search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோன்பின் 5-ம் நாள்"

    • புனித ரமலானில் திறக்கப்படும் சொர்க்கவாசல்.
    • நம்மால் இயன்ற தான தர்மங்கள் செய்வோம்.

    புனித ரமலானில் திறக்கப்படும் சொர்க்கவாசல்

    ரமலான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன என நபி (ஸல்) கூறினார்கள்'. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி)

    'புனித ரமலான் மாதத்தின் முதல் இரவு உதயமாகி விட்டால் சொர்க்க வாசல்கள் திறக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து எந்த ஒன்றும் மூடப்படாது. ஒரு அறிவிப்பாளர் நன்மை தேடுபவரே! நன்மை செய்வதின் பக்கம் முன்னோக்கிச் செல்லும்.' 'தீமை நாடுபவரே! தீமையை குறைத்துக் கொள்ளும்' இவ்வாறு அறிவிப்பு செய்வார் என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அபூஹு ரைரா (ரலி), நூல்: இப்னுமாஜா)

    திருக்குர்ஆனில் சொர்க்கத்தை பற்றி பலவிதமான பெயர்களில் வர்ணிக்கப்படுகிறது.

    1) 'ஜன்னத்' (சொர்க்கம்),

    2) 'ஜன்னத்துல் குல்த்' (அழியாத சொர்க்கம்),

    3) 'ஜன்னத்துல் மஃவா', (தங்குமிடம் சொர்க்கம்),

    4) 'ஜன்னத்துல் பிர்தவ்ஸ்' (சொர்க்கச்சோலை),

    5) 'ஜன்னத் அத்ன்' (நிலையான இன்பம் கொண்ட சொர்க்கம்),

    6) 'தாருஸ்ஸ லாம்' (அமைதி இல்லம்),

    7) ஜன்னத்துன் நயீம்' (இன்பமயமான சொர்க்கம்),

    8) 'தாருல் ஹயவான்' (நித்திய வாழ்வுடைய வீடு),

    9) 'தாருல் முகாமா' (நிரந்தரமான வீடு),

    10) 'அல்மகாமுல் அமீன் (அபயம் தரும் இடம்),

    11) மக்அத் சித்க்' (உண்மையான இருக்கை),

    12) 'தாருல் முத்தகீன்' (இறையச்சமுள் ளவர்களின் வீடு),

    13) 'அல்குர்பா' (மாளிகை),

    14) தாருல் கரார்' (நிலையான வீடு),

    15) அல் ஹூஸ்னா (அழகிய சொர்க்கம்).

    இப்படிப்பட்ட சொர்க்கங்களில் நூற்றுக் கணக்கான படித்தரங்கள் உண்டு! சொர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), நூல்:புகாரி) அவை:

    1) பாபுஸ் ஸலாத் (தொழுகைவாசல்),

    2)பாபுல் ஜிஹாத் (அறப்போர் வாசல்),

    3) பாபுர் ரய்யான் (நோன்பு வாசல்),

    4) பாபுஸ் ஸதக்கா (தர்ம வாசல்),

    5) பாபுல் ஹஜ் (ஹஜ் வாசல்),

    6) பாபுல் வாலித் (தந்தை வாசல்),

    7) பாபுல் அய்மன் (வலதுபுற வாசல்),

    8) பாபுத் தவ்பா (மன்னிப்பின் வாசல்).

    ஒருவர் இறைவழியில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களில் இருந்து, 'அல்லாஹ்வின் அடியாரே! இது நன்மையாகும்! இதன் வழியாக நுழையுங்கள்' என்று அழைக்கப்படுவார்.

    தொழுகையாளி தொழுகையின் வாசல் வழியாகவும், நோன்பாளி ரய்யான்' வாசல் வழியாகவும், தர்மம் செய்தவர் தர்ம வாசல் வழியாகவும், அறப்போர் புரிந்தவர் அறப்போர் வாசல் வழியாகவும் அழைக்கப்படுவார்' என நபி (ஸல்) கூறினார்கள்.' (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்:புகாரி)

    சொர்க்கத்தின் 8 வாசல்களும் புனித ரமலான் மாதம் முழுவதும் திறந்தே இருக்கின்றன. நோன்பாளிக்கென்று ரய்யான் வாசல் உள்ளது. அதன் வழியாக நோன்பாளிகள் மட்டுமே நுழைவார்கள். சொர்க்கத்தில் ரய்யான்' எனும் ஒரு வாசல் உண்டு. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். 'நோன்பாளிகள் எங்கே?" என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுந்து, அதன் வழியாக நுழைந்ததும் அந்த வாசல் அடைக்கப்பட்டு விடும். வேறு எவரும் அதன் வழியாக நுழைய முடியாது என நபி (ஸல்) கூறினார்கள். (ஸஹ்ல் (ரலி), நூல்:புகாரி)

    சொர்க்கவாசல்கள் திறந்திருக்கும் புனித ரமலானில் சொர்க்கவாசிகளின் செயலை செய்து சொர்க் கத்தில் இடம்பிடிக்க நாம் முனைப்புடன் செயல்படுவோம். இறை சிந்தனையிலும், இறை வழிபாட்டிலும் புனித ரமலானில் அதிகம் ஈடுபடுவோம். நம்மால் இயன்ற தான தர்மங்கள் செய்வோம்.

    ×