என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விக்கிரவாண்டி இடைத்தேர்தல்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தற்போது இந்தியா முழுவதும் நடத்தப்பட்டு வரும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
    • கடைசி கட்ட பாராளுமன்ற தேர்தல் ஜூன் 1-ந்தேதி நடைபெறுகிறது.

    சென்னை:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 6-ந்தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து 8-ந்தேதி விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

    பொதுவாகவே ஒரு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. உயிரிழந்தாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும்.

    தற்போது இந்தியா முழுவதும் நடத்தப்பட்டு வரும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் ஒரே கட்டமாக கடந்த 19-ந்தேதி தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    இந்த நிலையில் கடைசி கட்ட பாராளுமன்ற தேர்தல் ஜூன் 1-ந்தேதி நடைபெறுகிறது.

    இந்த இடைப்பட்ட காலத்தில் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தி விடலாம் என இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    எனவே எப்போது தேர்தல் நடத்தலாம் என்பது தொடர்பான அறிவிப்பை இந்த வாரத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட வாய்ப்பு உள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • பாராளுமன்ற தோ்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவை எதிா்கொண்ட தமிழ்நாட்டில் தோ்தலுக்கான ஆயத்தப்பணிகள் மற்றும் நடத்தை விதிகள் தற்போதும் அமலில் உள்ளது.
    • இடைத்தோ்தல் நடத்த தங்களுடைய நிா்வாகம் தயார் நிலையில் இருப்பதாக தோ்தல் ஆணையத்திடம் ஏற்கனவே தெரிவித்துள்ளனா்.

    புதுடெல்லி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. புகழேந்தி, உடல் நலக்குறைவால் கடந்த 6-ந்தேதி காலமானாா். இதையடுத்து அத்தொகுதி காலியானதாக ஏப்ரல் 8-ந்தேதி அறிவிக்கப்பட்டது.

    தோ்தல் விதிகளின்படி, ஒரு சட்டப்பேரவை அல்லது பாராளுமன்ற தொகுதி அதன் உறுப்பினரின் உயிரிழப்பாலோ, ராஜினாமா அல்லது வேறு காரணங்களுக்காகவோ காலியானதாக அறிவிக்கப்பட்டால், அத்தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தோ்தல் நடத்தப்படவேண்டும்.

    இந்த நிலையில் தற்போது பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடத்தப்படும் தோ்தலில் 6 கட்டங்களுக்கான தோ்தல் அறிவிக்கை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 6 கட்ட ஓட்டுப்பதிவுக்கான தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் 2 கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்து விட்டது.

    அடுத்து 7-ம் கட்ட தேர்தலுக்கான அறிவிக்கையை தோ்தல் ஆணையம் வரும் மே 7-ந்தேதி வெளியிட உள்ளது. அப்போது விக்கிரவாண்டி தொகுதிக்கும் சேர்த்து 7-ம் கட்ட தோ்தல் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

    7-ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு ஜூன் 1-ந்தேதி நடைபெற உள்ளது. அன்று விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தோ்தல் நடத்தப்படுவதாக இருந்தால் அதற்கான அறிவிக்கையை வருகிற 7-ந்தேதியன்று தோ்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.

    பாராளுமன்ற தோ்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவை எதிா்கொண்ட தமிழ்நாட்டில் தோ்தலுக்கான ஆயத்தப்பணிகள் மற்றும் நடத்தை விதிகள் தற்போதும் அமலில் உள்ளது.

    இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கும் சோ்த்து இடைத்தோ்தலை நடத்தினால் தனியாக அத்தொகுதிக்கு ஆகும் முன்னேற்பாடுகள், செலவினம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை குறைக்கலாம் என்று ஆணையம் கருதுகிறது.

    இந்த விவகாரத்தில் மாவட்ட தோ்தல் அதிகாரி, மாநில தோ்தல் அதிகாரி ஆகியோா் இடைத்தோ்தல் நடத்த தங்களுடைய நிா்வாகம் தயார் நிலையில் இருப்பதாக தோ்தல் ஆணையத்திடம் ஏற்கனவே தெரிவித்துள்ளனா்.

