search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருநந்தீஸ்வரர் ஆலயம்"

    • சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான ஆலயம்.
    • ஜெயந்தனை நண்டாக மாறும்படி சாபம் கொடுத்தார்.

    கோவில் தோற்றம்

    திருவள்ளூர் மாவட்டம், மணவூர் கிராமத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வயல்வெளிகளின் அழகிய சூழலில் அமைந்துள்ளது ஆதி காமாட்சி அம்மன் சமேத கற்கடேஸ்வரர் கோவில். இந்தக் கோவில் சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான ஆலயம் என்கிறார்கள்.

    தல வரலாறு

    தேவலோக தலைவனான இந்திரனின் மகன் ஜெயந்தன். இந்திரனின் மகன் என்பதால் இவன் ஆணவத்தில் நடந்து கொண்டான். இதனால் பிறரிடம் வம்பிழுத்து சாபம் பெற்றுக்கொள்வான். அப்படி ஒரு முறை ஜெயந்தன் சென்று கொண்டிருந்த வழியில், அவனுக்கு எதிர் திசையில் அத்ரி முனிவர் வந்துகொண்டிருந்தார்.

    அப்போது அத்ரி முனிவருக்கு, ஜெயந்தன் முறையாக வணக்கம் தெரிவிக்காதது மட்டுமின்றி, அவரது நடையைப் பார்த்து 'நண்டு ஊர்ந்து செல்வதுபோல உள்ளது' என்று கிண்டல் செய்தான். இதனால் கோபம் கொண்ட அத்ரி முனிவர், ஜெயந்தனை நண்டாக மாறும்படி சாபம் கொடுத்தார்.

    இதனால் பதறிப்போன ஜெயந்தன், 'தன் பிழையை பொறுத்தருள வேண்டும்' என்று அத்ரி முனிவரின் காலில் விழுந்து வேண்டினான். இரக்கம் கொண்ட அத்ரி முனிவர், "மணவூர் என்ற இடத்தில் உள்ள திருநந்தீஸ்வரர் ஆலயத்தில் அருளும் இறைவனையும், இறைவியையும் வழிபட்டு வா. உன்னுடைய சாபம் நீங்கும்" என்று கூறி அங்கிருந்து அகன்றார்.

    மறுநொடியே ஜெயந்தன் நண்டாக மாறிவிட்டான். பின்னர் அவன், மணவூர் வந்து திருநந்தீஸ்வரரை வழிபட்டு, ஊரின் எல்லையில் சிவபெருமானை நினைத்து தியானம் செய்தான். அப்போது சிவபெருமான், பூமியை பிளந்து கொண்டு பிரகாசமான லிங்கத் திருமேனியுடன் அவனுக்கு காட்சியளித்தார்.

    சுயம்புவாக தோன்றிய இந்த இறைவனை அங்கேயே பிரதிஷ்டை செய்த ஜெயந்தன், அந்த சிவலிங்கத்தை அபிஷேகம் செய்வதற்காக அங்கே ஒரு திருக்குளத்தையும் உருவாக்கினான்.

    பின்னர் நண்டு வடிவில் நாள்தோறும் அந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் அலங்காரம் செய்து பூஜித்து வந்தான். தொடர் வழிபாட்டின் காரணமாக, சிவபெருமானின் அருளால் ஜெயந்தன் மீண்டும் தன்னுடைய சுய உருவைப் பெற்றான்.

    நண்டு வடிவில் ஜெயந்தன் இறைவனை வழிபட்டதால், இங்கு உள்ள மூலவர் 'கற்கடேஸ்வரர்' என்று திருப்பெயர் கொண்டு அழைக்கப்படுகிறார். கற்கடேஸ்வரருக்கு வலது புறம் பிள்ளையாரும், இடது புறம் முருகப்பெருமானும் அருள்பாலித்து வருகின்றனர்.

    கற்கடேஸ்வரருக்கு இடது புறம் ஆதி காமாட்சி அம்மன் சன்னிதி உள்ளது. இந்த காமாட்சி அம்மன், காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மனுக்கு முன்னரே தோன்றியவர் என்பதால் காஞ்சி மகா பெரியவர் இங்குள்ள காமாட்சி அம்மனுக்கு 'ஆதி காமாட்சி' என்று பெயர் சூட்டியதாக கூறப்படுகிறது.

    இத்தலம் கடக ராசிக்காரர்களுக்கு பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. மேலும் புற்றுநோய் தாக்கத்தை குறைக்கும் தெய்வமாகவும் இத்தல இறைவன் கற்கடேஸ்வரர் திகழ்கிறார்.

    சோமவாரம் என்று அழைக்கப்படும் திங்கட்கிழமைகளில், தொடர்ச்சியாக 9 வாரங்கள் இத்தலம் வந்து, இத்தல இறைவனுக்கு வெல்லம் வைத்து வழிபாடு செய்தால், புற்றுநோய் தாக்கம் குறையும் என்பது பக்தர் களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது. இது தவிர இவ்வாலயம் ராகு - கேது பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.

    ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறும் இந்த ஆலயத்தில், துவார கணபதி, பாலசுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், நந்தி, பைரவர், பலிபீடம் ஆகியவை உண்ளன. இக்கோவிலில் பிரதோஷ வழிபாடு, அன்னாபிஷேகம், சிவராத்திரி, தை மாதத்தில் 108 சங்காபிஷேகம் போன்ற நிகழ்வுகள் விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை திறந்து வைக்கப்பட்டிருக்கும். கும்பகோணம் அருகே திருந்து தேவன்குடியில் பிரசித்தி பெற்ற கற்கடேஸ்வரர் கோவில் உள்ளது. அதே போல் நண்டு வழிபட்ட கற்கடேஸ்வரர் ஆலயம் மணவூரில் உள்ள இந்த ஆலயம் மட்டுமே என்கிறார்கள்.

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம், திருத்தணி ரெயில் மார்க்கமாக செல்கையில் மணவூர் ரெயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து சற்று தொலைவில் இயற்கை சூழலுடன் வயல் அருகே வீற்றிருக்கும் இந்த கற்கடேஸ்வரரை தரிசனம் செய்யலாம்.

    ×