search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாலுமிகள்"

    • சிறப்பு கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் கப்பலில் இறங்கி அதில் இருந்த இந்திய மாலுமிகள் உள்பட 25 பேரையும் சிறை பிடித்தனர்.
    • கப்பலில் இருந்த கேரளாவை சேர்ந்த ஆன்டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் விடுவிக்கப்பட்டு சொந்த ஊர் அனுப்பி வைக்கப்பட்டார்.

    துபாய்:

    ஐக்கிய அரபு அமீரக கடற்கரை பகுதியில் இருந்து மும்பை நவசேவா துறைமுகத்துக்கு கடந்த மாதம் 12-ந்தேதி எம்.எஸ்.சி. ஏரிஸ் என்று பெயரிடப்பட்ட சரக்கு கப்பல் கண்டெய்னர் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது.

    போர்ச்சுகீசிய கொடியுடன் இஸ்ரேலுடன் தொடர்புடைய இந்த கப்பலில் இந்தியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான், ரஷியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 25 மாலுமிகள் பயணம் செய்தனர். இதில் 3 தமிழர்கள் உள்பட 18 பேர் இந்தியர்கள் ஆவார்கள்.

    இந்த சரக்கு கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தி அருகில் வந்து கொண்டிருந்த போது ஈரானின் புரட்சி படையை சேர்ந்த சிறப்பு கடற்படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் கப்பலில் இறங்கி அதில் இருந்த இந்திய மாலுமிகள் உள்பட 25 பேரையும் சிறை பிடித்தனர். பின்னர் அவர்கள் ஈரான் நாட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஈரான் கடற்படையினரிடம் சிக்கிய இந்திய மாலுமிகளை மீட்க மத்திய அரசு முயற்சியினை மேற்கொண்டது. இதையடுத்து இந்தியர்களை விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    கப்பலில் இருந்த கேரளாவை சேர்ந்த ஆன்டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் விடுவிக்கப்பட்டு சொந்த ஊர் அனுப்பி வைக்கப்பட்டார். கொச்சி விமான நிலையத்துக்கு வந்த அவருக்கு அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இதன் தொடர்ச்சியாக மேலும் இந்திய மாலுமிகள் 5 பேர் நேற்று மாலை ஈரானில் இருந்து சொந்த நாட்டுக்கு திரும்புவதை பந்தர் அப்பாசில் உள்ள இந்திய துணை தூதரகம் உறுதிபடுத்தி உள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் எக்ஸ் வலைதள பக்கத்தில் தகவலை வெளியிட்டு ஈரானுக்கு இந்தியா நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

    இவர்களை தொடர்ந்து மற்ற இந்திய மாலுமிகளும் இன்னும் ஓரிரு நாளில் சொந்த நாட்டுக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

    ×