search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாண்டுக முனிவர் சாபவிமோசன வரலாறு"

    • அழகர் மலை உச்சியில் வற்றாத நூபுர கங்கை நதி ஓடுகிறது.
    • துர்வாச முனிவர் சுதபஸ் முனிவரை மண்டூகம் ஆகும்படி சாபம் விடுத்தார்.

    சித்திரை திருவிழாவையொட்டி அழகர் கோவிலில் இருந்து மதுரை நோக்கி புறப்படும் கள்ளழகர், மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை காண மட்டும் இங்கு வருவதில்லை. மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிப்பதற்காகவும் வருகிறார் என்கிறது புராண வரலாறு.

    அதாவது, அழகர் மலை உச்சியில் வற்றாத நூபுர கங்கை நதி ஓடுகிறது. இதில் ஒரு நாள் சுதபஸ் என்ற முனிவர், தண்ணீரில் மூழ்கி நீராடி மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது பிரபல முனிவரான துர்வாச முனிவர் தனது சீடர்களுடன் நூபுர கங்கைக்கு வந்தார். அவரை சுதபஸ் முனிவர் கவனிக்கவில்லை. நீண்ட நேரம் கழித்து பூஜைகளை செய்த பின்னரே, துர்வாச முனிவரை வரவேற்றார்.

    இதனால் துர்வாச முனிவர் கோபமடைந்து சுதபஸ் முனிவரை மண்டூகம் (தவளை) ஆகும்படி சாபம் விடுத்தார். அதிர்ச்சி அடைந்த சுதபஸ் முனிவர், தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார்.

    அதற்கு துர்வாச முனிவர், சித்திரை மாதம் பவுர்ணமிக்கு மறுநாள் கிருஷ்ணபட்ஷ பிரதமை திதியில் கள்ளழகராக சுந்தரராஜ பெருமாள் வந்து சாப விமோசனம் அளிப்பார் என்று கூறிவிட்டு சென்றார்.

    சாபத்தினால் தவளையாக மாறிய சுதபஸ் முனிவர், சுந்தரராஜ பெருமாளை நினைத்து தவம் இருந்தார். தவத்தினால் மனம் இறங்கிய சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் கோலத்தில் மதுரை வந்து மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்கினார் என வரலாறு கூறுகிறது.

    இந்த சம்பவத்தை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் வைகை ஆற்றில் அமைந்து உள்ள தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன்படி நேற்று நடந்த நிகழ்ச்சியில் மண்டூக முனிவருக்கு கள்ளழகர் சாப விமோசனம் அளித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

     மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சியில் நாரை பறக்கவிடுவது வழக்கம். இதற்காக உயிருடன் நாரையை பிடித்து வருவார்கள். இதை பல தலைமுறையாக தேனூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர்தான் செய்து வருகின்றனர். இதுகுறித்து தற்போது நாரை பிடித்து வந்த மணிமாறன் கூறியதாவது:-

    மதுரை தேனூரை சேர்ந்த எங்கள் குடும்பத்தினர்தான் பல தலைமுறையாக மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சியின்போது பறக்க விடுவதற்காக நாரை பிடித்து வந்து கொடுக்கிறோம். நாரையை பிடிப்பதற்காக கடும் சிரமப்படுவோம்.

    இதற்காக நிலத்தில் விவசாயம் செய்வது போல தண்ணீர் நிரப்பி வைத்து, உழுத நிலமாக மாற்றுவோம். அங்கு இரை தேடி வரும் நாரைகளை பிடிப்போம்.

    பிடிபட்ட உடன் நாரைகள், எந்த உணவை கொடுத்தாலும் உண்ணாது. அவற்றை எச்சரிக்கையுடன் பாதுகாக்க வேண்டும். சாப விமோசன நிகழ்ச்சி முடிந்த உடன், நாங்கள்தான் நாரையை பறக்க விடுவோம். நாரை எந்த திசையை நோக்கி பறக்கிறதோ, அந்த பகுதி இந்த ஆண்டு செழிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை. இந்த வேலையை தலைமுறை, தலைமுறையாக செய்வது மகிழ்ச்சியை தருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×