search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சதீஸ்பாபு"

    • 18 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தினர்.
    • நாற்காலியில் அமர்ந்தபடியே இரவில் தூங்கினார்.

    பெங்களூரு:

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா (64). எம்.எல்.ஏ.வாக உள்ள இவர் மீதும், அவரது மகன் பிரஜ்வால் மீதும் வீட்டு பணிப்பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதற்கிடையே மைசூரு கே.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் தனது தாயை ரேவண்ணா அவரது மனைவி பவானியின் உறவினர் சதீஸ்பாபு ஆகியோர் கடத்தி சென்றதாக புகார் செய்தார். அதன் அடிப்படையில் கே.ஆர்.நகர் போலீசார் ரேவண்ணா, சதீஸ்பாபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் பிரஜ்வால் ரேவண்ணாவுடன் ஒரு வீடியோவில் ஆபாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    எனவே அந்த பெண் பிரஜ்வால் மீது புகார் கொடுக்காமல் இருக்க ரேவண்ணா மற்றும் சதீஸ்பாபு கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து சதீஸ்பாபுவை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க ரேவண்ணா பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட சில மணி நேரத்தில் தேவகவுடா வீட்டில் பதுங்கி இருந்த ரேவண்ணாவை போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர்.

    பின்னர் பெங்களூரு பவுரிங் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்து சென்று உடல் பரிசோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து பெங்களூரு அரண்மனை சாலையில் உள்ள சிறப்பு விசாரணைக்குழு அலுவலகத்துக்கு அவரை அழைத்து சென்று விடிய, விடிய விசாரணை நடத்தினர். சுமார் 18 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    பின்னர் ரேவண்ணா நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். போலீசார் அவரை காவிலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டனர்.

    இதையடுத்து ரேவண்ணாவை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.

    இதையடுத்து ரேவண்ணாவை சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் தங்கள் அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அலுவலகத்தின் தரைதளத்தில் உள்ள ஒரு அறையில் அவரிடம் விசாரணை தொடங்கியது.

    அவரிடம் பாலியல் பலாத்கார புகார்கள் மற்றும் பெண் கடத்தல் தொடர்பாகவும் அவரது மகன் பிரஜ்வால் குறித்தும் போலீசார் விசாரித்தனர். நள்ளிரவு வரை இந்த விசாரணை நடந்தது.

    பின்னர் ரேவண்ணாவை விசாரணைக்குழு அதிகாரிகள் படுத்து ஓய்வெடுக்க சொன்னார்கள். ஆனால் அவர் கீழே படுத்து தூங்க மறுத்துவிட்டார். நாற்காலியில் அமர்ந்தபடியே இரவில் தூங்கினார்.

    காலையில் எழுந்து விசாரணைக்குழு அலுவலகத்திலேயே ரேவண்ணா குளித்தார். தொடர்ந்து காலை உணவும் சாப்பிட்டார். இதையடுத்து மீண்டும் காலை 10 மணி முதல் அவரிடம் விசாரணை தொடங்கியது. எஸ்.ஐ.டி. தலைவர் பி.கே.சிங் மற்றும் பிற அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் அளிக்காத ரேவண்ணா இந்த வழக்கில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றார்.

    அப்போது அதிகாரிகள் சில ஆதாரங்களை முன்வைத்து கேள்விகளை கேட்டனர். அப்போது ரேவண்ணா அமைதியாக இருந்துள்ளார்.

    தொடர்ந்து ரேவண்ணாவை போலீசார் போட்டோ எடுத்தனர். அவரது கை ரேகைகளும் பெறப்பட்டது. முதலில் போட்டோ எடுக்கவும், கை ரேகை பெறவும் ரேவண்ணா எதிர்ப்பு தெரிவித்தார்.

    அப்போது போலீசார் நாங்கள் எங்கள் வேலையை செய்கிறோம், அதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    இதையடுத்து ரேவண்ணா ஒத்துழைத்தார். தொடர்ந்து ரேவண்ணாவிடம் சிறப்பு விசாரணைக்குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே ரேவண்ணாவால் கடத்தப்பட்ட பெண்ணை மீட்ட போலீசார் அவரிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

    பின்னர் அந்த பெண்ணை அவரது மகனுடன் பாதுகாப்பான இடத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    ரேவண்ணாவிடம் விசாரணை முடிவடைந்த பின்பு மீண்டும் 8-ந் தேதி அவரை கோர்ட்டில் போலீசார் அஜர்படுத்த உள்ளனர். விசாரணை நடந்து வரும் அலுவலகத்தை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ×