search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூஜை முறைகள்"

    • எந்தத் துதியும் தெரியவில்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம்.
    • மனதிற்குள் கணபதி, லட்சுமி, குபேரனின் திருநாமங்களுடன் போற்றி சேர்த்துக் கூறவும்.

    அமிர்தயோகம் அல்லது சித்தயோகம் உள்ள (அஷ்டமி, நவமி இல்லாத) ஒரு வெள்ளிக்கிழமை இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம்.

    விரதம் கடைப்பிடிக்கும் தினத்துக்கு முதல் நாளே சில பூஜை பொருட்களை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    லட்சுமி படம், குபேரன் படம், குபேர யந்தரம் இப்படி லட்சுமி குபேரன் சம்மந்தமா இருக்கிறத எடுத்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

    மஞ்சள் தூள், குங்குமம், தேங்காய், வெற்றிலை, பாக்கு, சந்தனம், பழம், பூ, சாம்பிராணி, கற்பூரம், நவதான்யம், தலைவாழை இலை இதெல்லாம் முதல் நாளே வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.

    விரதம் இருக்கும் வெள்ளிக்கிழமை அன்றைக்கு காலையிலே எழுந்து குளித்துவிட்டு, சுத்தமான உடை அணிந்து நெத்திக்கு குங்குமம் இட்டு தயாராக வேண்டும்.

    நல்ல நேரத்துல லட்சுமி குபேரன் படம், குபேர யந்தரம் இதை எல்லாம் எடுத்து மஞ்சள், குங்குமம் வெச்சு பூஜையில் வையுங்கள்.

    குபேரன் யந்தரம், படம் மட்டும் இருந்தா வடக்கு திசையிலே வைக்க வேண்டும்.

    படத்துக்கு முன்னால், தலைவாழை இலையை வைத்து அதுமேல் நவதானியத்தையும் ஒன்றாய் கலக்காம சுத்திவர பரப்பி வைங்க.

    அதுக்கு நடுவுல ஒரு செம்பை வைத்து சுத்தமான தண்ணீரால் நிரப்பி அதுல கொஞ்சம் மஞ்சள் தூளைப் போட்டு வைக்க வேண்டும்.

    செம்பு மேல மஞ்சள் பூசின ஒரு தேங்காயை வைத்து, சுற்றிலும் மாவிலையை சொருகி கலசம் மாதிரி அமைக்க வேண்டும்.

    வெற்றிலை, பாக்கு, பழம், இதோட தட்சணை எல்லாத்தையும் கலசத்துக்கு முன்னால் வைத்தல் வேண்டும்.

    கொஞ்சம் மஞ்சள் தூள் எடுத்து சிறிது தண்ணீர் விட்டு சின்னதா பிள்ளையார் பிடிச்சு, வாழை இலையின் வலப்பக்கம் வைத்து குங்குமப் பொட்டு வைக்க வேண்டும்.

    படம், யந்தரம், கலசம் மஞ்சள் பிள்ளையார் ஆகியவற்றிற்கு பூக்களை போட்டு ஊதுபத்தி ஏற்றி வைக்கவும்.

    கிழக்கு பார்த்து அமர்ந்து, பிள்ளையார் மந்த்ரம் ஸ்லோகங்களைக் கூறவும்.

    பின்னர் லட்சுமி ஸ்லோகம், துதியைக் கூறவும், குபேரனை பற்றிய ஸ்லோகம், மந்திரம், துதி ஆகியவற்றைக் கூறவும்.

    எந்தத் துதியும் தெரியவில்லை என்றாலும் கவலைப்பட வேண்டாம்.

    மனதிற்குள் கணபதி, லட்சுமி, குபேரனின் திருநாமங்களுடன் போற்றி சேர்த்துக் கூறவும்.

    பின்பு தூப தீபம் காட்டி வாழைப் பழம், பசும்பால் (சர்க்கரை போட்டுக் காய்ச்சியது) பாயசம் என்று முடிந்த நிவேதனத்தை செய்து பகவானுக்கு படைக்கலாம்.

    வெற்றிலை, பாக்கு, பழத்தை சுமங்கலிகளுக்கும், தட்சணையை ஏழைகளுக்கு கொடுக்கவும்.

    நியாயமான தேவைகளை நிறைவேற்றி தேவையான செல்வத்தையும் நிலையான சந்தோஷத்தையும், நிம்மதியையும், ஆரோக்கியத்தையும் எல்லோருக்கும் தா...! என்று குபேரனை மனசுக்குள்ளே நினைச்சுக்கிட்டு வேண்டிக் கொள்ள வேண்டும்.

