search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழர் வழிபாடு"

    • விழாக்கள் பெண் தெய்வங்களை மையப்படுத்தியே கொண்டாடப்பட்டுள்ளன.
    • சூரிய பகவானுக்கு நன்றி கூறி திருவிழாவை தொடங்குகின்றனர்.

    தமிழ் மக்கள் ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு திருவிழா கொண்டாடி, அந்த மாதத்தின் சிறப்புகளை உலகறிய செய்துள்ளனர். அப்படி கொண்டாடப்படும் திருவிழாக்கள், காரண காரியம் இல்லாமல் நடைபெறுவதில்லை. சித்திரை விஷூ இப்போது கேரளாவில் கொண்டாடப்படும் ஒரு பிரபலமான திருவிழாவாக இருந்தாலும், ஆரம்ப காலங்களில் நம் தமிழ் பேசும் மக்களால் தமிழர்கள் வாழும் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்துள்ளது. இந்த சித்திரை விஷூவானது ஆரம்ப காலங்களில் நம் மக்களால் `அறுவடை திருவிழா' என்றுதான் அழைக்கப்பட்டது.

    ஆரம்ப காலங்களில் நம் மக்கள் இரண்டு பருவங்களில் விவசாய அறுவடைகளை செய்து வந்துள்ளனர். அதில் ஆடி மாதம் விதை விதைத்து தை மாதம் அறுவடை செய்வது ஒரு பருவமாகும். புரட்டாசி மாதம் விதை விதைத்து சித்திரை மாதம் அறுவடை செய்வது இன்னொரு பருவமாகும். புரட்டாசி மாதமானது வைணவர்களின் மிக முக்கியமான மாதமாகும்.

    இந்த மாதத்தில் விதை விதைத்து விவசாய வேலைகளை ஆரம்பிப்பது வைணவ கடவுளான பெருமாளின் முழு ஆசீர்வாதத்தோடு நடப்பதாக வைணவர்களின் முழு நம்பிக்கையாக இருந்து வந்துள்ளது. புரட்டாசி மாதத்தில் பயிரிடப்படும் பயிர்களின் அறுவடையானது சரியாக சித்திரை மாதம் பிறக்கும் பொழுது, இறைவனுக்கு நன்றி கூறும் வகையில் கொண்டாடப்படுகிறது.

    இது போன்ற விழாக்கள் பெண் தெய்வங்களை மையப்படுத்தியே கொண்டாடப்பட்டு வந்துள்ளன. இந்த சித்திரை விஷூவும் பெண் தெய்வமான கொற்றவையை மையப்படுத்தியதுதான். கொற்றவை தெய்வமானது திருமாலின் பெண் அம்சமாக பார்க்கப்படுகிறது.

    இந்த விவசாய வேலைகள் நல்லபடியாக முடிந்ததற்காக முதலில் சூரிய பகவானுக்கு நன்றி கூறி திருவிழாவை தொடங்குகின்றனர்.

    பிற்கால பாண்டியர் காலம் வரை கேரள பகுதியானது நம் தமிழகத்தின் ஒரு பகுதியாகவே இருந்துள்ளது. அதனால் இந்த ஏப்ரல் மாத அறுவடையானது, நாடு முழுவதும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பிற்கால பாண்டிய பேரரசு தமிழகத்தில் வீழ்ச்சி அடைந்தவுடன் அனைத்து பகுதிகளும் தனித்தனியாக பிரிந்து, ஒவ்வொரு திருவிழாவும் அந்தந்த பகுதி சார்ந்த திருவிழாவாக மாற ஆரம்பித்தன.

    அப்படித்தான் இந்த சித்திரை விஷூ திருவிழாவும். இன்று அறுவடை திருவிழா கேரள மக்களுக்கான ஒரு திருவிழாவாக மாறிப்போனது. சித்திரை விஷூ தற்போதும் கேரள மக்களாலும், பாலக்காடு தமிழர்களாலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    ×