என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துறவி"

    • குஜராத்தில் கடந்த ஆண்டு வைர வியாபாரி ஒருவரும் அவரது மனைவியும் துறவறம் பூண்டனர்.
    • அபரிமிதமான செல்வத்திற்கு பெயர் பெற்ற பண்டாரி குடும்பத்தின் முடிவு குஜராத் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    சூரத்:

    குஜராத் மாநிலம் ஹிம்மத்நகரை சேர்ந்த தொழில் அதிபர் பாவேஷ் பண்டாரி. கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரும் இவரது மனைவியும் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற விழாவில், தங்களுக்கு சொந்தமான ரூ.200 கோடி

    மதிப்பிலான அனைத்து சொத்துகளையும் தானமாக வழங்கி துறவறத்தை ஏற்றுக் கொண்டனர்.

    கடந்த 2022-ம் ஆண்டு இவர்களின் 19 வயது மகளும் 16 வயது மகனும் துறவறத்தை ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் தங்கள் குழந்தைகளை பின்பற்றி பாவேஷ் பண்டாரியும் அவரது மனைவியும் துறவறம் பூண்டதாக அவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

    இத்தம்பதியர் தற்போது முக்திக்கான பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளனர். வருகிற 22-ந்தேதி நடைபெறும் விழாவில் உறுதிமொழி எடுத்த பிறகு, தம்பதியினர் அனைத்து குடும்ப உறவுகளையும் துறக்க உள்ளனர். பிறகு அவர்கள் நாடு முழுவதும் வெறுங்காலுடன் நடந்து சென்று, யாசகம் பெற்று மட்டுமே உயிர் வாழ்வார்கள்.

    இரண்டு வெள்ளை ஆடைகள், உணவு யாசகம் பெறுவதற்கு ஒருகிண்ணம், ஜைன துறவிகள் உட்காரும் முன் பூச்சிகளை தள்ளி விடுவதற்காக வைத்திருக்கும் ரஜோஹரன் எனப்படும் வெள்ளை துடைப்பம் ஆகியவற்றை மட்டுமே இவர்கள் வைத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    அபரிமிதமான செல்வத்திற்கு பெயர் பெற்ற பண்டாரி குடும்பத்தின் இந்த முடிவு குஜராத் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு முன் பல கோடி ரூபாய் சொத்துகளை துறந்து சமண துறவியாக மாறிய பவாராலால் ஜெயின் போன்ற சிலரது வரிசையில் இத்தம்பதியரும் இணைந்துள்ளனர். இந்தியாவில் நுண்ணீர் பாசன முறைக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் பவாராலால் ஜெயின் ஆவார்.

    குஜராத்தில் கடந்த ஆண்டு வைர வியாபாரி ஒருவரும் அவரது மனைவியும் துறவறம் பூண்டனர். தங்களின் 12 வயது மகன் துறவறம் பூண்ட 5 ஆண்டுகளுக்கு பின்னர் இவர்களும் அதே பயணத்தை தொடங்கினர். மத்திய பிரதேசத்தில் கடந்த 2017-ல் ஒரு பணக்கார தம்பதியர் தங்களின் 3 வயது மகள் மற்றும் ரூ.100 கோடி சொத்துகளை துறந்து, துறவறம் பூண்டது தலைப்புச் செய்தியானது.

    சுமித் ரத்தோர் (35), அனாமிகா (34) ஆகிய இருவரும் தங்கள் மகளை அவளின் தாத்தா-பாட்டியிடம் ஒப்படைத்துவிட்டு, துறவற வாழ்க்கையை தொடங்கினர். இவர்கள் துறவு வாழ்க்கையை தொடங்குவதற்கு முதல்நாள் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தலையிட்டது. இவர்களின் குழந்தையின் எதிர்கால பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்குமாறு சிவில் நிர்வாகம் மற்றும் காவல்துறையை கேட்டுக்கொண்டது.

    • ரூ 2 லட்சம் மதிப்புள்ள பையை பெண் ஆன்மிக சொற்பொழிவாளர் ஜெய கிஷோரி வைத்திருந்தது சர்ச்சையானது.
    • கிருஷ்ணர் கூட அர்ஜுனிடம் எல்லாவற்றையும் துறந்துவிட்டு சந்நியாசி ஆக வேண்டும் என்று சொல்லவில்லை.

    29 வயதான பெண் ஆன்மிக சொற்பொழிவாளர் ஜெய கிஷோரி விமான நிலையத்தில் இருக்கும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில் அவர் வைத்திருக்கும் ஒரு பையின் விலை 2 லட்சம் என்று நெட்டிசன்கள் விமர்சித்தனர்.

    உலகப் பற்றுகளைத் துறக்க வேண்டும், தோல் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று சொற்பொழிவாற்றும் ஜெய கிஷோரி, தோல் பொருட்களால் உருவாக்கப்பட்ட விலை உயர்ந்த பையை பயன்படுத்தியுள்ளார் என்று நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்தனர்.