    உங்க வாழ்க்கையில் குறுக்கிடக் கூடிய இன்னல்கள், தடைகள் எல்லாவற்றையும் நீக்கி, வளமும் நலமும் உங்களை வந்தடைய குபேரன் நிச்சயம் அருள் புரிவார்.

    இந்த விரதத்தை ஆண், பெண் குழந்தைகள் என்று யார் வேண்டுமானாலும் குறிப்பிட்ட காலம் என்று இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் கடைப் பிடிக்கலாம்.

    லட்சுமி குபேர விரதம் இருந்தால் உங்களுடைய லட்சியம் எல்லாம் ஈடேறும்.

    • இறைவனை பூஜிக்க, பூஜிக்க மனம் பக்குவத்துக்கு வந்து விடும்.
    • எந்த சலனமும் உங்கள் மன அமைதியை சீர்குலைக்க முடியாது.
    • இது நோய்களை மிக எளிதாக விரட்டும்.

    வீட்டில் பூஜைகள் செய்வதை முதலில் நாம் ஒரு பயிற்சி மாதிரி கூட தொடங்கலாம்.

    பிறகு அதுவே பழக்கமாகி விடும். அந்த பழக்கம் நீடித்தால் அது வழக்கமாகி ஒரு புதிய மரபை ஏற்படுத்தி விடும்.

    தினசரி வாழ்க்கையில் நாம் தினமும் எப்போது சாப்பிட்டு பழகுகிறோமோ, அந்த நேரம் வந்ததும் பசி வயிற்றை கிள்ளத்தொடங்கி விடும்.

    தூங்கும் நேரம் வந்ததும் கண்கள் சொக்கத்தொடங்கி விடும்.

    அது போலவே அதிகாலையில் இறைவனுக்கு பூ போட்டு பூஜை செய்து பழகி விட்டால், அது உங்களை தினம், தினம் இறைவன் பக்கம் கொண்டு வந்து விடும்.

    இறைவனை பூஜிக்க, பூஜிக்க மனம் பக்குவத்துக்கு வந்து விடும்.

    எந்த சலனமும் உங்கள் மன அமைதியை சீர்குலைக்க முடியாது. இது நோய்களை மிக எளிதாக விரட்டும்.

    அதுமட்டுமா குடும்பத்தில் மகிழ்ச்சி, உள்ளத்தில் ஒருவித சந்தோஷம், கடவுளுடன் நெருங்கி விட்டோம் என்ற நெகிழ்ச்சி போன்ற எல்லாம் கிடைத்து விடும்.

    கோடி ரூபாய் கொட்டி கொடுத்தாலும் இவையெல்லாம் கிடைக்கவே கிடைக்காது.

    ஒருநாள்..... ஒரே ஒருநாள் வீட்டில் முழுமையான பூஜையை கேட்டு தெரிந்து கொண்டு செய்து பாருங்கள்.

    இறை அனுபவத்தை உணர்வீர்கள்.

    • பெருமாளுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விசேஷமான சேவை நடைபெறும்.
    • சேவைகள் வாராந்திர சேவைகள் என்று அழைக்கப்படுகின்றன.

    திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு விசேஷமான சேவை நடைபெறுகிறது. இந்த சேவைகள் 'வாராந்திர சேவைகள்' என்று அழைக்கப்படுகின்றன. இந்த சேவைகளுக்கான கட்டணங்களை செலுத்திய பக்தர்கள், சேவையில் பங்கு கொண்டு ஶ்ரீவேங்கடேஸ்வர ஸ்வாமியின் அருளைப் பெறலாம். ஆன்லைன் மூலமாகவும் தேவஸ்தான அலுவலகம் வாயிலாகவும் முன்பதிவு செய்து கொண்டு இவற்றில் கலந்து கொள்ளலாம்.

    திங்கட்கிழமை - விசேஷ பூஜை

    திருப்பதி ஏழுமலையானுக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 6 மணிக்கு நடைபெறும் முக்கிய சேவை 'விசேஷபூஜை' . இந்த சேவை கோயிலின் உள்ளே இருக்கும் கல்யாண மண்டபத்தில் ஶ்ரீதேவி, பூதேவி உடனுறை ஶ்ரீமலையப்ப சுவாமிக்கு நடைபெறுகின்றது.

    பிரதி திங்கட்கிழமை நடைபெறும் இந்த சேவை 1991-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8-ம் தேதி தொடங்கப்பட்டு ஆர்ஜித சேவையாக நடைபெற்று வருகின்றது.

