search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்க்சியம்"

    'அங்காடித் தெரு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக தனது முத்திரையை பதித்தவர் வசந்த பாலன். அந்த படத்திற்காக தேசிய விருது பெற்ற வசந்தபாலன், சமீபத்தில் அர்ஜுன் தாஸை வைத்து இவர் இயக்கிய அநீதி திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது.

    முதலாளித்துவதை தொடர்ந்து தனது படங்களின் மூலம் எதிர்த்து வரும் வசந்தபாலன் இயக்கத்தில் பரத், ஆடுகளம் கிசோர் ஆகியோர் நடிப்பில் 'தலைமைச் செயலகம்' என்ற வெப் சீரிஸ் உருவாகியுள்ளது. தனது படங்களில் தொடர்ந்து அரசியல் பேசி வரும் வசந்தபாலன், முழுக்க முழுக்க அரசியல் சார்ந்து இதை இயக்கியுள்ளதால் இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த தொடர் வரும் மே 17 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

    இந்நிலையில் இந்த வெப் சீரிஸ் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் வசந்த பாலன் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், அரசியல் படங்கள் என்றாலே முதல்வர் கெட்டவர் என்ற கோணத்தில்தான் காட்டப்படுகிறது இதை உடைத்து ஊழல் குற்றம் சுமத்தப்பட்ட ஒரு முதல்வரின் அக சிக்கல்களைப் பேச வேண்டும் என்று நினைத்து இந்த வெப் சீரீஸை இயக்கியுள்ளேன். மக்கள் மீது கொண்டிருக்கும் காதலின் பெயர் தான் நீதி, அந்த நீதியை காப்பாற்றும்போது சில தவறுகள் நடக்கலாம், அதைப்பற்றியே இந்த சீரிஸின் மூலம் பேசியுள்ளேன்.

    மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் பெரிய அளவில் முன்னேறியுள்ளது. தமிழகத்தில் நம்மை 50 ஆண்டுகாலமாக வழி நடத்தி வந்த பெரியாரிய, அம்பேதகரிய, மார்க்சிய கருத்துக்களால் தான் இது சாத்தியமானது. நம் பெயருக்கு பின்னால் சாதி போடாததே ஒரு அரசியல் தான், நீ என்ன சாதி என கேட்காமல் இருப்பதே அரசியல் தான், இதைப் பற்றி விரிவாகப் பேசுவதற்கான சூழலை இந்த வெப் சீரிஸ் உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார்.

    ×