    இதையடுத்து ஜூன் 1-ந்தேதி இடைத்தோ்தல் நடத்துவதற்கான சாத்தியத்தை தலைமைத் தோ்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

    • எந்த நேரத்திலும் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
    • பஞ்சாப், உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 54 தொகுதிகளுக்கு ஜூன் 1-ந்தேதி 7-ம் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி (தி.மு.க.) மரணம் அடைந்ததை தொடர்ந்து இந்த தொகுதி காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் 7-வது கட்டமாக ஜூன் 1-ந்தேதி நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கும் தேர்தல் நடத்தினால் அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளது.

    அதன் அடிப்படையில் எந்த நேரத்திலும் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்துவதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

    பஞ்சாப், உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 54 தொகுதிகளுக்கு ஜூன் 1-ந்தேதி 7-ம் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 7ம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்று தொடங்குவது தொடர்பாக தேர்தல் அறிவிப்பாணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லை.

    • விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
    • தேர்தல் முடிந்து ஜூலை 13ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.,வாக, தி.மு.க.,வை சேர்ந்த புகழேந்தி இருந்தார். இவர் உடல் நலக்குறைவால் ஏப்ரல் 6-ந் தேதி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடந்தது. பாராளுமன்ற தேர்தல் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் நடந்த இறுதிக் கட்ட தேர்தலின் போது, விக்கிரவாண்டி தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

    ஆனால் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே, ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் தேர்தல் நடத்தப்படலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 14ஆம் தேதி தொடங்கும் என்றும், தேர்தல் முடிந்து ஜூலை 13ஆம் தேதியன்று வாக்குகள் எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    • தி.மு.க. வேட்பாளர் யார் என்பது இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • விக்கிரவாண்டி தேர்தலில் மீண்டும் 4 முனை போட்டி ஏற்படும் என தெரிகிறது.

    சென்னை:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக தி.மு.க.வை சேர்ந்த புகழேந்தி இருந்தார். இவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி மரணம் அடைந்தார்.

    இதனால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

    அந்த சமயத்தில் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியிட்டது.

    தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 19-ந்தேதி பாராளுமன்ற முதல் கட்ட தேர்தல் நடந்தது. அடுத்த 6 கட்ட தேர்தல் பல்வேறு கட்டங்களாக மற்ற மாநிலங்களில் நடந்தது. இதனால் 7-வது கட்டமாக இறுதி கட்ட தேர்தலின்போது விக்கிரவாண்டி தொகுதிக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.


    இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10- ந் தேதி (அடுத்த மாதம்) நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேபோல் தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது.

    அதில் ஜூன் 14-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என்றும், ஜூன் 21-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும் அட்டவணை வெளியிட்டுள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 24-ந் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி 26-ந் தேதி (புதன்கிழமை) என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜூலை 10-ந் தேதி வாக்குப்பதிவு என்றும் வாக்கு எண்ணிக்கை ஜூலை 13-ந் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    ஜூலை 15-ந் தேதி தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வரும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இந்த முறை மீண்டும் தி.மு.க. போட்டியிடுகிறது. தி.மு.க. வேட்பாளர் யார் என்பது இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த 2021 தேர்தலின் போது தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி 93,730 ஓட்டுகள் வாங்கி இருந்தார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் நின்ற முத்தமிழ்ச்செல்வன் 84,157 வாக்குகள் பெற்றார். 9,573 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி வெற்றி பெற்றிருந்தார். இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஷீபா ஆஸ்மி 8,216 வாக்குகளும், அ.ம.மு.க. வேட்பாளர் அய்யனார் 3,053 வாக்குகளும் பெற்றிருந்தனர்.


