என் மலர்
நீங்கள் தேடியது "பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு"
- எச்.டி.ரேவண்ணாவுக்கு 3 நாள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவு.
- புகார் அளிப்பவர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என அறிவிப்பு.
பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு அமைப்பு புகார் எண்ணை அறிவித்துள்ளது.
அதன்படி, ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க 6360938947 என்கிற எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புகார் அளிப்பவர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனவும் சிறப்பு புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆபாச வீடியோ, ஆள் கடத்தல் விவகாரத்தில் கைதாகி உள்ள எச்.டி.ரேவண்ணாவுக்கு 3 நாள் போலீஸ் காவல் வைக்கப்பட்டுள்ளது.
கோரமங்களா பகுதியில் உள்ள நீதிபதி வீட்டில், ரேவண்ணாவை ஆஜர்படுத்திய நிலையில், போலீஸ் காவல் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
- மே 31 அன்று பெங்களூரு விமானநிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்தனர்.
- மக்களவை தேர்தலில் பிரஜ்வல் ரேவண்ணா காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணா 2019 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.
2024 ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் பாஜகவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்தது.
இதனையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா பாஜக கூட்டணியின் ஹாசன் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பிரஜ்வல் ரேவண்ணாவிற்காக பிரதமர் மோடி நேரில் வந்து பிரசாரம் மேற்கொண்டார்.
ஆனால் மக்களவை தேர்தல் நெருங்கிய சமயத்தில் பல்வேறு பெண்களுக்கு பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் துன்புறுத்தல் அளித்த 2,976 ஆபாச வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வீடியோ வெளியானதைத் தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணா மீது பாதிக்கப்பட்டபெண்கள் கொடுத்த புகாரின் பேரில் 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
வீடியோ வெளியானதும் தூதரக பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பியோடினார். அந்த சமயத்தில் அவரை இந்தியா கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதலமைச்சர் சித்தராமையா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிரிஜ்வல் ரேவண்ணா எங்கிருந்தாலும் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என அவரது தாத்தாவும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா எச்சரிக்கை விடுத்தார்.
இதுதொடர்பாக தேவகவுடா வெளியிட்ட அறிக்கையில், "எனது பொறுமைக்கும் எல்லை உண்டு. சட்ட ரீதியிலான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும். பிரஜ்வல் ரேவண்ணா மீது தவறு இருப்பது உறுதியானால் கடும் நடவடிக்கை எடுக்க தயங்க வேண்டாம். பொதுமக்கள் என்னையும், என் குடும்பத்தையும் திட்டித் தீர்க்கிறார்கள். எல்லாம் என் கவனத்திற்கு வந்தது. எனவே எங்கிருந்தாலும் நாடு திரும்பவேண்டும்" என்று கூறியிருந்தார்.

பிரஜ்வல் ரேவண்ணாவை கைதுசெய்ய சி.பி.ஐ. புளூகார்னர் நோட்டீஸ் அனுப்பியது. அதேபோல், அவரை கைதுசெய்ய சிறப்பு கோர்ட்டு கைது வாரண்ட் பிறப்பித்தது.
இதற்கிடையே மே மாதம் 27-ம் தேதி பிரஜ்வல் ரேவண்ணா பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் ஆபாச வீடியோ விவகாரத்தில் தன்னை சிலர் சதிசெய்து சிக்க வைத்துள்ளனர். என் மீதான புகாருக்காக தேவகவுடா, குமாரசாமி, எனது பெற்றோர், கட்சி தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மே 31-ம் தேதி பெங்களூரு வந்து சிறப்பு விசாரணை குழு முன்பு ஆஜராகி முழு ஒத்துழைப்பு வழங்குவேன் என தெரிவித்தார்.
அதன்படி மே 31 அன்று பெங்களூரு விமானநிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணா வந்திறங்கியதும் சிறப்புப் புலனாய்வு குழுவினர் அவரை கைது செய்தனர்.

