search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறந்த நாய்"

    • மதியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ரேம்போவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
    • இறுதி சடங்கு நிகழ்ச்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை கதிர்காமத்தைச் சேர்ந்தவர் மதி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு டாபர்மேன் நாய்க்குட்டி ஒன்றை ஆசையாக வாங்கி அதற்கு ரேம்போ என பெயர் வைத்து செல்லமாக வளர்த்து வந்தார். ரேம்போ அவர்கள் குடும்பத்தில் ஒருவராகவே கடந்த 10 ஆண்டாக இருந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாய் ரேம்போவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் ரேம்போ திடீரென உயிரிழந்தது.

    ரேம்போவின் மறைவு மதியின் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. தனது குடும்பத்தில் ஒருவராக இருந்து இறந்த செல்லப்பிராணி ரேம்போவுக்கு மனிதர்களுக்கு செய்யும் இறுதி சடங்குகள் போல் செய்து அடக்கம் செய்ய மதி குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

    இதற்காக ரேம்போ இறந்ததை தெரியப்படுத்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டினர். தொடர்ந்து வீட்டின் முன்பு பந்தல் அமைத்து சவப்பெட்டியில் ரேம்போவின் உடலை வைத்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    மதியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ரேம்போவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும் மதியின் குடும்பத்தினருக்கு ஆறுதலும் கூறினர். இதனையடுத்து ரேம்போவுக்கு இறுதி சடங்குகள் செய்து வீட்டிற்குள்ளேயே அடக்கம் செய்தனர். இந்த இறுதி சடங்கு நிகழ்ச்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    • வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லாத போது, வீட்டின் முன்புறம் செல்வேந்திரனின் பேரக்குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
    • வெளியே சென்றிருந்த செல்வேந்திரன் குடும்பத்தினர் வந்தபோது நடந்த விவரத்தை குழந்தைகளிடம் கேட்டு அறிந்தனர்.

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கழுவன்தோண்டி கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் செல்வேந்திரன்-சாந்தி தம்பதியினர். இவர்கள் தங்களது மூத்த மகன் கலைவாணன், 2-வது மகன் கணேஷ் ஆகியோர்களுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர்.

    இவர்கள் டெஷண்ட் வகையைச் சேர்ந்த நாயை 11 வருடங்களுக்கு முன்பு குட்டியாக எடுத்து வந்து ஹென்றி என்ற பெயர் வைத்து வளர்த்து வந்துள்ளனர். ஹென்றியின் பாசத்தால் அன்பால் தங்களது குடும்பத்தில் ஒரு மகனாக செல்வேந்திரன் குடும்பத்தினர் வளர்த்து வந்துள்ளனர்.

    சுப நிகழ்ச்சிகளில் கூட ஒரு போட்டோ எடுப்பதாக இருந்தால் நாயுடன் தான் போட்டோ எடுத்துக்கொள்வார்கள். அந்த அளவிற்கு குடும்பத்தினருடன் ஒட்டி உறவாடி அன்புடன் 11 வருடங்களாக பழகி வந்துள்ளது நாய் ஹென்றி.

    தீபாவளியில் அதிக சத்தத்துடன் பட்டாசு வெடித்தால் நாய் பயப்படும் என்பதால் சிறிய ரக சத்தம் குறைவான பட்டாசுகளையே செல்வேந்திரன் குடும்பத்தினர் வெடிப்பார்கள். அந்த அளவிற்கு குடும்பத்தில் ஒருவராக இருந்தது.

    இந்நிலையில் வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லாத போது, வீட்டின் முன்புறம் செல்வேந்திரனின் பேரக்குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அருகில் உள்ள முந்திரி தோப்பில் இருந்து பாம்பு வந்தது.

    இதை பார்த்த நாய் குலைத்து சத்தம் எழுப்பியத்துடன் குழந்தைகளை தன் காலால் தள்ளி பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தியது. பின்னர் வீட்டை நோக்கி வந்த பாம்பை உள்ளே விடாமல் போராடியது. அப்போது பாம்பு நாயை கடித்தது. எனினும் கவலைப்படாமல் பாம்பை நாய் குதறியது. இதில் பாம்பு செத்தது. பாம்பின் விஷத்தால் நாய் ஹென்றி மயங்கி விழுந்தது.

    இதனிடையே வெளியே சென்றிருந்த செல்வேந்திரன் குடும்பத்தினர் வந்தபோது நடந்த விவரத்தை குழந்தைகளிடம் கேட்டு அறிந்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் நாயை தூக்கிக்கொண்டு கால்நடை மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து ஏற்கனவே பாம்பின் விஷத்தால் நாய் இறந்து விட்டதை தெரிவித்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வேந்திரன் குடும்பத்தினர் தங்கள் குடும்பத்தின் உறுப்பினர் ஒருவரை இழந்த தூக்கத்தில் குழந்தைகளை காப்பாற்றி வீரமரணம் அடைந்த நாய்க்கு டிஜிட்டல் பேனர் வைத்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை ஒட்டி, உறவினர்கள், நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத் தொடர்ந்து உறவினர்கள், நண்பர்கள் அப்பகுதி பொதுமக்கள் முன்னிலையில் இறுதிச் சடங்கு செய்து அடக்கம் செய்தார்கள். மேலும் குடும்ப உறுப்பினர் இறந்தால் அனுசரிக்கப்படும் 14 நாள் துக்கம் அனுசரித்து சடங்குகள் செய்து வருகின்றனர்.

    எஜமானரின் பேரக்குழந்தைகளை காப்பாற்ற நாய் போராடி உயிர்விட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×