    அப்போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பா.ஜனதா இணைந்திருந்தது. ஆனால் இப்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகி விட்டது. இனி வரும் தேர்தலிலும் பா.ஜனதாவுடன் கூட்டணி கிடையாது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் பா.ம.க. நீடித்து தேர்தலை சந்தித்தது.

    இந்த கூட்டணி விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. போட்டியிடுவது தற்போது உறுதியாகி உள்ளது. இதில் தி.மு.க. நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை இன்று அறிவித்துள்ளார்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறுகையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிட விரும்புவதாக தெரிவித்துள்ளார். எனவே பா.ம.க.வும் இந்த தேர்தலில் வேட்பாளரை நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சியும் களத்தில் இறங்க உள்ளது. எனவே விக்கிரவாண்டி தேர்தலில் மீண்டும் 4 முனை போட்டி ஏற்படும் என தெரிகிறது.

    விக்கிரவாண்டி தேர்தலோடு சேர்த்து 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவும் ஜூலை 10-ந் தேதி நடக்கிறது.

    மேற்கு வங்காளத்தில் 4 தொகுதிக்கும், இமாச்சலப்பிரதேசம்-3, உத்தரகாண்ட்-2, பீகார், மத்திய பிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் தலா 1 இடங்களிலும் தேர்தல் நடக்கிறது.

    • விழுப்புரம் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளை மாற்றம் அதன் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
    • மாவட்ட நிர்வாகிகள் இவர்களுடன் இணைந்து பணியாற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி மரணம் அடைந்ததால் அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

    தேர்தலுக்கு நாள் நெருங்கி விட்ட காரணத்தால் இந்த தேர்தலில் போட்டியிட தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன.

    இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளை மாற்றம் அதன் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி,

    * விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராக கௌதம்சிகாமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

    * விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகச் செயலாளராக பணியாற்றி வரும் செஞ்சி மஞ்தான் அப்பொறுப்பில் இருந்து விடுவித்து அவருக்கு பதிலாக ப.சேகர் விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

    எனவே, ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவர்களுடன் இணைந்து பணியாற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    • வேட்பாளர்களை தேர்வு பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டன.
    • இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி மரணம் அடைந்ததால் அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

    இதையடுத்து வேட்பாளர்களை தேர்வு பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டன. இதனிடையே, இந்த இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

    இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுவார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    அன்னியூர் சிவா தி.மு.க.வின் விவசாய தொழிலாளர் அணியின் செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தி.மு.க. சார்பில் அக்கட்சியின் விவசாய தொழிலாளர் அணியின் மாநில செயலாளர் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார்.
    • அமைச்சர்கள் பொன்முடி, ஜெகத்ரட்சகன் ஆகியோர் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    சென்னை :

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. வேட்பு மனு தாக்கல் தாக்கல் நாளை தொடங்குகிறது. வேட்பு மனுதாக்கலுக்கான கடைசி நாள் ஜூன் 21-ந்தேதி ஆகும். மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24-ம் தேதி நடைபெறுகிறது.

    இதனால் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றன. இருப்பினும், இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் விவசாய தொழிலாளர் அணியின் மாநில செயலாளர் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலில் அறிவித்தார். இதை தொடர்ந்து தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளது தி.மு.க.

    இதனைத் தொடர்ந்து தி.மு.க. சார்பில் 11 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    வருகிற ஜூலை-10 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், தலைமைக் கழகத்துடன் தொடர்பு கொண்டு ஆவன செய்திடவும் தொகுதிகளில் நடைபெற வேண்டிய பணிகளைத் தலைமைக் கழகம் சார்பில் கவனித்திடவும் "தேர்தல் பணிக்குழு" பின்வருமாறு நியமிக்கப்படுகிறது.