    திருமலையான் ஆலயத்தில் இரண்டாவது அர்ச்சனை, இரண்டாவது நைவேத்தியம் நடைபெற்ற பிறகு மலையப்ப சுவாமி கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்கிறார். வைகானச ஆகம் சாத்திர முறைப்படி ஹோமங்கள் நடைபெற்ற பின்னர், உத்ஸவ மூர்த்திக்கு திருமஞ்சனம் நிர்வகிக்கப்படுகிறது.. இந்த சேவையில் பங்கு பெறுபவர்களுக்கு பிரசாதம் அளிக்கப்படுகின்றது.

    செவ்வாய்க்கிழமை - அஷ்டதள பாதபத்மாராதனம்

    ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 6 மணிக்கு இரண்டாவது அர்ச்சனையாக 108 தங்கத் தாமரைகளால் மூலமூர்த்திக்கு நடைபெறும் அர்ச்சனை நிகழ்ச்சியே 'அஷ்டதள பாத பத்மாராதனம்' சுமார் 20 நிமிடம் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

    1984-ம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தான பொன் விழாவை முன்னிட்டு அறிமுகப்படுத்தப்பட்ட சேவையாகும். ஐதராபாத்தை சேர்ந்த ஒரு முஸ்லிம் பக்தர் இதற்குத் தேவையான 108 தங்கத் தாமரைகளை காணிக்கையாக சமர்ப்பித்தார். பின்னர் இது ஆர்ஜித சேவையாக அறிவிக்கப்பட்டது. 108 தங்கத் தாமரையால் அர்ச்சனை நடக்கும்போது பக்தர்கள் மகிழ்ச்சியுடன் எம்பெருமானை தரிசிக்கலாம்.

    புதன்கிழமை - சஹஸ்ர கலசாபிஷேகம்

    ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 6 மணிக்கு தங்கவாயில் முன்பு நடைபெறும் பிரதான சேவை 'சஹஸ்ர கலசாபிஷேகம்' போக ஶ்ரீநிவாச மூர்த்தியுடன் ஶ்ரீதேவி பூதேவி உடனுறை திருமலையப்பர் ஸ்வாமிக்கும் இந்த சஹஸ்ரகலசாபிஷேகம் நடைபெறும். 1511-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே இந்த சஹஸ்ரகலசாபிஷேகம் நடைபெறுவதற்கான ஆதாரம் உள்ளது. தங்கவாயில் முன்பு நடைபெறும் இந்த சஹஸ்ரகலசாபிஷேகத்தில் ஆர்ஜித சேவைக் கட்டணம் செலுத்தி பக்தர்கள் பங்குகொள்ளலாம். எம்பெருமானை தரிசித்து பிரசாதம் பெற்றுச் செல்லலாம்.

    வியாழக்கிழமை - திருப்பாவாடை - நேத்ர தரிசனம்:

    பிரதி வியாழக்கிழமைதோறும் வெங்கடேசப் பெருமாளுக்கு இரண்டாவது அர்ச்சனைக்குப் பிறகு நடைபெறும் நிவேதனம் 'திருப்பாவாடை சேவை' ஆகும். இதை 'அன்ன கூடோத்ஸவம்' என்றும் கூறுவார்கள்.

    வியாழக்கிழமை காலை 6 மணிக்கு எம்பெருமான் மூலமூர்த்திக்கு அணிந்துள்ள ஆபரணங்கள் அனைத்தையும் களைந்து விடுவார்கள்.

    பின்னர் பெருமாளுக்கு இடப்படும் திருநாமத்தின் அளவை நன்றாகக் குறைத்து கண்கள் நன்றாக தெரியும்படி செய்வார்கள்.

    வெங்கடேசப் பெருமாளுக்கு எதிராக மலைபோன்று புளியோதரையை குவித்து வைப்பர். புளியோதரையுடன் ஜிலேபியையும், முறுக்கையும் வைத்து பூவினால் அலங்கரிப்பர். இந்த புளியோதரையை நேராக கருவறையில் உள்ள எம்பெருமானுக்கு நிவேதிப்பர்.

    இச்சேவையில் ஆர்ஜிதம் செலுத்தும் பக்தர்களும் பங்கு கொள்ளலாம். இச்சேவையின் போது வேத பண்டிதர்கள் வேத பாராயணம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். பின்னர் பக்தர்களுக்கு இச்சேவையுடன் ஸ்வாமி நேத்ர தரிசனமும் உண்டு.

