search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காரைக்கால் அம்மையார் குருபூஜை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருவந்தாதி என்னும் நூலை இயற்றியவர்.
    • மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவர். நாயன்மார்களில் மூத்தவர்.

    எல்லோருக்கும் தாயும் தந்தையுமாக விளங்குகின்ற இறைவன், `அம்மையே' என்று அழைத்ததால் காரைக்கால் நகரில் பிறந்த இந்த சிவனடியாருக்கு காரைக்கால் அம்மையார் என்கின்ற திருநாமம் நிலைத்தது. காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவர். நாயன்மார்களில் மூத்தவர். கயிலை மலையின் மீது கால்கள் படக்கூடாது எனக் கருதி கைகளால் நடந்து சென்றவர். அந்தாதி நூல்களில் மிகப்பழமையான நூலாகக் கருதப்படும் அற்புதத் திருவந்தாதி என்னும் நூலை இயற்றியவர்.

    இந்த நூல் சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுதியில் உள்ள ஒரு நூலாகும். இது தவிர, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை போன்ற நூல்களைத் தந்து சைவத்தமிழுக்குப் பெரும் தொண்டாற்றியுள்ளார். இவருக்கெனக் காரைக்கால் சிவன் கோயிலில் தனி சந்நதி அமைக்கப்பட்டுள்ளது. அக்கோயில் காரைக்கால் அம்மையார் கோயில் என்று மக்களால் அழைக்கப் பெறுகிறது. இவருடைய சிறப்புக்கள் சில.

     1. சிவபெருமானால் ''அம்மையே'' என்று அழைக்கப்பட்டவர்.

    2. இசையில் வல்லவர். இறைவன் நடனமாடும் போது கீழே அமர்ந்து இசைத்தபடி இருப்பார்.

    3. அறுபத்து மூன்று நாயன்மார்களில் அமர்ந்த கோலத்தில் இருப்பவர். மற்ற நாயன்மார்கள் நின்றபடியேபிரகாரத்தில் இருப்பர்.

    4. தமிழில் அந்தாதி, மாலை என்ற சிற்றிலக்கிய வகையைத் தொடங்கி வைத்தவர்.

    5. திருவாலங்காட்டில் காரைக்கால் அம்மையார் தங்கியமையால், ஞான சம்பந்தர் அத்தலத்தில் கால்பதிக்க தயங்கினார்.

    6. அம்மையாரின் பாடல்களை மட்டுமே மூத்த திருப்பதிகம் என்று சைவத்தில் சிறப்பிக்கப்படுகிறது.

     காரைக்கால் அம்மையாரின் பெருமையை விளக்கும் மாங்கனித் திருவிழா தனிப்பெரும் விழாவாக ஜூன், ஜூலையில் காரைக்காலில் நடைபெறும். அவருடைய குருபூஜை தினம் பங்குனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில், அதாவது இன்று எல்லா சிவாலயங்களிலும், சிவனடியார்கள் இல்லத்திலும் அனுஷ்டிக்கப்படும். அன்று அபிஷேக ஆராதனைகள் செய்து காரைக்கால் அம்மையார் இயற்றிய பாடல்களை ஓதுவார்கள்.

    ×