    அதன்படி அமைச்சர்கள் பொன்முடி, ஜெகத்ரட்சகன் ஆகியோர் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒன்றிய வாரியாக அமைச்சர்கள் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, சக்கரபாணி, தா.மோ. அன்பசரசன், எஸ்.எஸ் சிவசங்கர், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி.கணேசன், ஆர். லட்சுமணன் எம்.எல்.ஏ ஆகியோர் அடங்கிய தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் நாளை மாலை விக்கிரவாண்டியில் உள்ள "ஜெயராம் திருமண மண்டபத்தில்" நடைபெறவுள்ள தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் தேர்தல் பணிக்குழுவினர் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பர் என கூறப்பட்டுள்ளது.


    • தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி நடக்கிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13-ந்தேதி எண்ணப்படுகிறது. இதையொட்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 21-ந்தேதி கடைசி நாளாகும். 24-ந்தேதியன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 26-ந்தேதி (புதன்கிழமை) மாலைக்குள் வேட்பு மனுவை திரும்பப்பெறலாம்.

    இத்தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களுடைய வேட்பு மனுவை விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்யலாம் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    இதையொட்டி விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அங்குள்ள தனி அறையில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அமருவதற்கான இருக்கைகள் மற்றும் வேட்பு மனுதாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள், அவர்களுடைய வேட்பு மனுவை முன்மொழிய வருகை தருபவர்கள் அமருவதற்கான இருக்கைகள் போடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வேட்பு மனுதாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் மற்றும் அவருடன் வருபவர்கள் தேர்தல் விதிகளை முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்கும் வகையில் தாலுகா அலுவல கத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியுள்ள நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் பலத்தை காட்ட வேண்டிய கட்டாயம் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டு உள்ளது.
    • இன்று அல்லது நாளை வேட்பாளர் யார்? என்பதை தேர்வு செய்து அறிவிக்க அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி மரணமடைந்ததை தொடர்ந்து அடுத்த மாதம் 10-ந்தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலை சந்திக்க ஆளும் கட்சியான தி.மு.க. முதல் ஆளாக களம் இறங்கி உள்ளது. தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டு உள்ளார்.

    தி.மு.க.வுக்கு போட்டியாக அ.தி.மு.க., பா.ம.க. சார்பிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளனர். நாம் தமிழர் கட்சியும் போட்டியிட தயாராகி வருகிறது. தி.மு.க. சார்பில் முன்கூட்டியே வேட்பாளர் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் தேர்வும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி, விழுப்புரம் மாவட்ட செயலாளரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகத்துடன் ஆலோசித்து வருகிறார்.

    இருவரும் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது பற்றி விவாதித்துள்ளனர்.

    விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவதற்கு 7 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். 2019-ம் ஆண்டு விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த முன்னாள் எம்.எல்.ஏ. முத்தமிழ் செல்வன் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளார்.

    கடந்த சட்டமன்ற தேர்தலில் இவரே போட்டியிட்டிருந்தார். இதனால் இவருக்கே போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    காணை ஒன்றிய செயலாளர் ராஜா, விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர்கள் பன்னீர், முகுந்தன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் லட்சுமி நாராயணன், தொழில் அதிபர் டி.கே.சுப்பராயன், விக்கிரவாண்டி நகர செயலாளர் பூரண ராவ் ஆகியோரும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கேட்டுள்ளனர்.

    இதனால் விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் யாரை வேட்பாளராக தேர்வு செய்வது என்பதில் கடும் இழுபறி நீடித்து வருகிறது. இருப்பினும் இன்று அல்லது நாளை வேட்பாளர் யார்? என்பதை தேர்வு செய்து அறிவிக்க அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது. எனவே அ.தி.மு.க. வேட்பாளரின் பெயர் விவரம் இன்று மாலையிலோ நாளை காலையிலோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியுள்ள நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் பலத்தை காட்ட வேண்டிய கட்டாயம் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே அவர் தொகுதி முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டவும் திட்டமிட்டுள்ளார்.

