search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோன்பின் 7-ம் நாள்"

    • இஸ்லாமியர்கள் ஐந்துவேளைத் தொழுவது கட்டாயமாகும்.
    • எந்த சந்தர்ப்பத்திலும் தொழுகையை தவறவிட்டுவிடக்கூடாது.

    தொழுகைக்கான முதல் அழைப்பு

    இஸ்லாமியர்கள் ஒவ்வொரு நாளும் 'ஐந்துவேளைத் தொழுவது கட்டாயமாகும். பருவ வயதை அடைந்ததில் இருந்து மரணமாகும் வரைக்கும் நீங்காத ஒரே கடமை தொழுகை தான். நின்று தொழ முடியாத பட்சத்தில் அமர்ந்தும், அமர்ந்து தொழ முடியாத பட்சத்தில் படுத்துக்கொண்டும் தொழ வேண்டும். இதுவும் முடியாதபட்சத்தில் தொழுகையின் முறைகளை சமிஞ்கை செய்து, எண்ணவடிவங்களை மனக் கண்முன்னே கொண்டு வந்து நிறைவேற்றிட வேண்டும். எந்த சந்தர்ப்பத்திலும் தொழுகையை தவறவிட்டுவிடக்கூடாது. 'உமக்கு மரணம் வரும் வரை உமது இறை வனை வணங்குவீராக!' (திருக்குர்ஆன் 15:99)

    ஐந்து வேளை தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன்னால், அந்தந்தத் தொழுகையின் நேரம் வந்தவுடன் தொழுகைக்காக அழைப்பு விடுக்கப்படும். இதற்கு பாங்கு என்று பார்ஸி மொழியில் சொல்லப்படும். இஸ்லாத்தின் ஆரம்பக்காலத்தில் ஒரு சில வார்த்தைகள் கூறி தொழுகைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. முஸ்லிம்கள் மதீனாவிற்கு வந்த சமயம் தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப் படுவதில்லை. அவர்கள் ஒன்று கூடி நேரத்தை முடிவு செய்து கொள்வார்கள். ஒருநாள் இதுபற்றி அனைவரும் கலந்தாலோசித்தனர். அப்போது உமர் (ரலி) 'தொழுகைக்காக அழைக்கின்ற ஒருவரை ஏற்படுத்தக்கூடாதா?' என்றார்.

    உடனே பிலால் (ரலி) அவர்களிடம் 'பிலாலே! எழுந்து தொழுகைக்காக அழையும்' என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்:புகாரி)

    அப்துல்லாஹ் பின் ஜைத் பின் அப்துரப் (ரலி) கூறுவதாவது: 'நான் இரவில் தூங்கிக் கொண்டிருந்தேன். கையில் மணியை வைத்துள்ள ஒரு வானவர் என்னைக் கடந்து சென்றார். உடனே நான் அவரிடம் 'மணியை விற்கப் போகிறீரா?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'அதை வைத்து நீர் என்ன செய்யப் போகிறீர்?' என்று கேட்டார். 'அதை வைத்து நான் மக்களுக்கு தொழுகை அழைப்பு விடுப்பேன்' என்றேன். அதற்கு வானவர், இதை விடச் சிறந்த ஒரு அழைப்பை நான் உமக்கு அறிவித்துத் தரட்டுமா?' எனக் கேட்டதும் நான் ஆம்,என்றேன்.

    'அல்லாஹூ அக்பர், அல்லாஹூ அக்பர், அல்லாஹூ அக்பர்,

    அல்லாஹூ அக்பர்,

    அஷ்ஹது அன்லாயிலாஹா இல்லல்லாஹ்,

    அஷ்ஹது அன்லாயிலாஹா இல்லல்லாஹ்,

    அஷ்ஹது அன்னமுஹம்மதர் ரசூலுல் லாஹ்,

    அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல் லாஹ்,

    ஹய்ய அலஸ்ஸலாத்,

    ஹய்ய அலஸ் ஸலாத், ஹய்ய அலல் பலாஹ்,

    ஹய்ய அலல் பலாஹ், அல்லாஹூ அக்பர்.

    அல்லாஹூ அக்பர், லாயிலாஹா இல்லல்லாஹ்.

    இவ்வாறு நீர் கூறவேண்டும் என்றார்.

    அதிகாலையில் நான் கண்ட கனவை நபி யிடம் கூறினேன். அதற்கு நபி (ஸல்) 'இது உண்மையான கனவு. நீர் எழுந்து பிலாலிடம் (ரலி) கூறும். அவர் பாங்கு சொல்லட்டும். ஏனெனில் உம்மை விட அவர் குரல் வளமிக்க வர்' என்றார்கள்.

    இதை கேள்விப்பட்டு நபியிடம் வந்த உமர் (ரலி) சத்தியத்தை கொண்டு தங்களை அனுப்பிய இறைவன் மேல் ஆணை! அவர் கண்ட கனவைப்போன்று நானும் கண்டேன்' என்றார். 'எல்லாப்புகழும் இறைவனுக்கே!' என நபி கூறினார்கள்'. (நூல்: அஹ்மது, இப்னுமாஜா, அபூதாவூத்)

    இன்று உலகளாவிய அளவில் இவ்வாறு சொல்லப்படும் பாங்கு முறை, ஹிஜ்ரி முதலா மாண்டு ரமலான் மாதம் நடைமுறைப் படுத்தப்பட்டதாகும். பாங்கோசை கேட்டதும் தொழு கைக்கு விரைவோம். நன்மைகள் பெறுவோம்.

    ×