    நெட்டிசன்களின் இந்த விமர்சனத்திற்கு பதில் அளித்த ஜெய கிஷோரி, "நான் ஒன்றும் துறவி இல்லை நானும் மற்றவர்களைப் போல சாதாரணமான நபர் தான். நான் ஒரு சாதாரண பெண், நான் ஒரு சாதாரண வீட்டில் வாழ்கிறேன், நான் என் குடும்பத்துடன் வாழ்கிறேன்.. நான் இளைஞர்களிடம் இதையே சொல்கிறேன், நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும். உங்கள் குடும்பத்தை நல்வழிப்படுத்துங்கள் மற்றும் உங்கள் கனவுகளை நிறைவேற்றுங்கள்

    நான் பயன்படுத்திய பை தோல் பொருட்களால் செய்யப்பட்டது இல்லை. உலக ஆசையை கைவிடும்படி நான் ஒருபோதும் மக்களிடம் கூறவில்லை. பகவான் கிருஷ்ணர் கூட அர்ஜுனிடம் எல்லாவற்றையும் துறந்துவிட்டு சந்நியாசி ஆக வேண்டும் என்று சொல்லவில்லை. அவர் உங்கள் 'கர்மாவை' தொடர்ந்து செய்யும்படி சொல்கிறார்..

    ஆன்மிகம் என்பது உங்களுக்கு எதுவும் சொந்தமில்லை என்று அர்த்தமல்ல. எதுவுமே உங்களுக்கு சொந்தமில்லை என்பதே இதன் உண்மையான அர்த்தம். உங்கள் மீதும் உங்கள் மனம் மீதும் எதற்கும் அதிகாரம் இல்லை. அதுதான் உண்மையான ஆன்மீகம்" என்று தெரிவித்தார்.

    • கடந்த 2011-ம் ஆண்டு மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா தாசில்தாராக பணியாற்றினார்.
    • 12 ஆண்டுகளாக அரசு பணியாற்றி வந்த அவர் தற்போது கூடுதல் கலெக்டராக உள்ள நிலையில், துறவறம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

    அரசு வேலை என்பது படித்தவர்களிடம் பெரிய கனவாகவே இருந்து வருகிறது. அப்படி இருக்க கிடைத்த வேலையை அதுவும் கலெக்டர் வேலையை ஒருவர் உதறிவிட்டு துறவியாகியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். அப்படி அரசு பதவியை துறந்து செல்ல இருப்பவர் நாகராஜ். கர்நாடக அரசு அதிகாரியான இவர் தற்போது மண்டியா மாவட்ட கூடுதல் கலெக்டராக பணியாற்றி வருகிறார்.

    இவர் கடந்த 2011-ம் ஆண்டு மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா தாசில்தாராக பணியாற்றினார். அந்த சமயத்திலேயே அவர் நாகமங்களாவில் உள்ள புகழ்பெற்ற ஆதிசுஞ்சனகிரி மடத்தில் துறவறம் மேற்கொள்ள தீட்சை பெற்றார். இதனால் அவருக்கு நிஷ்சலானந்தநாத் சுவாமிஜி என பெயர் சூட்டப்பட்டது.

    இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை சமாதானப்படுத்தி, சாமியாராக போக நினைத்த முடிவை கைவிட வைத்தனர். இருப்பினும் துறவறம் மேற்கொள்ள வேண்டும் என வேட்கை மட்டும் அவருக்கு குறைந்தபாடில்லை. அதை யாரிடமும் வெளிப்படுத்தாமல் 12 ஆண்டுகளாக அரசு பணியாற்றி வந்த அவர் தற்போது கூடுதல் கலெக்டராக உள்ள நிலையில், துறவறம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

    இதற்காக அவர் தனது கூடுதல் கலெக்டர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பொதுவாழ்வுக்கு குட்பை சொல்லிவிட்டு சாமியாராக மாற உள்ளார். இவர் ஒக்கலிக மகா சமஸ்தான மடத்தின் மடாதிபதி சந்திரசேகரநாத் சுவாமியின் சீடர் ஆவார்.

    துமகூரு மாவட்டத்தில் உள்ள ஒன்னஹள்ளி கிராமத்தை சேர்ந்த நாகராஜ், விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் ஆவர். நுண்கடன் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். பாலகங்காதர்நாத் சுவாமியிடம் கல்வி பயின்றார். இதனால் அவருக்கு ஆன்மிகம் மீது அதிக நாட்டம் ஏற்பட காரணமாகிவிட்டது.

    முதலில் கோர்ட்டில் எழுத்தராக பணியாற்றிய அவர் கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, ஹாசன், கே.ஆர்.பேட்டை, நாகமங்களா பகுதிகளில் தாசில்தாராக பணியாற்றி வந்துள்ளார். மக்கள் மத்தியில் நேர்மையான, திறமையான அதிகாரி என்ற பெயரும் நாகராஜுக்கு உள்ளது. இந்த நிலையில் அவர் அரசு பதவியை உதறிதள்ளிவிட்டு துறவறம் செல்ல இருப்பது மக்கள் மத்தியில் ஆச்சரியமாக பேசப்பட்டு வருகிறது.

    கர்நாடகத்தை பொறுத்தவரை கர்நாடக அரசு அதிகாரி ஒருவருக்கு அடிப்படை சம்பளம் ரூ.1.20 லட்சம் முதல் ரூ.1½ லட்சம் ஆகும். இதர படிகள் சேர்த்து மொத்தம் ரூ.2.20 லட்சம் முதல் ரூ.2½ லட்சம் வரை ஒரு அதிகாரிக்கு சம்பளம் கிடைக்கும். அதன்படி நாகராஜ் சுமார் ரூ.2¼ லட்சம் ஊதியத்தை உதறிவிட்டு சாமியாராக செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×