    பூவங்கி சேவை

    பிரதி வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு எம்பெருமானுக்கு நடைபெறும் தோமாலை சேவையை 'பூவங்கி சேவை' என்பர். ஆனால், இந்தச் சேவை மட்டும் முழுமையாக ஏகாந்தமாக நடைபெறும். ஜீயர் ஸ்வாமிகள் எடுத்துக்கொடுக்க பூமாலையை அர்ச்சக ஸ்வாமிகள் எம்பெருமான் திருமேனியில் அணிவிப்பர். எம்பெருமான் பூவை ஆடையாக அணிந்திருப்பது போன்று அது காட்சியளிக்கும். இந்த சேவை ஆன பிறகு பிரதி வியாழக்கிழமை இரவு பக்தர்கள் இந்த அலங்காரத்தில் எம்பெருமானை தரிசிக்கலாம்.

    வெள்ளிக்கிழமை அபிஷேகம்

    ஶ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி மூலமூர்த்திக்கு ஒவ்வொரு பிரதி வெள்ளிக்கிழமை விடியற்காலை 5 மணிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த வெள்ளிக்கிழமை அபிஷேகத்தை பகவத் ராமாநுஜாச்சார்ய ஸ்வாமிகள் துவக்கிவைத்துள்ளார். அவர், எம்பெருமானின் திருமார்பில் உறையும் 'தங்க அலர்மேல் மங்கை' உருவத்தை அலங்காரம் செய்து, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த அபிஷேகம் நடைபெறும்படிக்கு ஏற்பாடு செய்தார்களாம். இந்த சேவை பகவத் ராமாநுஜர் காலத்தில் இருந்தே நடைபெற்று வருகிறது.

     ஆகாசகங்கை தீர்த்தத்தால் அபிஷேகம்

    முற்காலத்தில் எம்பெருமான் நித்திய அபிஷேக சேவை கைங்கர்யத்தில் ஈடுபட்ட மகா பக்தர் திருமலைநம்பி வம்சத்தவர் கொண்டு வந்த குடத்தை முதலில் பக்தி பிரபத்தியோடு தங்கச் சங்கில் ஆகாசகங்கை தீர்த்தத்தை எம்பெருமான் சிரசின் மீது பொழிந்து ஹரி: ஓம் ஸஹஸ்ரசீர்ஷா: புருஷ: என்று புருஷசூக்தத்தினை தொடங்குவார். குலசேகரப்படிக்கு வெளியே உள்ள பண்டிதர்கள் புருஷசூக்தத்தினை ஜீயர்ஸ்வாமிகள் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து பிறருக்குக் கேட்கும்படி உச்சரிப்பர். இவர்கள் அபிஷேகம் நடைபெறும் வரையிலும் பஞ்சசூக்தங்களையும் சேவித்துக் கொண்டே இருப்பர்.

    ஆகாசகங்கை தீர்த்தத்தினால் அபிஷேகம் செய்கின்ற வரையிலும் சுவாமி திவ்யமங்கள மூர்த்தியைப் பார்த்து பக்தர்கள் அந்த அபிஷேகத்தை தாமே செய்வதைப் போன்று எண்ணி, மெய் மறந்து போவார்கள். புனுகு, கஸ்தூரி, ஜவ்வாது முதலான சுகந்த பரிமளத்துடன் ஆகாச கங்கை தீர்த்தத்தால் சுமார் ஒரு மணி நேரம் அபிஷேகம் நடைபெறும். அதன்பின்னர் மஞ்சளினால் சுவாமியின் திருமார்பில் உறைந்துள்ள மஹாலட்சுமிக்கும் இந்த அபிஷேகம் நடைபெறும்.

    நிஜபாத தரிசனம்

    பிரதி வெள்ளிக்கிழமை அபிஷேகத்துக்குப் பிறகு அபிஷேக சேவையில் பங்கு கொள்ளும் பக்தர்கள் எம்பெருமானை தரிசித்துச் சென்ற பின்னர் 'நிஜபாத தரிசனம்' தொடங்கும். ஸ்வாமியின் நிஜபாதத்தை எவ்வித கவசமும் இல்லாது தரிசிக்கலாம். இந்த தரிசனத்தில் மட்டுமே எம்பெருமானின் திருவடிகளை தரிசிக்க ஏதுவாகிறது. மற்ற நேரங்களில் அந்த திருவடிகளுக்கு தங்கக் கவசம் வேயப்பட்டிருக்கும்.