இதனிடையே "எனது மகன் தவறு செய்திருந்தால் அவனை தூக்கில் போடுங்கள், நான் அதற்கு மறுப்பு தெரிவிக்கப் போவதில்லை" என்று பிரஜ்வல் ரேவண்ணாவின் தந்தை எச்.டி.ரேவண்ணா கர்நாடக சட்டமன்றத்தில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து ஜூன் 4 ஆம் தேதி மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. அப்போது ஹாசன் தொகுதியில் போட்டியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா முதற்கட்ட வாக்குப்பதிவு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இறுதி வாக்குகள் எண்ணப்படும் சமயத்தில் அவர் பின்னடைவை சந்தித்து காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார்.
இதனையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் 150 பேரின் சாட்சிகளையும் , பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்களையும் உள்ளடக்கிய 2,144 பக்கங்கள் அடங்கிய 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்தனர்.

அந்த குற்றப்பத்திரிகையில், பிரஜ்வல் ரேவண்ணா பல்வேறு பெண்களைப் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி மீண்டும் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை நிரூபிக்கும் விதமாக அதில் உயிரியல், உடல், அறிவியல், மொபைல், டிஜிட்டல் மற்றும் பிற தொடர்புடைய ஆதாரங்களையும் சிறப்புப் புலனாய்வுக் குழு நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. குறிப்பாக ரேவண்ணாவின் மனைவி பவானி மூலம் விடுதி ஒன்றும் பணியில் சேர்ந்த பெண் பின்னர் ரேவண்ணாவின் வீட்டில் பணி செய்ய அழைக்கப்பட்டுள்ளார்.
பணியில் சேர்ந்த பெண்ணை 2019 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்து வந்துள்ளார் பிரஜ்வல் ரேவண்ணா. 2020 இல் பெங்களூருவில் உள்ள வீட்டில் வைத்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பிரஜ்வல் ரேவண்ணா அதை வீடியோ எடுத்துள்ளார். அப்போது அந்த பெண், தான் இங்கு நடந்ததை வெளியே சொல்லப் போவதாகக் கூறியுள்ளார்.
அதற்கு பிரஜ்வல் ரேவண்ணா, இதை நீ வெளியே சொன்னால் உனது கணவனை சிறையில் தள்ளுவேன், உனக்கு என்ன செய்தேனோ அதையே உனது மகளுக்கும் செய்வேன். எந்த வழக்காக இருந்தாலும் அதை எப்படி மூட வேண்டும் என்று எனக்குத் தெரியும், நான் ஒரு எம்.பி [பாராளுமன்ற உறுப்பினர்] என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று மிரட்டல் விடுத்துள்ளதாக அந்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் அந்த பெண்ணை குறிப்பிட்ட உள்ளாடை [lingerie] அணியவைத்து தான் பலாத்காரம் செய்யும்போது சிரித்த மாதிரி இருக்க வேண்டும் என்று துப்பாக்கி முனையில் இந்த கொடூரங்களை அரங்கேற்றியுள்ளான். இதை வெளியில் சொன்னால் ஒவ்வொரு முறையும் தான் எடுத்த வீடியோ பதிவுகளை வெளியிட்டுவிட்டேன் என்று கூறி தொடர்ச்சியாக பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளான்.
பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை பிரஜ்வல் நிகழ்ச்சி ஒன்றில் பார்த்து முதன்முதலில் தனது கெஸ்ட் ஹவுஸுக்கு வரவழைத்து இந்த கொடூரங்களை செய்துள்ளான் என்று அந்த நிகழ்ச்சியில் பிரஜ்வல் ரேவண்ணாவுடன் கலந்துகொண்ட எம்.எல்.ஏ ஒருவரின் வாக்குமூலமும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.
வழக்கு விசாரணையின் இடையே ஜாமின் கோரி பிரஜ்வல் ரேவண்ணா தாக்கல் செய்த மனுக்களை கர்நாடக உயர்நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவையே உலுக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வழக்கு இன்னமும் நீதிமன்றத்தில் விசாரணையில் தான் உள்ளது. 2025 ஆம் ஆண்டிலாவது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் என்றும் இந்திய மக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.