என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஸ்ரீரங்கம் ரங்கநாதர்"
- பிரம்மோற்சவத்தில் ஒருநாள், மண்டபத்தில் அரங்கநாதர் எழுந்தருள்வார்.
- இறைவனுக்கு `நவமுது' என்னும் கஞ்சியும் நைவேத்தியமாக படைக்கப்படும்.
ஸ்ரீரங்கம் அருகே உள்ள `அகண்ட காவிரி' என்ற ஊரில், சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விஷ்ணு பக்தை வாழ்ந்தாள். அவளுக்கு, ஒரே ஒரு மகன். அவனுக்கு, தான் வழிபடும் இறைவனான `அரங்கன்' என்ற பெயரையே வைத்தாள். அந்த பிள்ளை வளர்ந்து அப்பகுதியில் மாடு மேய்க்கும் தொழிலை செய்து வந்தான். நண்பகல் வேளையில் தன் பிள்ளை இருக்கும் இடத்திற்குச் சென்று அவனுக்கு `கஞ்சி' (தண்ணீர் ஊற்றி வைக்கப்பட்ட பழையசோறு), கொடுத்து விட்டு திரும்புவது அந்த தாயின் வழக்கம்.
குறிப்பிட்ட இடத்தில் ஒரு அகண்ட மரத்தின் அடியில் அமர்ந்து `அரங்கா..' என்று அழைத்ததும், அந்த பிள்ளை ஓடோடி வந்து தன் தாய் கொண்டு வந்த அமிர்தம் போன்ற அந்த கஞ்சியை பருகி விட்டு, தாயின் மடியில் படுத்து சற்று ஓய்வெடுத்து விட்டு, மீண்டும் மாடுகளை மேய்க்கச் செல்வான். அன்றும் அப்படித்தான் மகனுக்காக பழைய சோறு எடுத்து வந்திருந்தாள், அந்த விஷ்ணு பக்தை.
`அரங்கா..' என்ற ஒன்றை குரலுக்கே ஓடோடி வரும் மகன், அன்று ஐந்து.. ஆறு முறை அழைத்தும் வரவில்லை. `மகனுக்கு என்ன ஆனதோ..' என்று அந்தத் தாய் பரிதவித்த நேரத்தில்.. `அம்மா..' என்று அழைத்தபடி வந்தான் அந்தச் சிறுவன்.
"ஒரு கன்று வழி தவறி தூரமாக போய்விட்டது. அதை பிடித்து தாயிடம் கொண்டு போய் சேர்த்து விட்டு வர நேரமாகிவிட்டது" என்று, தன் தாயின் முகம் தாங்கி நின்ற கேள்விக்கு, முந்திக் கொண்டு அவனாகவே பதிலை தந்தான்.
பின்னர் தாய் அளித்த கஞ்சியை சுவைத்து அருந்தியவன், "இன்று நேரமாகி விட்டது.. ஓய்வெடுக்க நேரமில்லை" என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடி மறைந்தான். மகன் சென்றதும் அந்த மரத்தின் நிழலில் சற்று ஓய்வெடுக்கலாம் என்று படுத்தாள், அந்தப் பெண்.
அப்போது `அம்மா.. அம்மா..' என்று சத்தம் கேட்டு விழித்தாள். அருகில் தன் மகன் நின்றிருந்தான். "என்னப்பா.. அதற்குள் வந்து விட்டாய்?" என்று கேட்டாள், அந்த தாய்.
அதற்கு அந்தச் சிறுவன்.. "என்னம்மா சொல்கிறீர்கள்? நான் இப்போதுதான் வருகிறேன். சாப்பாடு தாருங்கள்" என்று கேட்டான். "என்னப்பா சொல்கிறாய்.. இப்போதுதானே சாப்பிட்டு விட்டு போனாய்..." என்று அதிர்ச்சியாக கேட்டாள் தாய்.
`தன் மகன் இப்போதுதான் வருகிறான் என்றால்.. இதற்கு முன்பு இங்கே வந்து சாப்பிட்டு விட்டு போனது யார்?' என்ற கேள்வி தாய்க்கு எழுந்தது. அந்த கேள்வி மகனையும் தொற்றிக் கொண்டது.
மறுநாள் அந்த போலிச் சிறுவனை பிடிக்க இருவரும் ஒரு திட்டமிட்டனர். அதன்படி மதியம் சாப்பாடு கொண்டு வந்து, `அரங்கா.. ' என்று இரண்டு மூன்று முறை அழைக்க அந்தச் சிறுவன் வரவில்லை. உண்மையான மகன் ஒரு மரத்தின் பின்பாக மறைந்திருந்து, போலிச்சிறுவனை பிடிக்க காத்திருந்தான்.
அப்போது முன்தினம் அமுது உண்டச் சிறுவன் வந்து, தாயிடம் கஞ்சியை வாங்கிப் பருகினான். அதைப் பார்த்த உண்மையான மகன், ஓடோடிச் சென்று, "அம்மா.. நான்தான் உங்கள் மகன்" என்றான்.
அதற்கு மற்றொரு சிறுவனோ, "அம்மா நான்தான் உங்கள் மகன்" என்று கூறினான். இருவரும் மாறி மாறி அவ்வாறு சொன்னதும் அந்தத் தாய், "ரங்கநாதா.. இது என்ன விளையாட்டு?" என்று அரற்ற, "விளையாடத்தான் வந்தேன் அம்மா" என்று கூறிய அமுதுண்ட சிறுவன், திருவரங்கம் அரங்கநாதராய் காட்சி தந்தார். தாய்க்கும், பிள்ளைக்கும் ஆசி வழங்கி மறைந்தார்.
இந்த விஷயம் அறிந்த ராமானுஜர், அந்த தாய் வாழ்ந்த ஊருக்கு `ஜீயர்புரம்' என்று பெயரிட்டார். அதோடு அங்கே ஒரு மண்டபமும் கட்ட ஏற்பாடு செய்தார். பங்குனி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் ஒருநாள், அந்த மண்டபத்தில் அரங்கநாதர் எழுந்தருள்வார். அங்கே அந்த தாய்க்கு இறைவன் காட்சி தரும் நிகழ்வும், இறைவனுக்கு `நவமுது' என்னும் கஞ்சியும் நைவேத்தியமாக படைக்கப்படும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்