search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோன்பின் 6-ம் நாள்"

    • ரமலானில் அருளப்பட்ட இறைச்செய்தி.
    • வானவர் மணியோசை போன்று வருவார். அவர் நபியை தம்முடன் இணைத்துக் கொள்வார்.

    ரமலானில் அருளப்பட்ட இறைச்செய்தி

    இறைச்செய்தியின் ஆரம்ப வெளிப்பாடும், இந்த பிரபஞ்சத்தில் உலகப்பொதுமறையாம் திருமறை திருக்குர்ஆன் இறங்கிய துவக்கமும், இறை அழைப்பின் அழகிய ஆரம்பக்கட்டமும் புனித ரமலானில்தான் அரங்கேறியது.

    'ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக்கொண்டதாகவும் (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான திருக்குர்ஆன் இறக்கியருளப்பெற்றது.' (திருக்குர்ஆன் 2:185)

    நபி (ஸல்) அவர்களுக்கு நாற்பது வயதை நெருங்குவதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பே அவர்களின் மனம் தனிமையை விரும்பியது. மக்காவில் இருந்து சுமார் இரண்டு மைல்கள் தொலைவில் உள்ள நூர் மலையில் அமைந்துள்ள ஹிரா குகைக்குச் சென்று அங்கே இறைவனுக்காக தவம் மேற்கொண்டார்கள். பரிபூரணத்தின் தொடக்கமாகிய 40 வயதை நிறைவு செய்தபோது அவர்களுக்கு நபித்துவ பட்டம் கிடைத்தது.

    ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்த மூன்றாம் ஆண்டு ரமலான் மாதம் பிறை 21. திங்கட்கிழமை கி.பி.610 ஆகஸ்டு 10-ம் தேதி முதன்முதலாக இறைச்செய்தி இறங்கியது.

    'ஆயிஷா (ரலி) கூறினார்: 'நபி (ஸல்) அவர்களுக்குத் தொடக்கத்தில் இறைச்செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்த கனவு கண்டாலும் அது அதிகாலைப்பொழுதின் விடியலைப் போன்று தெளிவாக இருக்கும். பின்னர், தனிமையில் இருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. ஹிரா குகையில் அவர்கள் பல இரவுகள் அங்கே தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டார்கள். அந்த நாள்களுக்கான உணவை தம்முடன் கொண்டு செல்வார்கள். உணவு தீர்ந்ததும் மனைவி கதீஜாவிடம் திரும்புவார்கள்.

    இந்த நிலை ஹிரா குகையில் இறைச்செய்திவரும் வரை நீடித்தது. ஒருநாள் வானவர் தோன்றி, ஓதும் என்றார். அதற்கு நபியவர்கள் நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றார்கள்.

    'அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக் கட்டியணைத்தார். பிறகு, என்னை விட்டுவிட்டு மீண்டும் 'ஒதும்' என்றார். 'நான் ஓதத் தெரிந்தவனில்லையே!' என்றேன். இவ்வாறு மூன்று தடவை நடந்தது. மூன்றாவது முறை கட்டியணைத்து விட்டு 'படைத்தவனாகிய உமது இரட்சகனின் திருப் பெயரால் ஒதும்! அவனே மனிதனை கரு வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் இருந்து படைத்தான். ஒதும் உம் இரட்சகன் கண்ணியமிக் கவன்' என்றார். (திருக்குர்ஆன் 96:1,2,3, நூல்:புகாரி)

    இதுதான் உலகில் முதலில் இறங்கியதிருக்குர்ஆனின் இறைச்செய்தியாகும். இறைச்செய்தியின் வகைகள்:

    1) உண்மையான கனவு. இதுதான் இறைச் செய்தியின் தொடக்கம்.

    2) வானவர், நபி (ஸல்) அவர்களின் கண் முன் தோன்றாமல் உள்ளத்தில் இறைச்செய்தியை போடுவது.

    3) வானவர் ஓர் ஆடவரின் உருவில் தோன்றி நபி (ஸல்) அவர்களிடம் பேசுவார். அதை நபி (ஸல்) மனதில் நிலை நிறுத்திக்கொள்வார்கள்.

    4) வானவர் மணியோசை போன்று வருவார். அவர் நபியை தம்முடன் இணைத்துக் கொள்வார்.

    5) வானவர் இறைவன் படைத்த உண்மை தோற்றத்தில் நபி (ஸல்) முன் தோன்று வார்.

    6) நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் ஏழு வானங்களுக்கு மேல் அழைத்து பேசுவது. இது நபியவர்களின் விண்ணுலகப் பயணத்தில் தொழுகை கடமையாக்கப்பட்ட போது நடந்தது.

    7) வானவரின்றி நேரடியாக அல் லாஹ்வே பேசுவது. இது மூஸா (அலை) அவர்களுக்கு இந்த உலகத்திலேயே கிடைத்தது. நபி (ஸல்) அவர்களுக்கு விண்ணுலகப் பயணத்தின் மூலம் ஏற்பட்டது.

    ×