search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகம் கழுவும் முறை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முறையாக முகம் கழுவாவிட்டால் சரும பிரச்சினைகள் ஏற்படும்.
    • பெண்கள் முகம் கழுவும்போது செய்யும் தவறுகள்.

    காலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு முகம் கழுவும் வழக்கத்தை அனைவரும் பின்பற்றுவோம். சிலருக்கு சருமத்தில் வறட்சி, சருமம் சிவத்தல் போன்ற பிரச்சினைகள் இருக்கலாம். அதற்கு சரியான சரும பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவதோடு, முகத்தை எப்படி கழுவ வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். முறையாக முகம் கழுவாவிட்டால் சரும பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். பெண்கள் முகம் கழுவும்போது செய்யும் தவறுகள் குறித்தும், எப்படி முகம் கழுவ வேண்டும் என்பது குறித்தும் பார்க்கலாம்.

    சூடான நீரை பயன்படுத்துதல்:

    சூடான நீரை கொண்டு ஒருபோதும் முகம் கழுவக்கூடாது. வெயில் காலத்தில் குழாயில் இருந்து வரும் சூடான நீரும் முகம் கழுவுவதற்கு ஏற்றதல்ல. அது சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய் பசை தன்மையை அகற்றி, வறட்சி, எரிச்சல், சிவத்தல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீர் கொண்டு முகம் கழுவுவதுதான் சரியானது.

    ஈரப்பதமான துடைப்பான் பயன்படுத்துதல்:

    `வெட் வைப்ஸ்' எனப்படும் ஈரப்பதமான துடைப்பான்களில் பெரும்பாலும் ரசாயனங்கள் கலந்திருக்கும். அவை சருமத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தும். முகத்தில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதற்கு அவற்றை பயன்படுத்தினால் சருமத்தில் எரிச்சல் ஏற்படலாம். அவை தற்காலிகமாக முகத்தை சுத்தம் செய்தாலும், சருமத்தில் படிந்திருக்கும் கூடுதல் எண்ணெய் பசைத்தன்மை மற்றும் அழுக்கை முழுமையாக அகற்றாது. சருமத் துளைகளில் அடைப்பை ஏற்படுத்தி சருமத்திற்கு அசவுகரியத்தை உண்டாக்கக்கூடும். அதனால் அவற்றை அடிக்கடி பயன்படுத்தக்கூடாது.

     சோப் உபயோகித்தல்:

    தோல் வகைக்கு பொருத்தமான பொருட்களை கொண்டே சுத்தம் செய்ய வேண்டும். கடினத்தன்மை கொண்ட சோப், கிளென்சரை பயன்படுத்துவது சருமத்தில் வறட்சி அல்லது வீக்கத்தை ஏற்படுத்தும். சருமத்தின் தன்மைக்கு ஏற்ற பேஸ்வாஷை தேர்ந்தெடுப்பது முக்கியமானது.

     அழுக்கு துண்டு பயன்படுத்துதல்:

    முகத்தை சுத்தம் செய்வதற்கு முன்பு கைகளை சுத்தம் செய்யவேண்டும். அழுக்கான கைகளை கொண்டு முகத்தை கழுவுவது, அழுக்கு துண்டை கொண்டு முகம் துடைப்பது சருமத்தில் பாக்டீரியா, அழுக்கு படிவதற்கும், சரும நோய்த் தொற்றுகளுக்கும் வழிவகுக்கும்.

     சருமத்திற்கு அழுத்தம் கொடுப்பது:

    கைகளை கொண்டு சருமத்தை அழுத்தி தேய்ப்பது, துணியை கொண்டு முகத்தை அழுத்தமாக துடைப்பது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். முகத்தை கழுவும்போது உள்ளங்கைகள் அல்லது விரல் நுனிகளை கொண்டு மென்மையாக வட்ட வடிவில் மசாஜ் செய்வது நல்லது.

    இறந்த செல்களை அகற்றுதல்:

    குறிப்பிட்ட கால இடைவெளியில் இறந்த சரும செல்களை நீக்குவது முக்கியமானது. வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறைக்கு மேல் இறந்த செல்களை நீக்குவது சருமத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தும். இறந்த செல்களை நீக்குவதற்கு தோல் வகைக்கு ஏற்ற மென்மையான எக்ஸ்போலியண்டை தேர்வு செய்வது நல்லது.

     எத்தனை முறை முகம் கழுவலாம்?

    காலையில் ஒருமுறை, இரவில் ஒருமுறை முகத்தை சுத்தம் செய்யலாம். வெளியே செல்பவராக இருந்தால் சுற்றுப்புற மாசுபாடால் முகத்தில் படியும் அழுக்கு மற்றும் வியர்வையை அகற்ற கூடுதலாக ஒருமுறை முகம் கழுவலாம். எண்ணெய்ப் பசை சருமம் கொண்டவராக இருந்தால் மூன்று முறைக்கு மேல் முகம் கழுவும்போது சருமத்தில் உள்ள ஈரப்பதம் நீங்கக்கூடும். எனவே சரும நிபுணர்களின் ஆலோசனை பெற்று அதற்கேற்ப செயல்படுவது சிறந்தது.

    ×