search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமுடி சேதம்"

    • இளம்பெண்கள் ஹேர் கலரிங் செய்வதில் நாட்டமாக இருக்கிறார்கள்.
    • இளம் வயதினர் ஸ்டைலாகவும், அல்ட்ரா மாடர்னாகவும் காட்டுவதாக எண்ணுகிறார்கள்.

    அழகு நிலையங்களுக்கு அடிக்கடி அழக செல்வதில் விருப்பமுடைய இன்றைய இளம்பெண்களில் பலர், 'ஹேர் கலரிங்கிலும் மிகவும் நாட்டமாக இருக்கிறார்கள். இது தங்களை ஸ்டைலாகவும், அல்ட்ரா மாடர்ன் ஆகவும் காட்டுவதாக எண்ணுகிறார்கள். ஆனால் இவ்வாறு 'ஹேர் கலரிங்' செய்வது என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்? அதன் விவரம் வருமாறு...

    முடியின் வேர்களில் சேதம்:

    ஹேர் கலர்களில் அமோனியா, ஹைட்ரஜன் பெராக்சைடு போன்ற ரசாயனப்பொருட்கள் உள்ளன. இவைமுடியில் முழுமையாக ஊடுருவி நிறத்தை தக்கவைக்க உதவுகின்றன. இவை மட்டுமின்றி மேலும் பல வேதிப்பொருட்களை சேர்த்து தயாரிக்கப்பட்ட ஹேர் கலர்களை தொடர்ந்து நீங்கள் பயன்படுத்தும்போது, முடியில் இருக்கும் இயற்கையான எண்ணெய்ப் பசை முற்றிலும் அகன்றுவிடும். வறட்சி ஏற்படுதல், உடைதல். உதிர்ந்து போதல், முடியின் வேர்களில் சேதம் ஏற்படுவது போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படலாம்.

    ஒவ்வாமை:

    ரசாயனம் கலந்த இந்த ஹேர் கலர்களை தொடர்ந்து பயன்படுத்தும் போது உச்சந்தலையில் எரிச்சல் மற்றும் ஒவ்வாமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் வரலாம். சில நேரங்களில் படை நோய், கொப்புனங்கள் உள்ளிட்ட பல உபாதைகளையும் உண்டாக்கக்கூடும்.

    புற்றுநோய் அபாயம்:

    ஹேர் கலர்களில் காணப்படும் வேதி மூலப்பொருட்கள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இது வரையிலான ஆய்வுகளின் அடிப்படையில், ஹேர் கலர்களில் இருக்கும் ரசாயனத்தின் விளைவாக, சிறுநீர்ப்பை புற்றுநோய் உள்ளிட்ட சில வகை புற்றுநோய்கள் வர வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

    உளவியல்ரீதியான பிரச்சினைகள்:

    ஹேர் கலரிங் என்பது சிலருக்கு ஸ்டைல் என்றாலும் பலர் வெள்ளை முடியை கருப்பாக மாற்றவும், சிலர் தங்களின் தோற்றத்தை அழகாக காண்பிக்கவும் இதை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவர்களின் நம்பிக்கையை ஹேர் கலரிங் பூர்த்தி செய்யவில்லை என்றாலோ, அல்லது, இந்த ஹேர் கலர் செய்த காரணத்தால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட்டாலோ அவர்கள் மனதளவில் தளர்ச்சி அடைவதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.அவர்கள் சகமனிதர்களுடன் இணைந்து இருக்க, பழக, தயக்கம் காண்பிக்கும் நிலை ஏற்படுகிறது.

    இவை எல்லாவற்றையும் தாண்டி, ஓரிரு முறை ஆசைக்காக ஹேர் கலரிங் செய்து பார்க்கிறேனே என்று கூறுபவர்கள், கீழ்க்கண்ட விஷயங்களை பின்பற்றுங்கள். ஹேர் கலர் செய்வதற்கு முன்பு முதலில் பேட்ச் டெஸ்ட் செய்துகொள்ளுங்கள்.

    * ஹேர் கலர் பயன்பாடு பற்றிய வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றுங்கள்.

    * தலைமுடி இயற்கையான வகையில் ஊட்டச்சத்தைப் பெற தேவையானவற்றை அடிக்கடி செய்யுங்கள்.

    * ஹேர் கலரிங் செய்யும்போது நீண்ட இடைவெளி விடுவதை கவனத்தில் கொள்ளுங்கள்.

    இவற்றை முழுமையாகப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை மட்டும் அல்ல, உடல் மற்றும் உளவியல் நலத்தையும் காத்துக் கொள்ளலாம் என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது

    ×