிட்டது. தேவையற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். அதே போல் உண்மையில்லாத தகவல்களை யாரும் பகிர வேண்டாம்." என்று அவர் தெரிவித்தார்.

    • கைது செய்யப்பட்ட 8 பேரிடமும் பல்வேறு கோணங்களில் விசரணை நடைபெற்று வருகிறது.
    • ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு ஆபத்து இருந்ததாக எந்தத் தகவலும் இல்லை.

    பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக, சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    கொலை நடந்த 3 மணிநேரத்தில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்ட 8 பேரிடமும் பல்வேறு கோணங்களில் விசரணை நடைபெற்று வருகிறது.

    ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் அரசியல் பின்னணி இருப்பதாக தெரியவில்லை. ஆம்ஸ்ட்ராங் உடல் நாளை அடக்கம் செய்யப்பட உள்ளது.

    எந்த இடத்தில் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    ஆம்ஸ்ட்ராங் அரசியலுக்கு வந்த பிறகு நிறைய பேருடன் முன்விரோதம் இருந்துள்ளது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், சதி திட்டம் தீட்டியது யார் ? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஆம்ஸ்ட்ராங் உயிருக்கு ஆபத்து இருந்ததாக எந்தத் தகவலும் இல்லை.

    கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், சதி திட்டம் தீட்டியது யார் ? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஆம்ஸ்ட்ராங் கொலையில் பொன்னை பாலுவுக்கு உள்ள தொடர்பு குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பொன்னை பாலு, திருமலை மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. ஆம்ஸ்ட்ராங்கிற்கு நேரடியாக அச்சுறுத்தல் இருந்ததாக தகவல் இல்லை.

    தேர்தல் நடத்தை விதிக்காக ஆம்ஸ்ட்ராங்கின் கைத்துப்பாக்கி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    விசாரணையில் கிடைத்துள்ள பல்வேறு தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.

    சென்னையில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் 4,000 பேர் உள்ளனர். ஜூலை 2023 முதல் ஜூன் 2024 வரை 1,192 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஆம்ஸ்ட்ராங் மீது 7 வழக்குகள் பதியப்பட்டிருந்தன. அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

    ஆற்காடு சுரேஷ் கொலைக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் தொடர்பு இருக்கிறதா ? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    சென்னையில் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டில் கொலை குற்றங்கள் குறைந்தள்ளன. சென்னை மிகவும் பாதுகாப்பாபன நகரமாக உள்ளது,

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரியான துப்பு கிடைத்த பிறகே 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னை செனாய் நகரை சேர்ந்த ரவுடி ரோகித் ராஜை போலீசார் தேடி வந்தனர்.
    • போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி ரோகித் ராஜை எஸ்.ஐ. கலைச்செல்வி காலில் சுட்டு பிடித்தார்.

    சென்னை:

    சென்னையில் கடந்த மாதம் 5-ந்தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பின்னர் ரவுடிகள் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    தலைமறைவாக உள்ள ரவுடிகளை பிடிக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகரில் பணியாற்றி வரும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாரும் ரவுடிகளை பிடிக்க இரவு பகலாக அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    அந்த வகையில் சென்னை செனாய் நகரை சேர்ந்த ரவுடி ரோகித் ராஜையும் போலீசார் தேடி வந்தனர்.

    ரவுடி ரோகித்ராஜ் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கலைச் செல்வி தலைமையிலான போலீசார் துப்பாக்கியுடன் ரவுடி ரோகித் ராஜை பிடிக்க களம் இறங்கினர். சப்-இன்ஸ்பெக்டர் கலைச் செல்வியுடன், போலீஸ் ஏட்டுகள் பிரதீப், சரவண குமார் ஆகிய இருவரும் உடன் சென்றனர்.

    கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்துக்குள் இன்று அதிகாலை நுழைந்த போலீசார் ரவுடி ரோகித் ராஜ் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சுற்றி வளைத்தனர்.

    போலீசார் எச்சரித்தும் தப்பி ஓடுவதிலேயே குறியாக இருந்த ரவுடி ரோகித் ராஜ் போலீசாரை தாக்கியதில் ஏட்டுகள் பிரதீப், சரவணகுமார் இருவருக்கும் கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது.

    போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி ரோகித் ராஜை எஸ்.ஐ. கலைச்செல்வி காலில் சுட்டு பிடித்தார். இதில் வலது காலில் குண்டு பாய்ந்து ரோகித்ராஜ் நடுரோட்டில் சாய்ந்தான்.

    இதையடுத்து எஸ்.ஐ. கலைச்செல்வி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    இந்நிலையில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த டி.பி. சத்திரம் எஸ்.ஐ. கலைச்செல்வியை நேரில் அழைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் பாராட்டு தெரிவித்தார்.

    • சென்னை காவல் ஆணையர் சமூக வலைதள பக்கத்தை இணைத்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    • புகாரின் மீது விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிப்பு.

    சென்னை காவல் ஆணையர் அருண் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி சைபர் கிரைம் மோசடி முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

    வாட்ஸ் அப் டிபி-ல் சென்னை காவல் ஆணையர் அருண் புகைப்படத்தை வைத்து ஏமாற்றுவதாக புகைப்படம் ஆதாரத்துடன் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக, சென்னை காவல்துறை, சென்னை காவல் ஆணையர் சமூக வலைதள பக்கத்தை இணைத்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    இதைதொடர்ந்து புகாரின் மீது விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

    • குற்றவாளி என உறுதியான பிறகே ஞானசேகரன் கைது செய்யப்பட்டார்.
    • புகாரில் என்ன தெரிவிக்கப்பட்டதோ அது தான் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டது.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக, சென்னை காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முதல் தகவல் அறிக்கை என்பது பாதிக்கப்பட்டவர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே பதிவு செய்வது.

    குற்றவாளி என உறுதியான பிறகே ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். புகாரில் என்ன தெரிவிக்கப்பட்டதோ அது தான் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டது.

    இது தெரியாமல் சிலர் முதல் தகவல் அறிக்கையை இப்படி போட்டிருக்கலாம், அப்படி போட்டிருக்கலாம் என சொல்கிறார்கள்.

    இதுபோன்ற வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை வெளியாக கூடாது, அது தவறு தான்.

    எப்ஐஆர் வெளியானது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக எப்ஐஆர் லாக் ஆவதில் தாமதம் ஆகியுள்ளது. எப்ஐஆர் லாக் ஆவதில் தாமதம் ஏற்பட்டதால் டவுன்லோடு செய்து பரப்பி இருக்கலாம்.

    இதுவரை ஞானசேகரன் மீது திருட்டு உள்ளிட்ட 20 வழக்குகள் உள்ளன. ஞானசேகரன் மீது 2019க்கு பின் எந்த வழக்கும் பதிவாகவில்லை.

    இதுவரை வேறு பெண்களிடம் இருந்து புகார்கள் எதுவும் பெறப்படவில்லை. வேறு யாரேனும் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் 70 சிசிடிவி உள்ளது. அதில் 56 சிசிடிவி வேலை செய்கிறது.

    பெண் புகார் கொடுத்த அடுத்த நாளே குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை நடைபெற்ற புலன் விசாரணையில் ஞானசேகரன் ஒருவர் மட்டுமே குற்றவாளி.

    காவல்துறை நடுநிலையுடன், கட்சி வேறுபாடு கடந்து நடந்துக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

    போராட்டம் நடத்துவதற்கு என சில இடங்கள் உள்ளது. அதை மீறி போராட்டம் நடத்துபவர்கள் கைது செய்யப்படுவார்கள். அதன் அடிப்படையில் அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே காவல்துறை பாதுகாப்பு பணியில் உள்ளனர். மேலும் எவ்வாறு பாதுகாப்பை பலப்படுத்துவது என்பதை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    காவல்துறையை நம்பி மாணவி புகார் அளித்தார். அவர் நம்பிக்கையை உறுதி செய்யும் வகையில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.

    யார் பாதிக்கப்பட்டாலும் தைரியமாக புகார் அளிக்க முன் வர வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×