search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீதியுடன் நடந்து கொள்ளுங்கள்"

    • இஸ்லாம் அமைதியை விரும்பும் மார்க்கம்.
    • ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் எவ்வாறு நீதியுடன் நடந்து கொள்ள வேண்டும்.

    இஸ்லாம் அமைதியை விரும்பும் மார்க்கம். உலக மக்களிடையே அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவற்றை வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் மார்க்கம் ஆகும்.

    உலக மக்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் எவ்வாறு நீதியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதையும், அநீதியுடன் நடப்பவர்களுக்கு மறுமை உலகில் காத்திருக்கும் தண்டனைகள் குறித்தும் திருக்குர்ஆனும், நபி மொழிகளும் தெளிவாக எச்சரித்துள்ளன.

    ஒரு முஸ்லிம் பிற மனிதர்களிடம் நீதியாக நடக்க வேண்டும், அநீதியாக நடக்கக் கூடாது, பிறருக்கு உதவும் மனப்பான்மை வேண்டும் என்பதை திருக்குர்ஆனும், நபி மொழிகளும் மனிதர்களுக்கு கற்றுத் தருகின்றன.

    இதையே திருக்குர்ஆன் (5:2) 'இன்னும் நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டாம்' எனக்கூறுகிறது.

    உனக்கு அநீதி இளைத்தவனுக்கு உதவிட வேண்டும் என்று உத்தரவிட்டவர் நபிகள் பெருமான். அவரது நபி மொழி இதோ:

    'உனது சகோதரன், அவன் பாதிக்கப்பட்டவனாக இருந்தாலும், அநீதி இளைத்தவனாக இருந்தாலும் சரியே அவனுக்கு நீ உதவிடு! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே நபித்தோழர்கள் 'அல்லாஹ்வின் தூதரே! பாதிக்கப்பட்டவனுக்கு உதவிபுரிவது சரி! ஆனால், அநீதி இளைத்தவனுக்கு நாங்கள் எப்படி உதவி செய்வது?' என்று கேட்டனர். 'ஆம்! அநீதி புரிந்தவனை அதில் இருந்து தடுப்பதும் அவனுக்கு செய்யப்படும் உதவியாகும்' என நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்' (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)

    பாதிக்கப்பட்டவனுக்கு நீதியை பெற்றுத் தருவது எப்படி உதவியோ, அதுபோன்று பாதிப்பை ஏற்படுத்தியவனை அந்த பாவத்தில் இருந்து நல் வழிப்படுத்துவதும் உதவியே என நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். இதற்கு மாறாக அநீதி இளைப்பவனுக்கு மேலும் அவன் அநீதிக்கு துணை புரிவது, உதவி செய்வது கடும் கண்டனத்திற்குரியது என இஸ்லாம் கூறுகிறது.

    'அநியாயக்காரன் என்று தெரிந்து கொண்ட பிறகும், அவன் அநியாயத்திற்கு எவன் துணை புரிகின்றானோ அவன் இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'. (நபிமொழி)

    இந்த உலக வாழ்க்கையிலே பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் வியாபாரங்களில் அதிக அளவு ஏமாற்றுத்தனமும், அநீதியும் இழைக்கப்படுகிறது. இதை திருக்குர்ஆன் இவ்வாறு எச்சரித்து கண்டிக்கிறது:

    "ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது; (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும்.

    இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்; அவன் தன் இறைவனை (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக் கூடாது;

    இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ (நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்;

    ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களில் இருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்;

    அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது; தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்; இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மிகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்; எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை;

    ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபவனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது; நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதி முறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன். (திருக்குர்ஆன் 2:282).

    மேற்கண்ட திருக்குர்ஆன் வசனம் மூலம் வியாபாரத்திலும், பணம் கொடுக்கல் வாங்கலிலும் நாம் எவ்வாறு நீதியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறியலாம். இதை நமது வாழ்வில் வழிகாட்டியாக எடுத்துக்கொண்டு நீதியுடன் நடந்து இறையருள் பெறுவோம், வாருங்கள்.

    ×