    • சித்தர் பாரம்பரியத்தில் உள்ள 18 சித்தர்களில் பதஞ்சலியும் ஒருவர்.
    • ராமேஸ்வரத்தில் உள்ள ஜீவசமாதியில் இன்று குருபூஜை

    தமிழ் சித்த (சைவ) பாரம்பரியத்தில் உள்ள 18 சித்தர்களில் பதஞ்சலியும் ஒருவர். பதஞ்சலி புகழ்பெற்ற யோக குருவான நந்தி தேவாவிடம் (சிவபெருமானின் தெய்வீக காளை) யோகா மற்றும் பிற பயிற்சிகளைக் கற்றுக்கொண்டார். சிவபெருமானால் தொடங்கப்பட்ட 18 யோக சித்தர்களில் நந்தியும் ஒருவர். நந்திதேவரின் சீடர்களில் பதஞ்சலி, தட்சிணாமூர்த்தி, திருமூலர், ரோமரிஷி, சட்டைமுனி ஆகியோர் அடங்குவர். ராமேஸ்வரத்தில் உள்ள ஜீவசமாதியில் இன்று குருபூஜை நடக்கிறது.

    பதஞ்சலி சித்தரின் பூஜை முறைகள்:

    தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளினால் மெழுகி அரிசிமாவினால் கோலமிட்டு அப்பலகையின் மேல் பதஞ்சலி முனிவரின் திருவுருவப்படத்தினை வைக்க வேண்டும் படத்தின் முன்பாக அலங்கரிக்கப்பட்ட திருவிளக்கினை வைத்து, நல்லெண்ணை ஊற்றி பஞ்சு திரி போட்டு இரண்டுமுக தீபமேற்ற வேண்டும். பொன்றி வஸ்திரம் அணிவித்து பொன்னிற மலர்களையும் பிச்சிப்பூ, முல்லைப்பூ போன்ற மலர்களாலும் பின்வரும் பதினாறு போற்றிகளைக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.

    பதினாறு போற்றிகள்

    1. ஒரு நிலைப்பட்ட மனதை உடையவரே போற்றி!

    2 ஆதி சேஷனின் அவதாரமே போற்றி!

    3. ஒளிமயமானவரே போற்றி!

    4. மந்திரத்தின் உருவமானவரே போற்றி!

    5. கருணாமூர்தியே போற்றி

    6. கடும் விசக்காற்று மூச்சுடையவரே போற்றி!

    7. பூலோகச் சூரியனே போற்றி

    8. ஞான வழிகாட்டுபவரே போற்றி!

    9. பேரும் புகழும் உடையவரே போற்றி!

    10. இன்மொழி பேசுபவரே போற்றி!

    11 இகபரசுகம் தருபவரே போற்றி!

    12. மகாவிஷ்ணு பிரியரே போற்றி!

    13. அஷ்டமா சித்திகளையுடைவரே போற்றி!

    14 அங்ஞானம் அகற்றுபவரே போற்றி

    15. யோக சூத்திரம் அருளிய யோகியே போற்றி!

    16.யோகங்கள் அனைத்தையும் தரும் பதஞ்சலி முனிவரே போற்றி!

    இவ்வாறு பதினாறு போற்றி சொல்லி அர்ச்சனை செய்தவுடன் ஓம் க்லம் பதஞ்சலி சித்த பெருமானே போற்றி என்று 108 முறை பக்தியுடன் கூறி வழிபட வேண்டும்.

    நிவேதனம்

    இளநீர், கடுக்காய் தண்ணீருடன் தேன் கலந்த தீர்த்தம், பசும்பால், வாழைப்பழம் போன்றவை நிறைவாக தீபாராதனை செய்ய வேண்டும். பதஞ்சலி முனிவரின் பூஜையின் பலன்கள்:

    1. ஜாதகத்தில் உள்ள வியாழ கிரக தோஷ நிவர்த்தியுண்டாகும்.

    2 குடும்ப ஒற்றுமை உண்டாகும்.

    3. செல்வம் பெருகும், மகிழ்ச்சியுண்டாகும்.

    4. எலும்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் குணமடையும்.

    5. நன் மக்கட்பேறு உண்டாகும்.

    6. கல்விக்கலைகளில் சிறந்து விளங்குவார்கள்.

    7. தடைகள் நீங்கி எல்லாவற்றிலும் வெற்றியுண்டாகும்.

    8. உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் விலகும்.

    9. எல்லா நலன்களும் சூழ இன்புற்று வாழ்வார்கள்.

    இவரை வழிபட வியாழக்கிழமை சிறந்த தினமாகும். பதஞ்சலி முனிவர் பங்குனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தார் இவர் வாழ்ந்த காலம் 5 யுகம் 7 நாள் ஆகும்.

    ×