    • வேட்பாளர் தேர்வு தொடர்பாக அன்புமணி, புகழேந்தி உள்பட மூன்று பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது.
    • யாரை வேட்பாளராக தேர்வு செய்வது என்பதற்கான அதிகாரத்தை ராமதாசிடம் நிர்வாக குழுவினர் வழங்கி உள்ளனர்.

    சென்னை:

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடும் என்று டாக்டர் ராமதாஸ் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

    கட்சியில் யாரை வேட்பாளராக அறிவிப்பது, கூட்டணி கட்சியான பா.ஜ.க. ஆதரவை பெறுவது போன்ற விவகாரங்களை கட்சியின் நிர்வாக குழுவினருடன் டாக்டர் ராமதாஸ் ஆலோசித்தார்.

    தைலாபுரம் தோட்டத்தில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் தீரன், வடிவேல் ராவணன், பு.த.அருள்மொழி, தர்மபுரி எம்.எல்.ஏ.வெங்கடேஷ், திருக்கச்சூர் ஆறுமுகம், ஜெய பாஸ்கர், வக்கீல் பானு, டாக்டர் செந்தில் உள்பட நிர்வாக குழு உறுப்பினர்கள் 18 பேர் கலந்து கொண்டனர்.

    வேட்பாளர் தேர்வு தொடர்பாக அன்புமணி, புகழேந்தி உள்பட மூன்று பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. இவர்களில் யாரை வேட்பாளராக தேர்வு செய்வது என்பதற்கான அதிகாரத்தை டாக்டர் ராமதாசிடம் நிர்வாக குழுவினர் வழங்கி உள்ளனர்.

    • அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் இத்தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ. முத்தமிழ்செல்வன் உள்பட 7 பேர் சீட் கேட்கின்றனர்.
    • தி.மு.க.வை எதிர்த்து பா.ம.க. சார்பில் கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட சிந்தாமணி புகழேந்தியை நிறுத்த முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தல் ஜூலை 10-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது.

    இடைத்தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவாவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும், மறைந்த புகழேந்தி எம்.எல்.ஏ., வகித்த மாவட்ட செயலாளர் பதவிக்கு முன்னாள் எம்.பி. பொன். கவுதமசிகாமணி அறிவிக்கப்பட்டார். அதோடு அமைச்சர் பொன்முடி, ஜெகத்ரட்சகன் எம்.பி. தலைமையில் 7 அமைச்சர்களை கொண்ட தேர்தல் பணிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தி.மு.க.வினர் விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பணிகளை உற்சாகமாக தொடங்கி பணியாற்றி வருகின்றனர்.

    இதற்கிடையே அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் இத்தொகுதியில் போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ. முத்தமிழ்செல்வன் உள்பட 7 பேர் சீட் கேட்கின்றனர். இதனால் வேட்பாளரை இறுதி செய்வதில் அ.தி.மு.க. தலைமையில் இழுபறி நீடிக்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படுமென முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தெரிவித்தார்.

    இந்த நிலையில் பா.ம.க.வின் உயர்மட்டக்குழு கூட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் அண்புமணி ராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே மணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், மாநில பொறுளாளர் திலகபாமா, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, சமூக நீதி பேரவை தலைவர் பாலு, பேராசிரியர் தீரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க.வை எதிர்த்து பா.ம.க. சார்பில் கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட சிந்தாமணி புகழேந்தியை நிறுத்த முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருடன் பேசி முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. அதே சமயம், விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., புகழேந்தி மறைந்தவுடன், இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

    தற்போது, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு 3 தினங்களாகியும், பா.ஜ.க. தனது நிலைப்பாட்டை வெளியிடாமலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த கட்சி போட்டியிட உள்ளது என்று அறிவிக்காமலும் மவுனம் காத்து வருகிறது. இதனால் அந்த கூட்டணியில் உள்ள பா.ம.க., தனது வேட்பாளரை நிறுத்த தயாராக உள்ள போதும், தேர்தல் பணிகளை தொடங்க தயக்கம் காட்டி வருகிறது.

    ×